நந்தனார் என்பவர் சோழ மண்டல கொள்ளிட நதியின் பக்கத்தில் உள்ள மேற்காநாட்டில், ஆதனூரில் வாழ்ந்து வந்தார். புலையர் குலத்தில் பிறந்த இவர், பரமசிவனுடைய திருவடிகளை மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தவர். அவ்வூரிலே தமக்காக விடப்பட்டிருக்கின்ற நிலத்தில் உழைத்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். தனது வருமானத்தில் வரும் பொருளைக் கொண்டு சிவாலயங்கள் தோறும், பேரிகை முதலாகிய ஒருமுகக் கருவிகளுக்கும் மத்தளம் முதலான இருமுகக் கருவிகளுக்கும் தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்து வந்தார். ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுவார்.
ஒரு நாள் அவர் திருப்புன்கூரில் போய்ச் சுவாமி தரிசனம் செய்து திருப்பணி செய்வதற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில் வாயிலிலே நின்று கொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிட வேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடப தேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்தத் தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அவர் இப்படியே பல தலங்களுக்கும் சென்ற இறைவனை வணங்கித் திருப்பணி செய்து வந்தார்.
ஒரு நாள், சிதம்பரம் தலத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினால் அன்றிரவு முழுதும் தூங்காமல் விடிந்தபின், ‘நான் சிதம்பரம் தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே’ என்று தூக்கம் அடைந்தார். ‘இதுவும் சுவாமியின் அருள்தான்’ என்று சொல்லிப் போகாது தவிர்த்தார். அதன் பின்னும் ஆசை வளர்ந்து வந்ததால், ‘நாளைக்குப் போவேன்’ என்றார். இப்படியே, ‘நாளைக்குப் போவேன்… நாளைக்குப் போவேன்’ என்று நாட்களைக் கழித்தார். அதனால் அவருக்கு, ‘திருநாளைப்போவார்’ என்னும் பெயர் உண்டாயிற்று. பின்னாளில் சிவபெருமானின் அருளால் தனது இழி பிறப்பு, நெருப்பால் நீங்கப்பெற்று பிராமண முனியாக மாறி, சிதம்பரம் தில்லை நடராஜரை வணங்கினார்.