

சக்தியின் சொரூபமான லலிதாம்பிகை தோன்றிய புண்ணிய தினம் லலிதா பஞ்சமி என்கின்றது புராண வரலாறுகள். அம்பாளுக்கு பஞ்சமி திதியில் கடைப்பிடிக்கும் விரதம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.
பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் ஆகியவை இயற்கையின் அடிப்படையில் தெய்வீக வடிவங்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களையும் தன்னுள் அடக்கிய மகா சக்தியாக இருக்கும் லலிதா தேவி இந்த லலிதா பஞ்சமி விரதத்தை அனுஷ்டிப்போருக்கு இந்த புவியின் அத்தனை சுகங்களையும் கண்டிப்பாக அருள்வாள் என்கிறது ஐதீகங்கள்.
லலிதாம்பிகையின் அவதாரம் சிறப்பானது. சிவ சக்தியின் திருமணம் நிகழ காரணமாக இருந்த மன்மதன் மலர் அம்பு வீசி தியானத்தில் இருந்து சிவனின் கவனத்தைக் கலைக்கிறான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து அவனை எரித்து சாம்பாலாக்குகிறார்.
அந்த சாம்பலினின்று தோன்றியவனான பண்டாசுரன் எனும் அசுரன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பல வரங்களை பெறுகிறான். வரத்தினால் பலம் பெற்ற பண்டாசுரன் முனிவர்களை துன்புறுத்தி, யாகங்களை கலைத்து தீமைகளை செய்கிறான். தேவர்களை துரத்திய அவனின் அட்டூழியங்கள் எல்லை மீற தேவேந்திரன் பண்டாசுரனை அழிக்கும் நோக்கத்துடன் நாரதரின் யோசனையை ஏற்று அன்னை பராசக்தியை நோக்கி யாகம் செய்கிறான்.
யாகத்தை ஏற்ற ஸ்ரீ சக்ர ராஜேஸ்வரி திரு மூர்த்திகளின் சக்தியையும் ஏற்று மகா சக்தியாக லலிதாம்பிகையாக உருவெடுக்கிறாள். பராசக்தி அன்னை லலிதா பரமேஸ்வரி ஆக அவதரித்த நாளே லலிதா பஞ்சமியானது.
பிரம்மாவின் வேண்டுகோளின்படி தேவி காமேஸ்வரனாகிய சிவனுடன் இணைந்து காமேஸ்வரியாக பண்டாசுரனை அழிக்க அவனுடன் யுத்தம் செய்கிறாள். நான்கு நாட்கள் நடந்த யுத்தத்தின் முடிவில் பண்டாசுரன் அழிக்கப்படுகிறான். இப்படி செல்கிறது லலிதா தேவியின் அவதார புராணம்.
இந்த மகா சக்தியை லட்சுமி தேவியும் சரஸ்வதி தேவியும் சாமரம் வீசி பூஜிக்கிறார்கள். இந்த அம்பிகை மஹா ஷோடஷியாக பிரம்மா விஷ்ணு சதாசிவம் ஆகியவர்களின் பூஜைக்குரியவளாக தனது கணவர் காமேஸ்வரனின் மடியில் அமர்ந்து பூஜையை ஏற்றுக்கொள்கிறாள்.
தசமகா வித்யாக்களில் ஒருவரான சிறப்பு மிக்க லலிதா திரிபுரசுந்தரி, லலிதா கௌரி, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகா, காமாட்சி எனவும் பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் அருளாட்சி புரிகிறாள்.
உபாங் லலிதா விரதம் என்றழைக்கப்படும் லலிதா பஞ்சமி விரதம் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் லலிதா சகஸ்ரநாம், லலிதோபாக்யான் போன்ற பூஜை முறைகளுடன் சண்டிதேவிக்கு இணையாக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஐந்தாம் நாள் வரும் லலிதா பஞ்சமி நாளில் விரதம் இருந்து அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி வணங்கி வழிபட்டால் தைரியமும் வீரமும் செல்வமும் பொறுமையும் ஞானமும் என எல்லா வளங்களையும் பெற்று மகிழலாம்.