மர்மக் காடாக விளங்கும் நிதிவனம் ராதாகிருஷ்ணர் கோயில்!

Nidhivana Radha Krishna Temple is a mysterious forest
Nidhivana Radha Krishna Temple is a mysterious foresthttps://wallpapers.com

‘நிதிவனம்’ என்றால் புனிதமான காடு என்று பொருள். இது பிருந்தாவனத்தில் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. நிதிவனம் உத்திரபிரதேசம், மதுராவில் உள்ளது. இன்றும் இரவில் ஸ்ரீகிருஷ்ணர் நிதிவனத்திற்கு வந்து ராதா மற்றும் கோபியருடன் நடனம் ஆடுவதாகக் கூறப்படுகிறது. காட்டின் புனிதத்தைப் பாதுகாக்க இரவில் தடுப்புகள் போடப்பட்டு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிவனத்தில் நிறைய துளசிகள் இருப்பதைக் காணலாம். இவை இரண்டு இரண்டாகவே ஜோடியாகக் காணப்படுவது ஆச்சர்யம். அது மட்டுமில்லாமல், அதன் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பதையும் காணலாம். நிதிவனம் காடு இன்று வரை மர்மமானதாகவே கருதப்படுகிறது. இங்கே இருக்கும் துளசி செடிகள் வைணவர்களால் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.

இந்தக் காட்டில் உள்ள நிலங்கள் வறண்டு இருந்தாலும், இங்கு  இருக்கும் துளசி செடிகள் பச்சைப்பசேலென்றே இருப்பது அதிசயமாக இருக்கிறது என்று மக்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள துளசி  செடிகள் எல்லாம் வித்தியாசமான முறையில் வளைந்தும் நெளிந்தும் காணப்படுவதற்கான காரணம். அவை எல்லாம் கோபியர்கள் என்றும் பகலில் மீண்டும் செடியாக உருமாறுவதால் செடிகளின் கிளைகள் தினமும் மாறுபட்டு காணப்படும் என்றும் கூறுகின்றனர்.

ரங் மஹால் என்றால் வண்ணமயமான அரண்மனை என்று பொருள். தினமும் இரவில் ஆடி களைத்த பிறகு ராதாவும் ஸ்ரீகிருஷ்ணரும் இவ்விடத்தில் வந்து வாசம் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் சந்தனத்தால் ஆன படுக்கை இருக்கிறது. தினமும் நடை சாத்துவதற்கு முன்பு கோயில் பூசாரி நகைகள், இனிப்பு வகை, தண்ணீர், புடவை, வளையல், துளசி மற்றும் வேப்பங்குச்சிகளை வைத்து விட்டுச் செல்வாராம். மாலை ஆரத்தி காட்டி கோயிலை பூட்டி விட்டால் அடுத்த நாள் காலையில்தான் கோயில் திறக்கப்படும். ஆனால், காலையில் வந்து பார்க்கும் பொழுது படுக்கையில் யாரோ உறங்கியது போலவும், துணிகளை பயன்படுத்தியது போலவும் இனிப்புகளை உண்டது போலவும் எல்லாம் கலைந்து கிடக்கும் என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தாய்க்கு மட்டும் திதி கொடுக்கும் அபூர்வ திருத்தலம்!
Nidhivana Radha Krishna Temple is a mysterious forest

நடை சாத்தப்பட்ட பிறகு கோயிலுக்குள் யாருக்குமே அனுமதி கிடையாது. ஏனெனில், இரவில் ராதாவும் கிருஷ்ணரும் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று நம்பப்படுகிறது. யாரேனும் கோயிலில் நடப்பதை  பார்க்க வேண்டும் என்று முயற்சித்தால் அவர்களுக்கு புத்தி பேதலித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. கோயிலை ஒட்டி இருக்கும் வீடுகளில் இருக்கும் ஜன்னல்களையும் ஆரத்தி காட்டிய பிறகு மூடி விடுவார்களாம். அவர்கள் சொல்வது என்னவென்றால் இரவில் நிதி வனத்திலிருந்து கொலுசு சத்தம் கேட்பதாகவும் கூறுகிறார்கள்.

சுவாமி ஹரிதாஸின் பக்தியை மெச்சி அவர் முன்பு ராதாவும் ஸ்ரீகிருஷ்ணரும் தோன்றினர் என்றும், பின்பு பங்கே பிஹாரி சிலையை அங்கே உருவாக்கி ஹாரிதாஸுடன் கோயில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாங்கே பிஹாரி சிலை நிதி வனத்தில் இருந்து மாற்றப்பட்டு தற்போது அதற்கென தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் தினமும் மாலை ஐந்து மூடப்பட்டு விடும். எனவே, இக்கோயிலின் அதிசயத்தையும், ராதா கிருஷ்ணரின் அழகையும் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com