எத்தனையோ விநாயகர் கோயில்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு அடர்த்தியான காட்டுக்கு நடுவில் மலையின் உச்சியிலே, தனியாக அமைந்திருக்கும் விநாயகரை பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும்தானே இருக்கும். ஆம்… அப்படியொரு விநாயகர் கோயில் சத்தீஷ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில், டோல்கால் என்னும் மலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.
பல காலங்களாக யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த இந்த விநாயகர் கோயிலை 2012ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். இங்கிருக்கும் விநாயகர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் மக்களின் கூற்றுப்படி, இந்த மலையிலே பரசுராமருக்கும் விநாயகருக்கும் பெரிய சண்டையே நடந்ததாகக் கூறுகிறார்கள். அந்த சண்டையில் பரசுராமர் அவருடைய கோடரியை வைத்து விநாயகரை தாக்கியிருக்கிறார். அதனால்தான் அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிரமத்தின் பெயர் பர்சாபால் என்று அழைக்கப்படுகிறதாம். ‘பர்சா’ என்றால் கோடரி என்று பொருள். அங்கு நடந்த அந்தச் சண்டையில் யார் இறுதியில் வெற்றி பெற்றது என்பது மர்மமாகவே உள்ளது.
விநாயகருக்கும், பரசுராமருக்கும் நடந்த போரின் நினைவாக நாகவன்சி குலத்தைச் சேர்ந்த சிந்தாக் என்னும் அரசன் 11ம் நூற்றாண்டில் மலை உச்சியில் ஒரு விநாயகர் சிலையை நிறுவினார். இந்த விநாயகர் சிலை கருங்கல் பாறையால் ஆனதாகும். மூன்றடி உயரமும் 500 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலை பார்ப்பதற்கு ‘டோலக்’ என்னும் இசைக்கருவியை போலவே செதுக்கப்பட்டுள்ளது. அதனாலே அந்த மலைக்கும் டோல்கால் என்ற பெயர் வந்தது.
இங்கிருக்கும் விநாயகரை ‘ஏகதந்தா’ என்று அழைப்பார்கள். விநாயகரின் ஒரு கையில் கோடரியும், இன்னொரு கையில் உடைந்த தந்தமும் இருக்கிறது. பரசுராமர் கோடரியால் விநாயகரை தாக்கியபோது அவருடைய தந்தம் ஒன்று உடைந்து விட்டது. அதனாலேயே அவருக்கு ஏகதந்தா என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் உட்கார்ந்திருப்பது போன்றிருக்கும் சிலையை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கே சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ஜாக்தல்பூரிலிருந்து மலையேற்றம் செய்ய வருபவர்கள் 2 மணி நேரத்தில் பர்சாபால் கிராமத்தை அடைந்து விடலாம். டோல்கால் விநாயகர் மலையை ஏறுவதற்கு இதுவே அடிவாரமாகக் கருதப்படுகிறது. இம்மலையை ஏறி முடிப்பதற்கு 16 மணி நேரம் ஆகும். மலையேற்றம் செய்யப் போகும் முன்பு, அம்மலையை பற்றி நன்றாக தெரிந்த வழிகாட்டி ஒருவரை கூட்டிச் செல்வது சிறந்ததாகும். எனினும், மலையின் உச்சியில் பார்க்கக்கூடிய காட்சிகளை ஒப்பிடுகையில் மலையேற்றம் செய்த கடினமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றுமளவிற்கு இயற்கை அழகு கொஞ்சுவதாக இருக்கும். மலைமேல் இருக்கும் டோல்கால் விநாயகரை தரிசிக்க எந்த நேரம் வேண்டுமானாலும் செல்லலாம். முக்கியமாக, விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் நிச்சயமாக மலையேற்றம் செய்பவர்களுக்கும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, நீங்களும் ஒருமுறை சென்று மலைமேல் இருக்கும் விநாயகரை தரிசித்துவிட்டு வரலாமே!