வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சுயம்பு மூர்த்த கோலத்தில் தரிசனம் தரும் ஈசன்!

Sri Padampakkanathar - Sri vadivudaiyamman
Sri Padampakkanathar - Sri vadivudaiyamman
Published on

சென்னை, திருவொற்றியூரில் உள்ளதுபாடல் பெற்ற தலமான ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை சுவாமி அணிந்துள்ள கவசத்தை அகற்றி சுயம்புலிங்க தரிசனம் நடைபெறும். ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டுமே
ஸ்ரீ ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாத்தி சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆரம்பித்து மூன்று நாட்கள் (இந்த வருடம் நவம்பர் 26 முதல் 28 தேதி வரை) சுயம்பு லிங்கத்தை கண் குளிர காணலாம்.

ஈசனின் திருநாமம், புற்றிடம் கொண்டார், தியாகேசர், படம்பக்க நாதர், ஆதிபுரீஸ்வரர் எனவும், அம்பிகையின் பெயர் திரிபுரசுந்தரி, வடிவுடையாம்பிகை என்றும் பெயர் கொண்டு அருள்புரியும் இத்தலத்தின் தல விருட்சம் மகிழ மரம், அத்திமரம். இங்கு காளியின் வடிவாக வட்டப்பாறை அம்மன் சன்னிதியும் உள்ளது. இந்த அம்மன் ஒரு காலத்தில் மிகவும் உக்கிரத்துடன் இருந்ததாகவும் ஆதிசங்கரர் இக்கோயில் அம்பாளின் உக்கிரத்தை தணித்து சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பு இனித்த இடம் இது. பட்டினத்தார் முக்தி அடைந்த இடம் எனவும் சிறப்பு பெற்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் அம்மையப்பர் நேரடியாகக் காட்சி கொடுத்து திருமணம் செய்து வைத்த திருத்தலம். வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியாக காட்சி தந்து அருள்புரிந்த தலமும் இதுதான். நூற்றுக்கணக்கான சித்தர்களின் ஜீவ சமாதிக்கான முக்கிய தலம் என பல  சிறப்புகளைக் கொண்ட இக்கோவில், மாட கோயில்களில் ஒரு வகையான தூங்கானை மாடக்கோயிலாக விளங்குகிறது.

‘தூங்கானை மாடம்’ என்றால்  மாடக்கோயிலின் விமானம் படுத்திருக்கும் யானையின் பின்புறத்தைப் போல இருக்கும் என்பதால் இப்பெயர். இவ்வகையான கோயில்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதற்கான சான்றுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பாபாவின் முன்பு தோற்றுப்போன கல்வி அறிவு!
Sri Padampakkanathar - Sri vadivudaiyamman

ஒரு சமயம், பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் ஈசனிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகத்தின் பலனாய் ஈசன் தோன்றி பிரளயம் நிகழாமல் தடுத்தார். எனவே, இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்ததால் அதாவது விலகச் செய்ததால், ‘திருவொற்றியூர்’ என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் தியாகராஜர் என்னும் பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனம் ஆடுவது சிறப்பாகும். கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இக்குளத்து நீரை தலையில் தெளித்துக் கொண்டால் பாவங்கள் நீங்கிவிடும் எனவும், இத்தலம் பாவங்களைத் தீர்க்கும் தலம் எனவும் போற்றப்படுகிறது.

27 நட்சத்திரங்கள் இங்கு ஈசனை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன. நந்தி தேவருக்காக ஈசன் பத்ம தாண்டவம் ஆடிய தலம் இது. இவ்வளவு சிறப்புகள் மிக்க இக்கோயிலைச் சென்று தரிசிப்பது வாழ்வில் பெரிய பாக்கியமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com