திருப்புடைமருதூர் பொருநை ஆற்றங்கரைக்கு சற்று அருகில் அமைந்துள்ளது அருள்மிகு நாறும்பூநாதர் சுவாமி திருக்கோயில். ஒரு சமயம் தனது படை பரிவாரங்களோடு இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த மன்னன் ஒருவன், நீண்ட நேரம் அலைந்தும் ஒரு விலங்கும் அகப்படாத நிலையில், மருத மரங்கள் நிறைந்திருந்த வனத்துக்குள் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் அழகிய புள்ளிமான் ஒன்று மின்னல் போல் துள்ளி குதித்து ஓடி ஒளிந்தது. அதனைப் பிடிக்க எண்ணிய மன்னன் தனது வில்லிலிருந்து கூரான அம்பை குறி பார்த்து எய்தான். அம்பால் தாக்கப்பட்ட மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே நின்று சென்று மாயமாய் மறைந்து போனது. இதனால் மன்னனுக்கு தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அருகே கிடந்த கோடரியால் மருத மரத்தை வெட்டினான். அந்த வேளையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப் பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் லிங்க வடிவில் வெளிப்பட்டான்.
இந்த அதிசயக் காட்சியை கண்ட மன்னன், பொங்கி பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கினான். இறைவன் தன்னை ஆட்கொண்டு அந்த மருத வனத்தில் வெளிப்பட காரணமான பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் கட்ட மனதில் உறுதி கொண்டு அங்கே ஒரு கோயிலைக் கட்டினான்.
திருப்புடைமருதூர் கோயில் கருவறையில் நாறும்பூநாத சுவாமி பீடத்திலிருந்து சற்று ஒருக்களித்து இடப்பக்கம் தலை சாய்த்து இருக்கிறார். அது உண்மையிலேயே பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சித்தர் வேண்டிய ஒன்றாகும். கருவூர் சித்தர் நாறும்பூநாதரை தரிசிக்க தாமிரபரணியின் அக்கரையில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த நேரம் ஆற்றிலே பெரும்வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. எனவே, கரையில் நின்றவாறு, “நாறும்பூநாதா உன்னை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். தாமிரபரணியில் வெள்ளம் புரண்டோடுகிறது. இக்கரையில் இருக்கிறேன். உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?” என்று உரக்கக் குரல் கொடுத்து நாறும்பூ நாதரை அழைத்தார்.
பக்தனின் குரலுக்கு செவிசாய்க்கும் நாறும்பூநாதர் தனது தலையை சிறிது திருப்பி, ‘உனது விருப்பப்படி என்ன தரிசிக்க வருவதற்கு சிரமப்பட வேண்டாம். பொருநையில் இறங்கி உள்ளே நடந்த வர, எனது திருமுக தரிசனம் கிடைக்கும்’ என்று அசரீரியாக ஒலித்தார். அவ்வாறே அவரும் செய்தார். அன்று முதல் கருவூராருக்காக சாய்ந்த தலை நிமிராமல் வரும் பக்தர்களுக்காக மக்கள் குறையை தலைசாய்த்து கேட்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து தரும் வள்ளலாக இறைவன் திகழ்கிறார்.
முதலாம் உள்பிராகாரத்தில் அருள்மிகு நாறும்பூநாதர் சன்னிதியும் வலப்பக்கமாக அருள்மிகு கோமதி அம்பாள் சன்னிதியும் உள்ளன. சூரியன் வழிபடும் தலமாகவும் இது அமைந்துள்ளது. மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தீராத நோய் உள்ளவர்கள், பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று விரும்புபவர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் படிப்பாயசம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். தாங்களும் அந்தப் படிப்பாயசத்தை உண்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீக்கம், புத்திர தோஷ நீக்கம், தீராத பிணிகள் நீங்கவும், குடும்பத்தில் செல்வம் பெருகவும், கல்வி சிறக்கவும் இங்கு வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள்.
சுவாமிக்கு அருகிலேயே கோமதி அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மேலும், தினமும் காலை 7 மணிக்கு நெய்வேத்தியமானவுடன் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று பாயசத்தின் ஒரு பகுதியை தாமிரபரணி ஆற்றுக்கு சமர்ப்பித்து விட்டு வரும் அற்புத நிகழ்வும் நடைபெறும் தலமாகும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோயில்.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் திருநெல்வேலிக்கு மேற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரவநல்லூருக்கு வடமேற்கில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பொருநை ஆற்றங்கரையில் உள்ளது திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோயில்.