விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செண்பகத் தோப்பு வனப் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் இந்த வனப்பகுதியில் கொட்டும் மீன் வெட்டி அருவியை கடந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றால் காட்டழகர் கோயிலை சென்றடையலாம். அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைந்துள்ள இந்த காட்டழகர் கோயிலின் பின்புறம் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் முகடுகள், பள்ளிகொண்ட பெருமாள் வீற்றிருப்பதைப் போல பிரதிபலிப்பதை காணலாம்.
இந்த மலை பெருமாள் போன்று காட்சியளிப்பதால் மக்கள் அதனை, ‘பெருமாள் மலை’ என்று அழைக்கின்றனர். ஆண்டாள் கோயிலோடு சேர்ந்த இந்த காட்டழகர் கோயிலில் மூலவராக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். கோயிலின் பின்புறம் உள்ள மலை பெருமாளை போன்று இருப்பதால் மக்கள் இதனை அதிசயமாகப் பார்த்து வணங்குகின்றனர்.
சுந்தரராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் இருநூற்றி நாற்பத்தேழு படிக்கட்டுகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். இந்த இருநூற்றி நாற்பத்தேழு படிக்கட்டுகள் என்பது தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிக்கட்டுகள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர், சவுந்தரவல்லி மற்றும் சுந்தரவல்லி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
இருநூற்றி நாற்பத்தேழு படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் இரும்பு மற்றும் கந்தகச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி விட்டு தமிழ் எழுத்துக்களுக்கு பெருமை சேர்க்கும் படிக்கட்டுகளில், ‘கோவிந்தா கோபாலா’ எனக் கூறிகொண்டே மலை ஏறி தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மழை பெய்து இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் பெருகினால் அழகருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பக்தர்கள் படிக்கட்டுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பொதுவாக, இந்த படி பூஜை மார்கழி மாதம்தான் நடைபெறுகிறது.
தொன்று தொட்ட காலத்தில் இருந்தே இயற்கையை வணங்குவது என்பது நமது மரப்பாக இருந்து வருகிறது. இங்கு இயற்கை கடவுளை பிரதிபலிக்கும் வகையில் அமைத்திருப்பதுதான் ஆச்சரியம். இந்த அதிசய மலை உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதிக்கு நாமெல்லாம் செல்ல முடியாது. வனத்துறை இங்கு செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வனத்திற்கு செல்ல அனுமதி உண்டு. மேலும், அடர்ந்த வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் தனியாக செல்வதைத் தவிர்த்து குழுவாகச் செல்லலாம்.