முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் இடம்பெற்றுள்ள கோவில் எது தெரியுமா?

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் இடம்பெற்றுள்ள கோவில் எது தெரியுமா?
Published on

கடையேழு வள்ளல்களில் ஒருவர்தான் பாரி மன்னன். இவர் பரம்பு மலையையும் அதனைச் சுற்றியுள்ள 300 கிராமங்களையும் ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் ஆவார். கடையேழு வள்ளல்களில் ஒருவராக கூறப்படும் பாரி முல்லை கொடி படர்வதற்காக தன்னுடைய தேரை கொடையாக கொடுத்தவர். மேலும் பாரியின் நாட்டில் கவி பாடும் புலவர்கள் வறுமையின்றி மிகவும் வளமையுடன் வாழ்ந்தனர், அந்த அளவுக்கு அவர் புலவர்களை ஆதரித்து வந்தார். இத்தகைய கொடை தன்மையின் காரணமாக கடையேழு வள்ளல்களில் ஒருவராக சிறப்பு பெற்றிருக்கும் பாரிக்கு சிற்பம் அமைந்துள்ள கோவிலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில். இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலின் நுழைவு வாயிலில் பாரியின் அவை புலவரான கபிலர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றும் கல்வெட்டாக வடிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள கொடுங்குன்றநாதர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வாழ்க்கையின் மூன்று அம்சங்களையும் முன்னிறுத்தி விளக்கும் விதமாக இங்கு பாதாளம், பூலோகம், மேலோகம் என மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது.

Mullaikku ther kodutha pari
Mullaikku ther kodutha pari

மேலும் இக்கோவிலின் சன்னதியின் முன்புற மேற்சுவரில் கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணத்தை காணச் சென்ற 33 கோடி தேவர்களின் உருவங்களும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மலையின் அடியில் பாதாள சிவன் கோயிலும், மலையின் நடுவில் பூலோக சிவன் கோயிலும், மலையின் மேல் கைலாய சிவன் கோயிலும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. பாதாள சிவன் கோயில் பிரம்மாண்டமான சுற்றுப்புற பிரகாரத்துடனும் பிரம்மாண்டமான தூண்களுடனும் அமைந்துள்ளது. இங்கு திருக்கொடுங்குன்றநாதரும் குயிலமுதநாயகியும் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு முறை இங்கு நடத்தப்படும் வழிபாடு பாதாளம், பூலோகம், கைலாயம் என்ற வரிசையிலேயே நடத்தப்படுகிறது. பாரி மன்னன் ஆட்சி செய்த இந்த பரம்பு மலை சிவன் கோயில் மிகவும் அற்புதமான இயற்கை எழில் சூழ அமைந்திருப்பதோடு பல்வேறு மூலிகைகளையும் கொண்டுள்ளது.

பூலோக கோவிலை தரிசனம் செய்துவிட்டு படி வெளியேறினால் ராஜகோபுரம், நுழைவு வாயிலுடன் தங்க நிறத்திலான வாசல் கதவுகளுடன் கம்பீரமாக பூலோக சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம், பிரம்மாண்டமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால் வடுகபைரவர் என்ற பெயரில் பைரவருக்கென்று தனி சன்னதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிவனும் பார்வதியும் காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதற்குப் பக்கத்தில் நந்தி மண்டபமும் அதில் நந்தி தேவர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் எப்பொழுதும் வழிபடும் போது மேலே கைலாயத்தை பார்த்துவிட்டு அதற்கு பிறகு பூலோகம் வந்து அதன் பின் பாதாள லிங்கத்தை வழிபடுவது வழக்கம்.

பூலோகத்தை பார்த்த பின்பு மேலே சென்றால் கம்பீரமாக ராஜகோபுரத்துடன் கைலாய சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கே கஜலட்சுமி, விநாயகர் போன்றவரின் சிலைகள் பாறைகளை வடித்து மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அமைந்துள்ள சிவபெருமான் சிலையும் பாறைகளை குடைந்து கட்டப்பட்டுள்ளதால் இதுவும் ஒரு குடைவரை கோவில் என்றே சொல்லலாம். மங்கை பாதகர் மற்றும் தேனம்மை என்ற பெயரில் இங்கு சிவனும் பார்வதியும் அருள்பாலிக்கின்றனர். மேலும் இங்கு சிவனும் பார்வதியும் புடைப்பு சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளனர். தேனம்மை என்ற பெயருக்கு ஏற்ப இக்கோவிலில் மேற்புற சுவர்களில் ஆங்காங்கே தேன் கூடுகள் கண்களுக்கு தென்படுவதை பார்க்கலாம். மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள தேனாடி தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

கைலாய மலையை தரிசித்த பின் அதற்கு மேல் கம்பீரமாக பரம்பு மலை காட்சியளிக்கிறது கைலாய மலையை கடந்து மேலே சென்றால் அங்கு நிறைய கோவில்களும் அதோடு சேர்ந்து ஒரு தர்காவும் இருக்கிறது. மேலும் இதோடு சேர்ந்து சுனை நீர் ஊற்றுகளும், ஆசிரமம் ஒன்றும் இருக்கிறது. இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரையிலான காலகட்டங்களில் சிவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதாக சொல்லப்படுகிறது. எனவே அன்றைய காலகட்டங்களில் இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

பாரி மன்னன் மலையும் மலை சார்ந்த இடத்தையும் ஆட்சி செய்து வந்ததால் இக்கோவிலில் தேன், திணை மாவு, பச்சரிசி மாவு போன்றவற்றால் செய்த பொருள்களையே சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பரம்புமலை சிவன் கோயில். மேலும் இங்கு ஒலிக்கப்படும் மணி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் சிறப்புடையதாகவும் சொல்லப்படுகிறது. தேவார பாடல் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பரம்பு மலை சிவன் கோயில் இன்றளவும் பாரி மன்னனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது! வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சென்று தரிசித்து சிவபெருமானின் அருள் பெற்று வாருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com