

திருச்சிக்கு 15 கி.மீ. தொலைவில்உள்ளது திருப்பராய்த்துறை. முக்கொம்பிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது.
பாராய் மரம்
கோவிலின் வெளிச்சுற்று உயர்ந்த மதில் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறம் மலர்செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் சென்றால் கன்னி மூலை கணபதியை தரிசிக்கலாம். நடுவில் மிகப் பழங்காலத்து பாராய் மரம் சுற்றிலும் கம்பி வேலி இட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க இலைகளுடன் உயர்ந்து இருக்கிறது பாராய் மரம்.
இதுவே இக்கோவிலின் தலவிருட்சமாகும். இந்த மரம் எந்த கோவிலிலும் இல்லை. இதன் இலை, பட்டை, வேர் முழுவதும் மருத்துவ குணம் உடையது. இதை தாருகாவனம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் ஆவார்.
இக்கோவில் அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள தூணில் ஊர்த்துவதாண்டவத்தில் சிவபெருமானின் புடைச் சிற்பம் உள்ளது. இதற்கு எதிரே உள்ள இன்னொரு தூண் காளி நடனமாடுவதை காட்டுகிறது. பல்வேறு ராசிகளைக் காட்டும் ராசிச் சக்கரமும் உள்ளது. அந்தந்த ராசிக்கும் கீழ் நின்று மூலவரை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை
பிரார்த்தனை
புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை நவீன மருத்துவத்தில் அளிக்கப் பட்டு வருகிறது. புற்றுநோயின் தீவிரத்தை கட்டுக் கொண்டுவர இங்கு ஏராளமானோர் வழிபடுகின்றனர். கோவில் அக்னி மூலையில் உள்ள கிணற்றிலிருந்து நீர் எடுத்து ஒற்றைப்படை வரிசையில் தலவிருட்சத்துக்கு தண்ணீர் ஊற்றி அதனை பன்னிரண்டு முறை சுற்றிவர வேண்டும். மூலிகைக் காற்றே புத்துணர்ச்சி தரும். பிறகு பிராய்த்துறை பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
வாரந்தோறும் திங்கட்கிழமையிலோ அல்லது மாத சிவராத்திரி காலங்களில் இந்த இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்ய கைமேல் பலன் கிடைக்கும்.
காவிரி தென்கரையோரம் ஏழு நிலை ராஜ கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம் கொடிமரம் நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றால் அங்கே 5 நிலை மற்றொரு கோபுரம் உள்ளது. அதையும் கடந்து சென்றால் கலை அழகு மிக்க மண்டபங்களும், அதன்பின் இறைவனின் கருவறை காணப்படுகிறது. இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அருகிலேயே தெற்கு நோக்கி அன்னை பசும்பொன் மயிலாம்பாள் என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
உட்பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், சமயக்குறவரநால்வர், 63நாயன்மார்கள், மேற்கு பகுதியில் வினாயகர் வள்ளி தெய்வானை பஞ்ச லிங்கங்கள் மகாலக்ஷ்மி விஷ்ணு மற்றும் துர்க்கா லக்ஷ்மி உள்ளனர். காவிரி நதியே இத்தலத்தின் தலதீர்த்தமாக இருக்கிறது. முதல்நாள் முழுக்கு என்ற காவிரி நீராடல் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.