பாதாள லோகத்திற்கே கூட்டிச் செல்லும் பாதாள புவனேஸ்வர் கோயில்!

Patala Bhubaneswar temple which leads to Patala Loka
Patala Bhubaneswar temple which leads to Patala Loka
Published on

ம்முடைய புராணங்களில் கூறப்பட்டிருக்கும் 14 லோகங்களில் ஒன்றாக பாதாள லோகமும் இருக்கிறது. இதை இத்தனை நாட்களாக கதையில்தான் படித்திருப்போம். ஆனால், உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார்ஹ் மாவட்டத்தில் உள்ள கங்கோலிஹாத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன குகைக் கோயில்தான் பாதாள புவனேஸ்வர் கோயிலாகும். இங்கு சென்றால் பாதாள லோகத்திற்கு போகும் வழியில் நாமும் பயணம் செய்துவிட்டு வரலாம்.

இந்த பாதாள குகை 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் கொண்டது. இது வெறும் குகை மட்டுமில்லாமல், இந்தக் குகைக்குள் பல குகைகள் பிரிந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திரேதா யுகத்தில் அயோத்தியை ஆண்ட சூரிய குலத்து மன்னனான ரித்துபூர்ணாவே இக்குகையை முதல் முதலில் கண்டுபிடித்தார். ஒரு மானை துரத்திக்கொண்டு காட்டில் செல்லும்போதே இக்குகையை அவர் கண்டுபிடித்து உள்ளே செல்ல முயற்சித்தார். அப்போதுதான் ஆதிசேஷனை பார்க்கிறார். ஆதிசேஷனும், ரித்துபூர்ணாவிற்கு பாதாள லோகத்தை சுற்றிக்காட்ட ஒப்புக்கொள்கிறார். அப்படி அவர் பாதாள லோகத்தை சுற்றிப்பார்த்து முடிப்பதற்கு ஆறு மாதங்கள் ஆகி விடுகின்றது. பிறகு அவரை வழியனுப்பும்போது ஆதிசேஷன் இங்கு பார்த்த விஷயங்களை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இருப்பினும், ரித்துபூர்ணா நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் அவரின் மனைவியிடம் கூற, அதன் விளைவாக இறந்து விடுகிறார். பின்பு அவரது மனைவியே இவ்விடத்தை தேடிக் கண்டுப்பிடித்து உள்ளே செல்வதற்கு படிகளைக் கட்டுகிறார். அவராலும் வெகுதூரம் செல்ல முடியாததால் பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறார்.

பாதாள புவனேஸ்வர் கோயில்
பாதாள புவனேஸ்வர் கோயில்

மீண்டும் துவாபர யுகத்தில் பாண்டவர்கள் கயிலாயம் செல்வதற்கு இவ்வழியை கண்டுபிடிக்கின்றனர். அதன் பிறகு கலியுகத்தில் ஆதிசங்கரர் இக்கோயிலை கண்டுபிடிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இக்கோயில் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

‘பூமியை விட பல கோடி வருடம் பழைமையான இடத்திற்குள் நுழையப் போகிறீர்கள். அதனால் கவனம் தேவை’ என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது. பாதாள லோகத்திற்குச் செல்லும் வழி மிகவும் குறுகலாக இருக்கும். உள்ளே இரும்பு சங்கிலிகள் இருக்கும். அதைப் பிடித்துகொண்டே இறங்க வேண்டும். இந்த வழியை பார்த்ததுமே பல பேர் பயந்து திரும்பி சென்று விடுகின்றனர். சில பேரே உள்ளே செல்ல முற்படுகிறார்கள். சிவபெருமான் யாரை அழைக்கிறாரோ, அவர்களாலேயே உள்ளே செல்ல முடியும் என்று கூறுகிறார்கள்.

இக்குகைக்குள் உள்ள எல்லா வடிவங்களும் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்ட சுயம்பு வடிவங்களேயாகும். குகைக்குள்ளே சென்றதும் முதலில் காணக்கூடியது ஆதிசேஷனுடைய உருவமேயாகும். இந்த பூமியையே தலையால் தாங்கிப் பிடித்திருப்பது போல இருப்பது ஆச்சர்யமாகவே உள்ளது. அதை விட பெரிய ஆச்சர்யம் பற்கள் முதல், பாம்பிற்கு இருக்கும் விஷப்பை கூட இந்த ஆதிசேஷனிடம் உள்ளது. உள்ளே போகப் போக பாம்பின் முதுகெலும்பு போல அமைப்புகள் அமைந்துள்ளன.

பாதாள புவனேஸ்வர் கோயில்
பாதாள புவனேஸ்வர் கோயில்

அங்கே இருக்கும் மிகவும் குறுகிய குகையான சேஷாவதி குகை என்று சொல்லப்படும் குகையில் இச்சாதாரி நாகங்கள் வசிக்கின்றன என்று கூறப்படுகிறது. இக்குகையில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயமாகும். ஆயிரம் கால்களைக் கொண்ட இந்திரனின் யானை ஐராவதத்தின் கால்களை தரிசிக்கலாம்.

காலபைரவரின் நாக்கின் பின்பகுதியில் இருக்கும் குகைக்கு பெயர் மோட்ச துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே மொத்தம் நாலு துவாரங்கள் உள்ளன. முதலில் இருப்பது பாவ துவாரம். இராவணன் இறந்ததும் இந்த வழி மூடிவிட்டது. அடுத்தது ரண துவாரம். குருக்ஷேத்ர போருக்குப் பிறகு மூடிவிட்டது. அடுத்து இருக்கும் இரு துவாரங்கள்தான் தர்ம துவாரம் மற்றும் மோட்ச துவாரமாகும். மோட்ச துவாரத்தில் சித்தர்கள் போன்றோர் நெஞ்சு எலும்பை தளர்த்தி உள்ளே சென்று மோட்சம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

பாதாள புவனேஸ்வர் கோயில் நுழைவாயில்
பாதாள புவனேஸ்வர் கோயில் நுழைவாயில்

விநாயகருடைய வெட்டப்பட்ட உடல் இங்கேதான் இருக்கிறது. அதற்கு மேலே இந்திர லோகத்தில் மட்டுமே இருக்கக்கூடிய எட்டு இதழ் கொண்ட பாரிஜாத மலரும் அதில் இருந்து சொட்டும் அமிழ்தமும் நேராக வெட்டப்பட்ட விநாயகர் உடலில் படுவது போல அமைந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. இங்கு உள்ள அனைத்துமே இயற்கையாகவே உருவானது என்பதை மறக்க வேண்டாம்.

பகிரத மன்னன் தனது சாப விமோசனத்திற்காக கங்கையை நோக்கி தவம் புரிந்து பூமிக்கு வரும்படி அழைக்கிறார். தான் பூமிக்கு வந்தால் அந்த வேகத்தை பூமி தாங்காது. அதற்கு என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்று எச்சரித்து விட்டு கங்கை பூமியை நோக்கி பாயத் தொடங்குகிறது. இதனால் பகிரதன் சிவனை மனமுருகி வேண்ட, சிவபெருமான் கங்கையை தனது ஜடாமுடியில் முடிந்து பாதாள லோகத்தில் விட்டு கங்கையை கட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அந்த பாதாள லோகத்தில் விடப்பட்ட சிவபெருமானின் முடியை இங்கே காணலாம். அந்த முடியிலிருந்து சொட்டும் கங்கை நதியின் நீரை காண்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்த்துதான் போகும். இந்த முடியை தொட்டுப் பார்த்தால் உண்மையான மனித முடி போலவே இருப்பது மேலும் ஆச்சர்யமான விஷயம். இந்த முடியில் குழந்தை, இளமை, முதுமை என்று சொல்லப்படும் மூன்று பருவங்களின் முடியையும் தரிசிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உலகின் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியம் உருவான கதை தெரியுமா?
Patala Bhubaneswar temple which leads to Patala Loka

ஆதிசங்கரர் வழிபட்ட சிவலிங்கத்தை இங்கே காணலாம். அந்த சிவலிங்கத்திலிருந்து வீசும் ஒளியை மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் செப்புத்தகடு வைத்து மூடியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இக்குகைக்குள் வர எவ்வளவு சிரமப்பட்டு உள்ளே வந்தார்களோ, அதை விட அதிக சிரமப்பட்டே மேலே ஏற வேண்டியிருக்கும். எனினும், எண்ணற்ற பக்தர்கள் தினமும் இந்த பாதாள புவனேஸ்வரர் குகையைக் காண வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com