1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிரஞ்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர் மிர்ரா அல்ஃபசா என்கிற பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை. இளமையிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட அவருக்கு இளம் வயதில் தினந்தோறும் தியானத்தில் ஆழ்வதும் இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. ஸ்ரீ அன்னை மிக உயர்வான நேர்மறை சிந்தனைகளை நம்முள் விதைத்து மனித குலத்தை உயர்த்தவே அவதாரம் எடுத்தவர். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில், மகான் ஸ்ரீ அரவிந்தரோடு இணைந்து செயல்பட்டு மக்களை வழிநடத்தியவர் ஸ்ரீ அன்னை.
ஸ்ரீ அன்னை கூறுகிறார், ‘‘மனச்சோர்வு, தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். அப்பொழுது நாம் எடுக்க வேண்டிய நிலை, 'என்னால் முடிந்ததை நான் செய்வேன். உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துகொள்ள அன்னையின் சக்தி உள்ளது. இறைவன் உள்ளான்' இப்படி எதற்கும் கலங்காமல் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மன நிலை."
‘எதிர்மறை சிந்தனைகள் வராமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியுமா?’ முடியும் என்கிறார் ஸ்ரீ அன்னை. நம் மனதில் ஒவ்வொரு உணர்ச்சியும் உருவாகி அவை வெளிப்படுவதற்கு முன்பு மனதிற்கு ஒரு காவல்காரரை நியமித்து நல்லதை உள்ளே இருத்தி, வேண்டாததை வெளியே தள்ளிவிடவேண்டும். எண்ணமும் பேச்சும் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்க வேண்டும். முதலில் இந்தப் பயிற்சி சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பழகப் பழக அது நமக்கு இயல்பான ஒன்றாகிவிடும்.
இந்த உணர்ச்சிகள் வெளிப்படுவது எவ்விதம்? மனதில் ஏற்படும் உணர்ச்சிகள் வெளிப்படுவது நம் வாயின் மூலம்தான். ஆமாம்! நம் பேச்சுதான் நம் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. பேச்சு என்னும் அற்புதமான சக்தியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பேச்சு எவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கு அதன் சக்தி அதிகமாக இருக்கும். நாம் அதிகமாகப் பேசும்போது நம்மையறியாமல் பேச்சில் பொய்கள் நிறைய வந்துவிடும். அந்தக் காலத்தில் ரிஷிகள் வாக்கு பலித்ததற்குக் காரணம் அவர்கள் பொய் பேசாதிருந்ததுதான். உண்மையே பேசுவது என்பது ஒரு தவத்திற்கு ஈடாகும்.
வாழ்வில் ஒரு நல்ல லட்சியத்தை கடைபிடித்து வாழ நினைக்கும் மனிதர்கள் தன் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டியவையாக ஸ்ரீ அன்னை கூறியுள்ள பொன்மொழிகள்:
1. நல்ல மனநிலை உடையவன் விஷயங்கள் அவனுக்கு எதிராகப் போகும்போதும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படும்போதும் கோபப்பட மாட்டான்.
2. செய்வதை திருந்தச் செய்வான். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபோதும் தான் செய்ய வேண்டியதை செய்துகொண்டேயிருப்பான். நேர்மறை எண்ணங்களால் நேர்மையாகச் செயல்புரிவான்.
3. தனது முயற்சிகள் பலனளிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சோர்ந்து போகாமல் முயற்சித்துக்கொண்டே இருப்பான்.
4. தவிர்க்க முடியாத இடர்களையும் துயரங்களையும் சலனமின்றி கடந்து செல்வான். எத்தனை முறை தோல்விகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.
5. வெற்றியை தலைக்கு எடுத்துச் செல்ல மாட்டான். தனது தோழர்களை விடவும் சக வீரர்களை விடவும் உயர்ந்தவன் என்று கர்வம் கொள்ள மாட்டான். வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை தவற மாட்டான்.
6. பிறரிடமுள்ள குறைகளை பெரிதுபடுத்தாது அவர்களிடமுள்ள சிறப்புகளை மட்டுமே பாராட்டுவான். பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என்று நினைக்கிறானோ, அதேபோல அவனும் பிறரை நடத்துவான்.
7. தான் செய்யப்போவதை தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றி பெருமை பாராட்ட மாட்டான். எப்போதும் கட்டுபாட்டுடனும் நேர்மையுடனும் வாழ்வான்.
இப்படி அருளுரைக்கும் ஸ்ரீ அன்னை, ‘வெற்றி என்பது உங்கள் உறுதியையும் நேர்மையையும் பொறுத்தே உள்ளது’ என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டுவிட்ட போதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், சமாதியிலும் ஆசிரமத்திலும் புதுவையைச் சுற்றி வெளியிலும், பக்தர்கள் உள்ளத்திலும், வாழ்விலும் நிரந்தரமாகச் செயல்புரிந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ அன்னைக்கு மலர்கள் மீது அளவற்ற விருப்பம் உண்டு.
ஸ்ரீ அன்னையை வழிபட அர்ச்சனையோ மந்திரங்களோ தேவையில்லை. ஆற்றல் மிக்க வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வழிபாடு செய்தாலே போதும்.
ஸ்ரீ அன்னையின் பிறந்த நாளான இன்று (21.02.24) வண்ண வண்ண மலர்களைக் கொண்டு அன்னையை வழிபாடு செய்து அவர் அருளைப் பெறுவோம்.