தென்திருப்பேரை என்பது வைணவமும் சைவமும் இணைந்த ஒரு தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான இப்பகுதியை ஒரு காலத்தில் சுந்தரபாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் தினமும் இத்தல பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய விரும்பி காவிரி பாயும் சோழ நாட்டிலிருந்து 108 அந்தணர்களை அழைத்து வர ஆணை இட்டான்.
மன்னன் ஆணைப்படி சோழ நாட்டிற்குச் சென்ற வீரர்கள் 107 அந்தணர்கள் மட்டுமே கிடைக்க, அவர்களை முதலில் மன்னனின் ஆணைப்படி இங்கு அழைத்து வந்தனர். அப்போது, இத்தல பெருமாளே 108வது அந்தணராக எழுந்தருளி அருள்புரிந்தார். இதனால் இவ்வூர் மக்கள் இத்தல பெருமாளை, ‘எங்களில் ஒருவர்’ எனச் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தை வந்தடைந்த வைணவ அந்தணர்கள், ‘நூற்றி எண்மர்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நூற்றி எண்மர் வழிவந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி, இன்றளவும் அவருக்குக் கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் குழந்தை பிறந்து அரை ஞாண்கொடி செய்தால் அதை இரண்டாகவே செய்வார்கள். அது குழந்தைக்கு ஒன்று, பெருமாளுக்கு ஒன்று. தாலிக்கொடியும் இரண்டாகவே வாங்குவர். மணப்பெண்ணிற்கு ஒன்று, தாயாருக்கு ஒன்று என.
இத்தல பெருமாள் மகர நெடுங்குழைக்காதர் (மீன் வடிவிலான நீண்ட காதணிகள் அணிந்தவர்) என அழைக்கப்படுகிறார். தாயார் குழைக்காத நாச்சியார். பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒன்பது தலங்களை நவ திருப்பதிகள் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். இந்த ஒன்பது தலங்களுள் தென்திருப்பேரை சுக்கிர தலமாக விளங்குகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது.
வருணன் அசுரர்களிடம் போரிட்டு தனது வருண பாணம் எனும் ஆயுதத்தை இழந்து, இத்தலம் வந்து தவம் செய்து அதைத் திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை என்பது ஐதீகம்.