வைணவ சம்பிரதாயத்தில் சுவாமியின் பல்லக்கு, 'தோளுக்கினியான்’ எனவும், அந்தப் பல்லக்குத் தூக்கிகளை, ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’ எனவும் அழைக்கப்படுவது மரபில் உள்ளது. பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ, அப்படிப் புறப்படுகிறது. இந்நிகழ்வு, ‘கருடகதி’ எனப்படுகிறது. அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தனது தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் லேசாகத் திருப்பி பார்த்துவிட்டு வெளிவருமோ, அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளை கருவறையிலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது, ‘சிம்மகதி’ ஆகிறது.
அடுத்து, பாயும் புலி பதுங்குவது போல, இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை ‘வியாக்ரகதி’ என்கிறார்கள். அதையடுத்து, காளை போல மணியோசையுடன் நடந்து வருவதை, ‘ரிஷபகதி’ என்றும், ஆண் யானை போல களிப்புடனும் கம்பீரத்துடனும் நடப்பதை, ‘கஜகதி’ எனவும் சொல்கிறார்கள்.
புறப்பாடு நிறைவடைந்து மீண்டும் கருவறையில் நுழையும்போது, எப்படி ஒரு பாம்பு தனது புற்றுக்குள் நுழையும் முன்பு தனது தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் விரைவில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை, ‘சர்பகதி’ என்கிறார்கள். இறுதியாக, அன்னப்பறவை ஒன்று தனது சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காரும் அழகை ஒத்ததைப் போல் உள்ளே நுழைந்த எம்பெருமாளை சட்டென அமர வைப்பதை, ‘ஹம்சகதி’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் நிற்கும்போதுகூட, ஏன் இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆயக்கால் போட்டு நிறுத்தலாமே?’ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லை என்று கூறப்படுகிறது. காரணம், ‘பெருமாள் பாரத்தை ஒரு சுமையாக நினைப்பது தவறு’ என்பது ஐதீகம்.
மேலும், ‘பெருமாள் பல்லக்குக்கு முன்னே செல்லும் அறையர் சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் இசைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்ல, தீப்பந்தம் பிடிப்போர், குடை பிடிப்போர், வெள்ளித்தடி ஏந்துவோர், ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் அதே கதியில் ஆடிக்கொண்டு செல்வதே முறை’ என்கின்றனர். அது மட்டுமின்றி, பெருமாள் சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனம், யானை, பசு போன்ற வாகனங்களில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றாற்போல அனைத்து கதிகளும் மாற்றப்படுமாம்.
உதாரணமாக, வையாளி எனப்படும் குதிரை வாகனத்தின்பொழுது இரண்டு நடை வேகமாகச் சென்றுவிட்டு, பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு மீண்டும் இரண்டு நடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பது நியதி. எப்படி இவர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது? இதற்கு ஏதேனும் சிறப்புப் பயிற்சி உண்டா என்றால், இந்தத் திருச்சேவைக்கு முதலில் தகுதியான சில இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா, வலதுதோள் பழக்கமா, என்ன உயரம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு, அதன் பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு பல மாதங்கள் பயிற்சி தரப்படுகிறது.
அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று ஆலய நிர்வாகத்திற்கு திருப்தி உண்டானால் மட்டுமே அவர்கள் அந்த சேவைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்பது சிறப்பு. ஒரு பல்லக்குத் தூக்குவதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா? என்பதை நினைக்கும்போது மனதில் வியப்பு மேலிடுகிறது.