

பெருமாள் கோயில் என்றாலே அங்கு பொதுவாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து வைணவத் தலங்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெறும். ஆனால், சொர்க்க வாசலே இல்லாத பெருமாள் கோயில்களும் உள்ளன. இங்கு சொர்க்கவாசல் இல்லாததற்கு சிறப்பான காரணமும் உண்டு.
1. கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயில்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் நேரடியாக வைகுண்டத்தில் இருந்து மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணம் முடிப்பதற்காக வந்ததாக ஐதீகம். வைகுண்டத்தில் தான் எழுந்தருளி இருக்கும் ரதத்துடனேயே வந்து இங்கு காட்சி தருவதால் இந்த கோயிலில் தனியாக சொர்க்கவாசல் என்பது கிடையாது. இவரை வணங்கினாலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இக்கோயிலில் உள்ள உத்திராயண, தட்சிணாயன வாசலை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே சொர்க்கம் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
2. பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்: பரமேஸ்வர விண்ணகரம் என்னும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் கிடையாது. இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் வைகுண்டப் பெருமாள். இவருக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு. இவரை தரிசித்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் ஸ்ரீ பரமபத நாதப் பெருமாள் தாயார் வைகுந்தவல்லி. விமானம் முகுந்த விமானம். இது மூன்று தளம் கொண்டு அஷ்டாங்க விமானமாக உள்ளது. மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது.
3. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள்: திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் கோயில் பூலோகத்து விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயிலே பரமபதமாக கருதப்படுவதால் இங்கு தனியாக சொர்க்கவாசல் என்பது கிடையாது. பஞ்ச கிருஷ்ண தலங்களில் திருக்கண்ணபுரம் முதன்மையானது. இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் வைகுண்டம் பெறுவர் என நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தக் கோயிலே பரமபதமாக மதிக்கப்படுகிறது. இதனால் இங்கு பரமபத வாசல் தனியாகக் கிடையாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இப்பெருமாள் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளி ஆழ்வார்களுக்கு சேவை சாதிப்பார்.
4. திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள்: திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவியை மணம் முடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக இங்கு வந்ததால் இக்கோயில் பூலோக வைகுண்டமாகக் கருதப்படுகிறது. இவரை வணங்க முக்தி கிடைக்கும். கும்பகோணம் சாரங்கபாணி கோயிலைப் போலவே இங்கும் தட்சிணாயன வாசல், உத்திராயண வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் செங்கமலத்தாயார். திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
5. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள்: ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளும்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது போல மணியால் ஆன கதவுகள் திறக்கப்படும்.