பிள்ளையாரும் பிறை நிலாவும்!

பிள்ளையாரும் பிறை நிலாவும்!
Published on
Kalki vinayagar
Kalki vinayagar

முழு நிலவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு என்றாலே முழு நிலவைத்தானே எல்லோரும் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனாலும், எல்லோராலும் மெச்சப்படும் முழுநிலவுக்கு ஒரு பட்சம் தேய்பிறை, ஒரு பட்சம் வளர்பிறை. இது எப்படி உண்டானது பார்ப்போம். மேலும், மூன்றாம் பிறை என்றால் உயர்வு. நான்காம் பிறையைக் கண்டவர்கள் நாய் படும் பாடுபடுவார்கள் என்று ஒரு வழக்கும் இருந்து வருகிறது. எதனால் அப்படி?

விநாயகர் தனது மூஷிக வாகனத்தில் ஏறி, ஒவ்வொரு லோகமாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி வந்து கொண்டிருந்த சமயத்தில், சந்திர லோகத்துக்குச் சென்றார். சந்திர லேகத்தில் அவர் நுழைந்ததும், சந்திரன் அவரை வரவேற்கவும், மரியாதை கொடுக்கவும் இல்லை. மாறாக ஒரு ஏளனச் சிரிப்புடன் விநாயகரைப் பார்த்தார்.

"என்ன சிரிக்கிறாய்?" என விநாயகர் கேட்டார்.

"இப்படி அவயங்களைக் கொண்ட நீங்கள், ஒரு சின்ன மூஷிகத்தின் மீது ஏறி வருத்தப்படாமல் வலம் வந்து கொண்டிருக்கிறீர்களே. அதை நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது" என்றார் சந்திரன்.

"சந்திரா, உனக்கு எப்பொழுதுமே உனது அழகின் மீது அபார கர்வம் உண்டு. என் அவயங்களைப் பார்த்து நீ ஏளனம் செய்கிறாய். கர்வம் கொள்ளும் அளவுக்கு வெண்மையாகத் தெரியும் நீ, உன்னுடைய சொந்த நிறத்தினால் மிளிர்வதில்லை என்பதைப் புரிந்துகொள். சூரியனிடம் இருந்து பெற்றதுதானே இந்த நிறம்?" என்றார்.

"அழகை வர்ணிப்பதாக இருந்தால், பூரண சந்திரன் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு உயர்வான இடத்தை எல்லோரும் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். தெரியுமா?" என்றான் சந்திரன்.

"உனது நிறமே நீ பிறரிடம் இருந்து பெற்றதுதான். மேலும், உனக்கு குணமும் போற்றப்படுவதாக இல்லை. தக்ஷப்பிரஜாபதிக்கு பிறந்த 27 பெண்களில், ரோஹிணியை மட்டுமே நீ அதிகமாக நேசித்து வந்தாய். அதனால் ஆத்திரம் அடைந்த தக்ஷப்பிரஜாபதி, ‘உனது அழகு தேய்ந்துகொண்டே போகட்டும். அப்பொழுதுதான் உனது கர்வம் குறையும்’ என்று சாபமிட்டார். எனது தந்தை சிவபெருமான் தேய்ந்து கொண்டே போன உன்னை மூன்றாம் பிறை ரூபத்தை எடுத்து, தனது ஜடாமுடியில் சூட்டிக்கொண்டார். அதனால் உனக்கு ஒரு அந்தஸ்தும் வந்தது என்பதை கவனம் வைத்துக்கொள். அவர் உன்னை சிரசில் சூடிய பிறகுதான் நீ வளரவும் ஆரம்பித்தாய். இப்பொழுது நான் உனக்கு ஒரு சாபம் தருகிறேன். இனி உன்னைக் காண்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு வாழ்வில் களங்கம் கற்பிக்கப்படும் என்பது நிச்சயம்" என்றார் விநாயகர்.

சந்திரனுக்கு மிகவும் அவஸ்தையாகப் போய்விட்டது. தான் மிகவும் அழகாக இருப்பதாக கர்வம் கொண்டிருந்த அவருக்கு இனி அழகாக இருக்கும் தன்னை யாரும் பார்க்க மாட்டார்களோ என்கிற ஒருவித கவலை உண்டானது. ஏனென்றால், தன்னைப் பார்த்தால், பார்த்தவர்களுக்குக் களங்கம் கற்பிக்கப்படும் என்று பிள்ளையார் சொல்லி விட்டார் அல்லவா? அதனால் யாரும் பார்க்கத் துணிய மாட்டார்கள்.

இதையெல்லாம் யோசனை செய்து பார்த்த சந்திரன், தன்னைப் பார்த்து அதனால் களங்கம் ஏற்படுமேயானால் அவர்கள் தன்னை நிந்திக்கக் கூடும் என்று பயந்து, கடலுக்குச் சென்று, தன்னை மறைத்துக்கொண்டு மூழ்கி இருந்தார்.

சந்திரனின் சஞ்சாரம் இல்லாமல் எல்லோரும் மிகவும் அவதிக்கு ஆளானார்கள். இரவு நேரங்களில் வளரக்கூடிய சில தாவரங்கள் வளரவில்லை. லோகத்தில் குளுமை இல்லாமல் இருந்தது. லோகமே களை இழந்து போயிருந்தது. அதனால் முனிவர்கள் பிரம்மாவிடம், சந்திரன் சஞ்சாரம் செய்யவில்லை என்பதை முறையிட்டார்கள்.

விநாயகரின் சாபத்துக்கு பயந்து, சந்திரன் கடலுக்கடியில் மறைந்திருப்பதை அறிந்தார் பிரம்மா. சந்திரன் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் விநாயகரை ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.

விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினத்தன்று நக்த விரதம் இருந்து (அதாவது பகல் பொழுது முழுவதும் உபவாசம் இருந்து, இரவில் மட்டும் ஆகாரம் உட்கொள்வது), அவரைப் பூஜித்து, அவருக்குப் பிடித்த அப்பம், கொழுக்கட்டை, பொரி, அவல், பொங்கல் ஆகியவற்றைச் செய்து விநாயகரை எல்லோரும் வழிபட்டார்கள்.

அவர்களின் வழிபாட்டுக்கு செவி சாய்த்த விநாயகர், தரிசனம் கொடுத்து, ‘யாது வேண்டும்’ என வினவினார். அப்பொழுது சந்திரன் பெற்ற சாபத்தை அவர்கள் எடுத்துரைத்து, அதற்கு விமோசனம் வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு, ‘சந்திரனே நேரில் வந்து கேட்கட்டும். நான் அவசியம் விமோசனம் தருகிறேன்’ என்று கூறினார் கணபதி.

தனது அழகில் கர்வப்பட்டு, விநாயகரை ஏளனம் செய்த சந்திரன், அவரிடம் மன்னிப்பு கோரி, தனக்கு சாப விமோசனம் தரும்படி வேண்டி நின்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த விநாயகர், "எனக்கு உகந்த நாளான சதுர்த்தி அன்று என்னை தரிசிப்பவர்கள் உன்னையும் தரிசித்தால்தான் சதுர்த்தி விரதம் முழுமை பெறும்" என்று கூடுதலான ஒரு வரத்தையும் அளித்ததோடு நில்லாமல், சந்திரனை தனது கிரீடத்திலும் சூட்டிக்கொண்டார்.

அதனால்தான் சிவபெருமானின் ஜடாமுடியில் இருக்கும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசிப்பதும், சதுர்த்தி அன்று நான்காம் பிறை சந்திரனை தரிசிப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. முழு முதற்கடவுளான கணபதியை யாவரும் வந்தனை செய்வோம். நன்மைகளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com