பொங்கிவரும் புதுப்புனலை வழிபடும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா!

காவிரி தாய்க்கு வழிபாடு
காவிரி தாய்க்கு வழிபாடு
Published on

ட்சிணாயத்தின் முதல் மாதமாகிய ஆடி மாதத்தில் மிக சிறப்புக்குரிய நாட்களில் ஒன்று ஆடி 18வது நாளில் வரும் ஆடிப் பெருக்கு பண்டிகை. இதை, ‘பதினெட்டாம் பெருக்கு’ என்றும் சொல்வர். இந்த நாளில் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நீர் கரை புரண்டோடும்.  விவசாயிகள் மிக்க மகிழ்ச்சியுடன் வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுவர். தென்மேற்கு பருவத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். 

ஆடிப் பட்டத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்த விவசாயிகள் ஆற்றில் பொங்கி வரும் நீரால் பாசன வசதி பெறுவதால், தை மாதத்தில் நம்பிக்கையாக அறுவடை செய்ய இயலும். மக்களும்  ஆற்றங்கரையில் அன்றைய தினம்  கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். நதிகளை பெண்களாக பாவித்து வழிபடும் வழக்கமுள்ள மக்கள் ஆடிப் பெருக்கன்று நீர் நிலைகளுக்குச் சென்று  காவிரித் தாயைப் போற்றி பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம், புது வீட்டு கிரஹபிரவேசம் போன்ற சுப காரியங்கள் எதுவும் செய்வது வழக்கமில்லை. ஆனால், ஆடிப் பெருக்கன்று புதிய தொழில் துவங்குவது, திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக பேச்சு வார்த்தை நடத்துவது போன்றவற்றை செய்யலாம். இந்த நாளில் எதைத் துவங்கினாலும் அது பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம். முக்கியமாக, திருமணமான பெண்கள் தாலிச்சரடை மாற்றுவது ஆடிப்பெருக்கன்று செய்வார்கள். அன்று தாலிச்சரடு மாற்றினால் கணவனின் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை. காவிரி அம்மனுக்கு பூஜை செய்து, தாலிச்சரடு மாற்றி, மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்துத் தருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி 18ம் தேதியன்று நதிக்கரையோரப் பகுதிகளில் வெகு விமரிசையாக பதினெட்டாம் பெருக்கு என்னும் காவிரியில் பொங்கி வரும் புதுப்புனலை வழிபடும் விழா நடைபெறும். காவிரித் தாய்க்கு தங்கள் நன்றியை தெரிவிகும் விதமாக வாழை இலைகளில் அல்லது தொன்னைகளில் அகல் விளக்கை ஏற்றி வைத்து காவிரி தாயைப் போற்றி வணங்கி பயபக்தியோடு ஆற்றில் விடுவார்கள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

பெண்கள் காவிரி அம்மனை அன்று வழிபாடு செய்ததை குறிக்கும் வகையில், தங்கள் வலக்கையில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். அன்று வீட்டிலிருந்து கலந்த சாத வகைகளான தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை கட்டி எடுத்துச் சென்று அதை காவிரி அம்மனுக்குப் படைத்து வழிபட்டு பிறகு அங்கேயே அமர்ந்து குடும்பத்தோடு உண்டுவிட்டே வீட்டுக்குத் திரும்புவார்கள். காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இதையும் படியுங்கள்:
நிலத்தில் உப்பை உறிஞ்சி விவசாயத்தைப் பெருக்கும் ‘ஓர்பூடு’ தாவரம்!
காவிரி தாய்க்கு வழிபாடு

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் புகழ் பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி அம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.  ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உத்ஸவர் நம்பெருமாள் புறப்பாடாகி அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கே சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். பெருமாள் கொடுக்கும் சீதனமாக காவிரி அம்மனுக்கு தாலிப்பொட்டு, பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். இந்த ஆண்டு பதினெட்டாம் பெருக்கு விழா நாளை (3.8.2024) சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.  நாமும் அன்று காவிரியன்னையை மனதாரப் போற்றி வணங்கி துதித்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com