மகாலட்சுமி சொரூபமாக வழிபடப்படும் கோமாதா பூஜைகளும், பசுக்களை பராமரிப்பதும், அவற்றினை ஆலயம் முதல் இல்லங்கள் வரை வணங்கி வழிபடுவதும் நம் இந்துக்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அமாவாசை தினத்தன்று பிதுர்களை திருப்திப்படுத்தும் விதமாக அகத்திக்கீரையை பசுவிற்கு தானமாகத் தருவது நெடுங்கால பழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல், புதுமனை புகுவிழாவின்போது பசுக்களை முதலில் வீட்டுக்குள் அழைத்துச் செல்வதால் வளமிகு நன்மைகள் பெறலாம் என்பது ஐதீகம்.
பல சிறப்புகள் கொண்ட பசுக்களுக்கு பண்டைய காலத்தில் இருந்தே பாரதத்தில் மிகவும் மரியாதை இருந்து வந்திருக்கிறது. பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து தெய்வீக காமதேனு மாதா தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வேதங்களில் பசுவின் பெருமை பலவிதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வேள்விகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அக்னி வளர்ப்பதற்கு பசுஞ்சாண வரட்டி, அவிசொரிதல் எனும் நியதிக்கு பசுந்தயிர், நெய் ஆகியவை பசுவின் மூலமே கிடைக்கிறது. வேள்வி செய்பவர் மற்றும் அதில் கலந்து கொள்பவர்கள் புனிதமடைய சகல பாபத்தைப் போக்கும் பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றை பஞ்சகவ்யம் என்ற பெயரில் உட்கொள்கிறார்கள்.
முனிவர்கள் பசுவை சாத்வீகம், புனிதம், மங்கலம், சக்தி மற்றும் நலன் வளர்ச்சி ஆகியவற்றின் திருவுருவமாக கருதினார்கள். அதிகாலை வேளைகளில் பசுவை முதன் முதலில் பார்ப்பது நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது. பசுவின் உடலில் முக்கோடி முனிவர்களும், தேவர்களும் வசிப்பதாக புராணங்களும் வேதங்களும் கூறுகின்றன.
பல புராணங்களில் உலகத் தோற்றத்தின் ஆதாரமாகவும் அனைத்து உலக நடவடிக்கைகளையும் தாங்கி நடத்துபவளாகவும் இருப்பது அன்னையின் சொரூபமான பசுவே என்று கூறுகிறது. பசுக்களை தரிசித்தல், பூஜை செய்தல், வணங்குதல், வலம் வருதல், தீவனம், புல் கொடுத்தல், நீர் காட்டுதல் முதலில் சேவைகளினால் மிக உயர்ந்த சக்திகளை மனிதர்கள் அடைவதாக சாஸ்திரம் உரைக்கிறது.
குறிப்பாக, மகாலட்சுமியின் மணாளன், ஆயர்களின் தலைவர், பசுக்களின் காவலரான பகவான் மகாவிஷ்ணு பசுக்களின் சேவையினால் மிகவும் திருப்தி அடைந்து அனைத்து நலன்களையும் தருவார் என்கிறது ஆன்மிகம். இந்து மதத்தில் ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அறச் செயல்களில் பசுத்தொண்டையே முதன்மையானதாகவும் மேலானதாகவும் கருத்தினார்கள் அன்று.
குருகுலத்தில் குரு பராமரிக்கும் பசுக்களை காப்பாற்றுதல் மற்றும் மனமுவந்து தொண்டு செய்தல் என்பதைக் குறிக்கும் சொல்லாக, ‘கோத்திரம்’ என்ற வார்த்தை விளங்குகிறது. ‘கோ’ என்றால் பசு, ‘த்ர’ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.
மகாபாரதத்தின் தொடர்ச்சியான, ‘விஷ்ணு தர்மோத்ரம்’ என்ற நூலில், ‘கோமதி வித்யா’ என்ற மந்திர வடிவமான தோத்திரம் பசுவின் பெருமையை எடுத்தியம்புகிறது. இந்த மந்திர பாடல் உபநிஷத - புராண மந்திரங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
பசு வழிபாட்டினால், பசுக்களைக் காப்பதால், பசுக்களின் பன்மடங்கு பெருக்கத்தால் பால், தயிர், வெண்ணெய் முதலான விலை மதிப்புமிக்க உயர்ந்த பொருட்கள் பெருகும். இதனால் நாட்டின் சௌக்கியமும் அமைதியும் கிடைத்து மனநிறைவு எய்துவதாக கோமாதா பக்தர்கள் கூறுகின்றனர். மேலும், குடும்ப வளர்ச்சியும் தெய்வீகமும், ஞானமும் முக்கியமாக வாயில்லா ஜீவனுக்கு உதவிய மனநிறைவும் பெற உதவுகிறது கோமாதா வழிபாடும் சேவையும்.