
இந்து மத சடங்குகளில் முக்கியமானதாக இருக்கிறது புண்ணியாகவாசனம் எனப்படும் சம்பிரதாயம். பிறப்பு முதல் இறப்பு வரை இடம் பிடிப்பது இந்த சடங்கு. இதை கடைபிடிப்பதால் என்ன நன்மைகள்? இதன் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
'புண்யாஹவாசனம்' அல்லது புண்ணியாகவாசனம் என்பது சில முக்கிய நிகழ்வுகளுக்கு முன் அல்லது பின் சுற்றுச்சூழலையும் மக்களையும் சுத்திகரித்து ஆன்மீக ரீதியாக நன்மையான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு எனலாம்.
நாம் வாழும் இடத்தில் தெய்வங்கள் நித்யவாசம் செய்வதால் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை சக்தியை ஈர்த்து தெய்வீக கடாட்சம் பெறுவதற்கு சுப புண்ணியாகவாசனம் செய்யப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது.
'புண்ய' என்பது தூய்மை அல்லது மங்களகரமானது. அதே நேரத்தில் 'ஹவசனம்' என்பது மந்திரங்கள் அல்லது மந்திரங்களை ஓதுவதைக் குறிக்கிறது.
இந்த சடங்கு இடம், பொருள்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து அசுத்தங்கள், எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் கடந்த கால அசுத்தங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுவாக திருமணங்கள், புதுமனை புகும் விழாக்கள் , பண்டிகைகள் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பும், ஒரு குழந்தை பிறந்த பிறகும், ஒரு மரணம் நிகழ்ந்து இறப்புச் சடங்குகளை முடித்த பிறகு (13 அல்லது 16வது நாள்) மற்றும் இறந்தவரின் வருடாந்திர 'திதி' முன் மற்றும் ஒரு புதிய வீடு அல்லது கோவிலை சுத்திகரிக்கவும் இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.
இந்த சடங்கில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் பங்கு பெறும் குடும்ப உறவுகள் மற்றும் பொருட்களின் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது. தானியங்கள், பழங்கள் மற்றும் பூக்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
மேலும் புண்யாஹவாசனம் என்பது வீட்டை தூய்மை படுத்துதல், கணபதி பூஜை, கலச பூஜை மற்றும் தண்ணீரில் உள்ள சக்தியைத் தூண்ட மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மந்திரங்கள் ஓதி சுத்திகரிக்கப்பட்ட புனித நீர் குறிப்பாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் மீதும் தெளிக்கப்படுகிறது. 'புரோக்ஷணம்' எனப்படும் சடங்கு வீட்டின் அனைத்து பகுதிகளிலும் செய்யப்படுகிறது.
குழந்தை பிறந்து குறிப்பிட்ட நல்ல நாளில் நடைபெறும் இந்த வைபவம் 'தொட்டில் விழா புண்ய தானம்' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் பல வேறுபாடுகளுடன் பிறக்கும் புதிய உயிர் என்பதால் பெற்றோர்கள் ஒரு நல்ல நாளில் உறவினர்கள் சூழ ஒரு சிறப்பு பெயரை வைத்து தொட்டிலில் இடும் அழகிய நிகழ்வாகிறது.
ஒருவர் இறந்த பின் அவரை சார்ந்தவர்கள் மனதளவில் சோர்வு பெறுவார்கள். இதன் மூலம் இறந்த ஆத்மா நல் உலகம் செல்லும் என்ற நம்பிக்கையுடன் நிகழ்ந்ததை ஏற்று இயல்பு நிலை திரும்ப இந்த சடங்கு உதவுகிறது எனலாம்.
ஆன்மீகம் வாயிலாக முன்னோர் வகுத்த சடங்குகளில் உடல், மனம், ஆரோக்கியம் சார்ந்த அறிவியலும் இருப்பதை இந்த சடங்கு மூலம் அறியலாம். ஆரோக்கியம், செழிப்பு மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான ஆசீர்வாதங்களைத் தர உதவும் இது போன்ற சடங்குகளின் அர்த்தம் புரிந்து கடைபிடிப்போம்.