நமது முன்னோர்கள் கடவுள் உருவங்களை வடிவமைக்கும்போது, அதில் புராண வரலாறுகளை சம்பந்தப்படுத்தியதுடன் மனித வாழ்க்கை நெறிகளின் மகத்துவத்தையும் அதன் மூலம் உணர்த்தியுள்ளனர். கந்தபுராணம் எடுத்துரைக்கும் சிவபெருமானின் சில ஆபரணங்களையும் அதன் புராணக் காரணங்களையும் காண்போம்.
ஈசன் பிறை அணிந்த காரணம்: தக்கன் என்பவன் அசுவினி உள்ளிட்ட தனது இருபத்தேழு மகள்களை சந்திரனுக்கு திருமணம் செய்வித்தான். ஆனால், சந்திரனோ மற்றவர்களை புறக்கணித்து ரோஹிணி என்பவளிடத்து மட்டும் மிகவும் அன்பு செலுத்தினான். இதனை தக்கன் அறிந்து கோபத்துடன் சந்திரனின் கலைகள் அழிந்து போகுமாறு சபித்தான். சந்திரன் சிவனிடம் அடைக்கலம் புகுந்தான். சிவன் ஒற்றைக் கலையோடுக் கூடிய சந்திரனைத் தமது சடையிலணிந்தார். மீண்டும் கலைகள் வளரும்படி அருள்புரிந்தார். உயிர்கள் அனுபவிக்கும் இன்பத்தை வளர்பிறையாகவும், துன்பத்தைத் தேய்பிறையாகவும் உருவகிக்கிறது பிறைச்சந்திரன்.
சிவன் அணிந்த புலித்தோல்: ஒரு சமயம் தாருகாவனத்து முனிவர்கள் சிவனை அழிக்கும் பொருட்டு ஒரு வேள்வி செய்தபோது வேள்வித் தீயினின்று வெளி வந்த புலியை சிவன் மீது ஏவ, சிவன் அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை உரித்து தனது மேனி அரையில் கட்டிக் கொண்டார். மனிதன் புலிக்கு ஒப்பான அகங்காரம் போன்ற மிருக உணர்வுகளைத் தள்ளி, உயர்ந்த உணர்வுகளுடன் வாழ வேண்டுமென்று புலித்தோல் உணர்த்துகிறது.
நாகாபரணம் அணிந்த சிவன்: தாருகாவனத்து முனிவர்களின் வேள்வித் தீயிலிருந்து பாம்புகள் தோன்றின. சிவனிடம் சினத்துடன் சென்ற பாம்புகளைத் துரத்திய கருடனுக்கு அஞ்சி சிவனையே அந்த நாகங்கள் தஞ்சமடைய, அவற்றை தமது கழுத்திலும் உடலிலும் ஆபரணங்களாக அணிந்து கொண்டார். சமூகத்தின் தீய சூழ்நிலைகள் மனிதனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டுள்ளன. அவற்றால் தீங்கு நேராமல் மனிதன் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்பதை இதனால் அறிய முடிகிறது.
தீச்சுடர் ஏந்திய சிவபெருமான்: தாருகாவன முனிவர்களால் ஏவப்பட்ட தீயை கையில் ஏந்தியவண்ணம் நடனமும் புரிந்தார் ஈசன். இதனை நெருப்பைச் சாட்சியாக வைத்துச் சொல்லும் சத்தியத்துக்கு ஒப்பாகக் கருதலாம். நம்புவோருக்கு மரண பயமில்லை. இது சத்தியமென மனிதர்க்கு சத்தியம் கூறுவது போல் சிவன் கையிலேந்திய நெருப்பு உணர்த்துகிறது.
வெண்ணீறு பூசிய சிவபெருமான்: சிவபெருமான் அசுரர்களின் முப்புரங்களை எரித்து அதில் இருந்த அசுரர் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து கொண்டு சாம்பல் நிறத்தவர் ஆனார். இவ்வுலகத்திலுள்ள உயிருள்ள உடல்கள் யாவும் ஒரு நாள் சாம்பலாகத்தான் போகும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இது உணர்த்துகிறது.
சிரசில் கங்கையை இருத்திய ஈசன்: சிவபிரான் தமது சடைமுடியில் கங்கையை அணிந்திருப்பார். தமது முன்னோர்களின் முக்திக்காக பகீரதன் தவமிருக்க, அம்முன்னோர்களின் அஸ்தி மீது கங்கா தேவி பாய்ந்தால் அவர்கள் மோட்சம் பெறுவர் என்கிறது தெய்வ வாக்கு. அதற்காக பகீரதன் ஈசனை நோக்கித் தவமிருக்க, அவனது தவத்தில் மகிந்த ஈசன் விண்ணுலகில் இருந்து கங்கா தேவியை பூமிக்கு வரச் செய்கிறார். விண்ணுலகில் இருந்து பூமிக்கு வரும் கங்கா தேவியின் வேகத்தை தனது சடா முடியில் தாங்கி அதை பூமியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்தி மீது பாயச் செய்கிறார் ஈசன். விடாமுயற்சியோடு இறைவனை நோக்கி வேண்டுதல் வைத்தால் அதை நிச்சயம் இறைவன் நிறைவேற்றுவார் என்பதற்கு பகீரதன் வரலாறே சாட்சி.
யானை தோலை போர்த்திய சிவனார்: கயமுகாசுரன் எனும் அசுரன் கடும் தவம் செய்தான். இதன் மூலம் சிவபிரான் தவிர மற்றவரால் அழிக்க முடியாத வரத்தைப் பெற்று, யாவரும் அஞ்சும்படி யானை வடிவில் பூமியில் திரிந்தான். இதைக் கண்டு உமாதேவி அஞ்ச, அதனால் சிவபெருமான் சினந்து கயமுகாசுரனை வதைத்தார். அந்த அசுர யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். மனிதனின் அகத்திலுள்ள அழுக்குகளை நீக்க வேண்டும் என்பதனை இது உணர்த்துகிறது.
சிவபிரானின் உமையொருபாகர் தோற்றம்: பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வலம் வருவதைக் கண்டு கோபம் கொண்ட உமையம்மை, சிவனை வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டுமென்று கௌரி விரதம் மேற்கொண்டாள். இந்த விரதத்தின் மகிமையால் தனது உடலின் இடப்பாகத்தை ஈசன் அம்பாளுக்கு அளித்து, ஆண் பாதி, பெண் பாதி என, ‘அர்த்தநாரீசுவர்’ கோலம் கொண்டார். இது, உலகில் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை உணர்த்துவதாக உள்ளது.