புரட்டாசி 2வது சனிக்கிழமை: திருப்பதியில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

புரட்டாசி 2வது சனிக்கிழமை: திருப்பதியில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை இன்று. அதுமட்டுமின்றி, நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை தினம் என்பதால் திருப்பதி பெருமாளை தரிசிக்க வந்திருக்கும், வந்துகொண்டிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இலவச தரிசனத்துக்கு டோக்கன் கிடைக்காத பக்தர்கள் மற்றும் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களிலும் இடம் கிடைக்காததால் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்துக்காக சுமார் 32 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளைப் பொறுத்த வரை அனைத்து அறைகளிலும் பக்தர்கள் தங்கி உள்ளனர். ஏராளமான பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் மண்டபங்கள், தங்களுடைய சொந்த வாகனங்கள், கிடைத்த இடங்கள் ஆகியவற்றிலேயே தங்கி உள்ளனர்.

பெரும்பாலான பக்தர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வந்திருப்பதால் திருமலை பார்க்கிங் பகுதிகள் முழுவதும் வாகனங்களால் நிரம்பி உள்ளன. இந்த நிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதன் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை பௌர்ணமி கருட சேவை நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 34 ஆயிரத்து 691 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com