புரட்டாசி மாதம் பெருமாள் நாமம்!

புரட்டாசி மாதம் பெருமாள் நாமம்!

மாவிளக்கு:

* புரட்டாசி சனிக்கிழமை ஒன்றில்தான் சனி பகவான் அவதாரித்தார். அதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

* திருப்பதி வேங்கடாஜலபதியை குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவு உருண்டை ஏழுமலையையும் அதன்மேல் ஏற்றப்படும் தீபம் திருவேங்கடவனையும் குறிக்கும்.

* சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில், சுக்ரனின் இனிப்பு வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து, குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட திருமண தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

படையல்:

* பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம்தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் விசேஷமானது.

* புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ வேங்கடேச பெருமாளுக்கு படையல் போட்டு வணங்குவர். வீடு, வாசலை சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கேற்றி, படைக்கும் இடத்தில் கோலம் போட வேண்டும். சர்க்கரை பொங்கல், எள்ளு, பாயசம், புளி சாதம், தயிர் சாதம், வடை, கொண்டைக்கடலை சுண்டலுடன், வாழைக்காய் பொரியலும் படையலில் இடம்பெற வேண்டும். பெருமாள் படத்தின் முன்பு ஐம்முக குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். முன்னதாக, குத்துவிளக்குக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, துளசி மாலை அணிவிக்க வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்குக்கு முன்பு போட்டு நெய்வேத்தியங்களை இலையில் பரிமாற வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, ஒரு சில துளசி இலைகளை போட்டு, தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம், விபூதி, குங்குமம் இவற்றை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து, ‘கோவிந்தா’ என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வேங்கடேச பெருமாளை வழிபடுவது வழக்கம்.

தோஷ நிவர்த்தி:

* தோஷம் மற்றும் தடைகள் நீங்கி திருமணம் நடைபெற, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

* தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்து விட்டாலும் அது பிரிவில் முடிகிறது அல்லது நிம்மதியற்ற வாழ்க்கை அமைகிறது. ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குருவின் நிறமான மஞ்சள் நிற ஆடையணிந்து, சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் உணவினை தயாரித்து, சனி பகவானின் காரகமாகிய மண் பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையல் இட, தோஷ நிவர்த்தி ஏற்பட்டு திருமணத் தடைகள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com