ஆன்மாவை சுத்திகரிக்கும் ராதாஷ்டமி வழிபாடு!

ராதாஷ்டமி (22.9.2023)
ஆன்மாவை சுத்திகரிக்கும் ராதாஷ்டமி வழிபாடு!

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அன்புக்கினிய காதலி ராதா தேவி பிறந்தது அஷ்டமியன்றுதான். ஸ்ரீ கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமிக்குப் பிறகு 15வது நாளில் வரும் அஷ்டமி தினம் ராதாஷ்டமியாகும்.

ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கையில் கூடவே பக்தர்களின் மனதில் ராதையும் சேர்த்து நினைக்கப்படுவதால், வடக்கே வசிக்கும் அநேக கிருஷ்ண பக்தர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தங்களுக்குள், ‘ராதே கிருஷ்ணா’ என்ற கூறிக்கொள்வது வழக்கம். உத்தரப் பிரதேசம் மதுராவில் இருக்கும் பிரம்மஸரன் என்கிற மலையடிவாரத்திலுள்ள பர்ஸானா எனும் ஊரில் ஒரு அஷ்டமி தினத்தில் ராதா தேவி பிறந்தாள். பர்ஸானாவில் ராதா ராணிக்கு ஒரு கோயிலும் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தி ரூபமே ராதா என இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நம்புகின்றனர். ராதா – கிருஷ்ணர் தொடர்பு கொண்ட கோயில்கள் இஸ்கான் போன்ற இடங்களில் ராதாஷ்டமி தினம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

ராதா தேவியின் சிலை, இன்று பஞ்சமித்ரா எனப்படும் பால், நெய், தேன், சர்க்கரை மற்றும் தயிர் ஆகிய ஐந்து வெவ்வேறு வகை கலவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து பஜனைகள், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்யும் வழக்கமும் உண்டு. அதுமட்டுமின்றி, ராதா – கிருஷ்ணர் சம்பந்தமான பாடல்களையும் பக்தர்கள் பாடி மகிழ்வர்.

மணி மகேஷ் ஏரி
மணி மகேஷ் ஏரி

ராதாஷ்டமியில் மணி மகேஷ் யாத்ரா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று ஹட்லரின் அருகேயுள்ள சாலை புள்ளியிலிருந்து புனித சாரி யாத்ரீகர்கள், வெறுங்காலுடன் சிவபெருமானின் பாடல்களைப் பாடி, நடனமாடிக் கொண்டு 14 கி.மீ. மலையேற்றத்தைத் தொடங்கி, ராதாஷ்டமியன்று நிறைவு செய்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்திலுள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றான புதில் பள்ளத்தாக்கின் பார்மூரிலிருந்து 26 கி.மீ. தொலைவில் மணி மகேஷ் ஏரி உள்ளது. இது கைலாஷ் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலையில் சிவபெருமானின் பளிங்குச் சிலை ஒன்று இருக்கிறது. ஜாத்ராவின் பிரதான தெய்வம் சிவபெருமான். ஆதலால், மதோன் மாதத்தில் சந்திரனின் ஒளி பாதியின் எட்டாவது நாளில் இங்கே கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது.

ராதாஷ்டமி தினத்தன்று அநேக புனித சாரி யாத்ரீகர்கள் மணி மகேஷ் ஏரியின் புனித நீரில் நீராடுவது வழக்கமாக இருக்கிறது. இதில் ஸ்நானம் செய்வது ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்தும் என நம்பப்படுகிறது. இமாச்சல பிரதேச அரசாங்கம் மணி மகேஷ் யாத்ராவுக்கு நிதியுதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.

ராதே கிருஷ்ணா ஸ்லோகம்:

மணி மகேஷ் ஏரியின் புனித நீரில் பக்தர்கள் நீராடுகையில்,

‘ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே

க்ருஷ்ணப்ரியாயே தீமஹி

தந்நோ ராதா ப்ரசோதயாத்’

எனும் ராதா ராணியின் காயத்ரி மந்திரத்தை பக்தியுடன் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com