ராஜ யோகம் தரும் திட்டை குரு பகவான்!

குரு பகவான்
குரு பகவான்

ஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரு பகவானுக்கு உகந்த திட்டை திருத்தலம். மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்தக் கோயிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் ஈசன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவி திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

இக்கோயில் ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக காட்சி தருகிறார். பஞ்சபூதங்களுக்கும் உரிய தலமாக இது விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும் வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சகல மங்கலங்களையும் தருவதால் இறைவி மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார் அம்பிகை.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை. ஆண், பெண் சமத்துவத்துக்கு அற்புதமான ஒரு உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால் தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

நவக்கிரகங்களின் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான், ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழி ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
கோகும் ஃபுரூட் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
குரு பகவான்

இத்தகைய குரு பகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா, சந்திரன் ராணி, செவ்வாய் சேனாதிபதி, புதன் இளவரசர், குரு (வியாழன்) ராஜமந்திரி மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இறைவன் மீது சொட்டும் நீராகும். ‘நமசிவாய’ என்பது ஐந்து எழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம் . திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளி இருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரகாந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது . தனது மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்ற சந்திர பகவான் தினமும் தேய்ந்து கொண்டே வந்தவர். திங்களூர் வந்து கயிலாயநாதரை வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

திங்களூரில் தனது சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தனது நன்றிக்கடனை செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரகாந்த கல்லாக அமர்ந்து காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு ஒரு நாழிகை ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

குரு பகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும் முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல் பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர் மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.

நாளை (01.05.2024) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் திட்டை திருத்தலம் சென்று வசிஷ்டேஸ்வரரையும் குரு பகவானையும் தரிசித்து நலம் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com