சலவைத் தொழிலாளியின் தியாக வரலாறு: பினாங்கு ராணி தோபி ஸ்ரீராமர் கோவில்!

இந்திய சலவைத் தொழிலாளி ராணி தோபியின் தன்னலமற்ற தியாகம், சமூக சேவை, நலத்திட்டங்களால் உருவான பினாங்கு தோபிகாட் ஸ்ரீராமர் கோவில் இன்று வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது.
ramar-temple-penang
ramar-temple-penang
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

பினாங்கு மலேசியாவில்  புகழ் பெற்ற பாரம்பரிய சலவை கிராமமாகிய  தோபி காட் பகுதியில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழமையான ராமர் கோவில்,  ராணி தோபி கோவில் என்று அழைக்கப் படுகிறது.  ராணி தோபி யார்..?

ராணி தோபி என்பவர் இந்திய சலவைத் தொழிலாளி ஆவார். சமூக சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். பினாங்கு தோபி காட் பகுதியில் பணி புரிந்து கொண்டிருந்தவர். இவரின் அயராத பணியைக்கண்ட  ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸைச் சேர்ந்த கவர்னர் ஸர் ஜார்ஜ் லீத்,  கோவில் இருக்குமிடம் மற்றும் சுற்றுப்புற நிலங்களை, ராணி தோபிக்கு 1802 ஆம் ஆண்டு பரிசாக அளித்தார் என வரலாறு கூறுகிறது.

நல்ல மனமும்,  குணமும் படைத்த ராணி தோபி, தனக்கென அந்த இடத்தை எடுத்துக்கொள்ளாமல் ராணி தோபி மெமோரியல் டிரஸ்ட் ஒன்றினை ஏற்படுத்தி, சலவைத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வசிக்க வீடுகள் மற்றும் பலவகை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அச்சமயம், தோபி காட்டிலிருந்த ராமர் கோவிலில்,  ஸ்ரீராமரின் சிலை மரத்தினால் அமைக்கப் பட்டிருந்தது.  பல வருடங்கள் சென்ற பின்பு, கற்சிலையாக  மாற்றப்பட்டது. நடுத்துறை ஸ்ரீதேவி மாரியம்மன் கோவிலும் இங்கே உள்ளது.

1967 ஆம் ஆண்டு,  இந்து அறநிலைய கட்டளையின் கீழ்  ஸ்ரீராமர் கோவில் கொண்டு வரப்பட்டது.

கோவில் விபரங்கள்

கோவிலின் பின்புறம் ஆறு ஒன்று ஓடுகிறது.  ஆடி அமாவாசை போன்ற விசேஷ நாட்களில், மக்கள் தர்ப்பணம் செய்கின்றனர்.

கோவிலில், வைஷ்ணவ முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலினுள்,  ஸ்ரீராமர், சீதாப் பிராட்டியார், லெஷ்மணன்,  அநுமார், விநாயகர், நவக்கிரகங்கள் மற்றும் ஸ்ரீராமானுஜர் ஆகியோர்களின் சிலைகள்  உள்ளன.

கோவிலில், ஸ்ரீராம நவமி, அநுமன் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 

கோவிலிலுள்ள மடப்பள்ளியில், நிவேதனத்திற்குரிய பிரசாதங்கள் மற்றும் வடைமாலை தயாரிக்கப்படுகின்றன.

கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவரெனக் கூறப்படுகிறது.

கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் 1982, 1991 ஆண்டுகளில் நடைபெற்றது.

கோவில் காலை 7. 30 முதல் பகல் 12. மற்றும் மாலை 6. 30 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கிறது.

கோவிலில் வீற்றிருக்கும் அனுமார் மிகவும் சக்தி வாய்ந்தவரெனக் கூறப்படுவதால், வடைமாலை நிவேதனம் செய்து பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அறிவியலுக்கு எட்டாத அதிசயம்: நெய் உருகாத சிவன் கோயில் எங்குள்ளது?
ramar-temple-penang

உபரி தகவல்கள்:

மும்பை மகாலெஷ்மி தோபிகாட்டைப் போலவே,  பினாங்கு ராணி தோபி காட்டிலும், இங்கிருக்கும் மரபுவழி இந்தியர்கள் பாரம்பரிய முறையில் துணிகளை கைகளால் துவைத்து  அடித்து தோய்த்து உலர்த்தி, நிலக்கரி இஸ்திரிப் பெட்டியால் இஸ்திரி போடுகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவத்தை போற்றும் வகையில்,  தி லெஜண்ட் ஆஃப் ராணி தோபி நாடகம் பினாங்கு பாரம்பரிய விழாவில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.  இதைக்காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம்.

பினாங்கில், தோபிகாட்  ராணிதோபி ஸ்ரீராமர்  கோவில் மிகவும்  பிரசித்தமானதாக விளங்குகிறது.

        ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்!

logo
Kalki Online
kalkionline.com