சூரிய பகவானை வழிபட உகந்த நாள் ஞாயிற்று கிழமை. உகந்த திதி சப்தமி. ரத சப்தமியை, மகா சப்தமி என்றும் அழைப்பது உண்டு. அப்படி ஒரு மகத்தான நாள்தான் ரதசப்தமி. ரதசப்தமி என்பது ஒரு புனித நாள் என்பதால், பொதுவாக ஆன்மிக விரத நாட்களில் தவிர்க்கப்படும் செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
ரதசப்தமி என்பது சூரிய பகவானை வணங்கி, பாவங்களைக் கழுவி, ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெருக்கிக்கொள்ளும் நாள். எனவே, அந்த நாளின் புனிதத்தைக் கெடுக்கும் செயல்களைத் தவிர்த்து, சூரியனைப் போற்றும் செயல்களில் ஈடுபடுவதே முக்கியம்.
வேத சாஸ்திரங்களின்படி, இந்த நாளே சூரிய பகவான் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. ஞானத்திற்கு கடவுளாக போற்றப்படும் சூரிய பகவானின் அவதார தினம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ரதசப்தமி அன்று நாம் செய்யும் வழிபாடு சூரிய கிரகணத்தோடு கிடைக்கும் புண்ணியத்தை விட பன்மடங்கு அதிகமான பலன்களை தரும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ரதசப்தமி பெருமாள் கோவில்களில் குறிப்பாக திருப்பதி கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த வருடம் ரதசப்தமி வரும் ஜனவரி 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருவது மிகவும் சிறப்பானது. ஏனெனில் ரதசப்தமி சூரிய பகவானுக்காக கொண்டாடப் படுவது. அன்று சூரியோதயம் சுமார் காலை 7:13 மணியாக இருக்கும்; பவித்ர ஸ்நானம் செய்ய உகந்த நேரம், சூரிய உதயத்திற்கு முன்னதாக அதிகாலை 5:26 மணி முதல் 7:13 மணி வரை உள்ளது, இந்த நேரத்தில் குளித்து சூரிய பகவானை வணங்குவது சிறப்பு.
அன்றைய தினம் காலையில் சூரியனை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று மூன்று முறை கூறி சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்யவேண்டும்.
அன்றைய தினம் 7 எருக்கம் இலைகளை நம் உடலில் வைத்து குளிப்பது பாவங்களை போக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு எருக்கன் இலையை தலையிலும், இரண்டை கண்களிலும், இரண்டை தோள்பட்டைகளிலும், கால் பாதங்களின் அடியில் இரு எருக்கன் இலைகள் என 7 எருக்கன் இலைகளையும் வைத்து குளிக்க வேண்டும்.
அதேபோல் பெண்கள் தலையில் வைக்கும் எருக்கன் இலையின் மேல் சிறிது மஞ்சள் மற்றும் அரிசியையும், ஆண்கள் அட்சதை அல்லது விபூதியையும் வைத்து கிழக்கு நோக்கி நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் கோதுமை மாவுடன் வெல்லம் கலந்து பசுவிற்கு தானம் தருவதால் ஏழு ஜென்ம பாங்களும் நீங்கும். மேலும் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு பதவி, அரசியலில் வெற்றி, அரசு வேலை, செல்வாக்கு, புகழ் உண்டாகும். கண் பார்வை பலப்படும்.
ரதசப்தமி அன்று வீட்டில் மதியம் சூரிய பகவானுக்கு 7 வகையான உணவுகளை படைத்து, விரதத்தை முடித்தால் ஏழு ஜென்மம் வரை தம்பதிகள் மிகுந்த செல்வத்தையும் யோகமுள்ள புத்திரர்களையும் பெறமுடியும் என்று புராரணங்கள் கூறுகின்றன.
குறிப்பாக 7 வகை உணவுகள் படைக்கும்போது இதில் கோதுமை ரவையில் செய்த இனிப்பு பொங்கல் இருக்க வேண்டும். ஏனெனில் சூரிய பகவானுக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே கோதுமையில் செய்த உணவை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் அசைவம், போதைப்பொருட்கள் போன்றவற்றை தவிப்பது நல்லது.
ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றை தானம் செய்வது நூறு மடங்கு புண்ணியம் தரும்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் வரும் பிறவிகளில் இதுபோன்ற நிலை ஏற்படாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.