சனி பகவான் உண்மையிலேயே நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால், அவர் நல்லவருக்கு நல்லவராகவும், கெட்டவருக்கு கெட்டவராகவும் இருக்கிறார் என்பதுதான் உண்மை. ‘சனிச்சா’ அதாவது, ‘மெதுவாக நகர்வது’ எனும் பொருள் கொண்ட சமஸ்கிருத பெயரே தமிழில் சனீஸ்வரன் என்று ஆகிவிட்டதாக அறிகிறோம். ஏனெனில், ஒரு ராசியை கடக்க சனி பகவான் எடுத்துக் கொள்வது இரண்டரை வருடங்கள். மெதுவாக நகரும் ஒரே கிரகம் இவர் மட்டுமே. அதேபோல் ஈஸ்வரர் பட்டம் பெற்றவரும் இவர் ஒருவரே என்பதும் சிறப்பு.
சனி பகவானைப் பார்த்து யாரும் அச்சம்கொள்ளத் தேவையே இல்லை. பாடம் கற்றுத்தரும் ஆசிரியரைப் பார்த்து பயப்பட வேண்டுமா? ஒழுங்காக நமது கடமைகளைச் செய்யும்போது பயம் தேவையில்லையே? அதேபோல்தான் சனி பகவானிடமும் நமது நேர்மையை நிரூபித்தால் பயப்படத் தேவையில்லை. ‘சனியை போல கொடுப்பாரும் இல்லை; சனியை போல கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. இதிலிருந்து தெரிகிறது அல்லவா சனி பகவான் கொடுப்பதில் வள்ளல் என்று. சரி, சனி பகவானுக்கு என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து நன்மை செய்வார்?
முக்கியமாக, சனிக்கிழமை சனி பகவானுக்கு பிடித்த நாள் என்பதால் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு, அதாவது கை, கால் குறைபாடு கொண்டவர்களுக்கு உதவி செய்வது சனி பகவானை திருப்தி செய்யும். வசதி இருப்போர் அவர்களுக்கு உதவும் வண்ணம் ஊன்றுகோல், வண்டிகள் போன்றவற்றை வாங்கித் தரலாம்.
சனி பகவானின் வாகனம் காகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தினமும் அல்லது சனிக்கிழமை மட்டுமாவது காகத்துக்கு உணவு படைப்பவர்களுக்கு முன்னோரின் ஆசிகளுடன், சனி பகவானின் ஆசிகளையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.
தானத்தில் சிறந்தது அன்னதானம் ஒருவர் பசி ஆறும்போது அவரது வயிறு குளிர்ந்து நமக்கு அவரது வாழ்த்துக்கள் கிடைக்கும். தானம் செய்யும்போது சனி பகவானின் மனமும் குளிர்ந்து நல்ல பலன்களைத் தருவார்.
சனி பகவானுக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்பதால், எள்ளுப்பொடி அல்லது எள்ளு கலந்த சாதத்தை வைத்து வழிபடலாம்.
சனி பகவான் சில நேரங்களில் அவமானமான, கஷ்டங்களை நமக்கு ஏற்படுத்துவார். அதைத் தடுக்க கருப்பு கலந்த வஸ்திர தானத்தை ஏழை எளியோருக்கு சனீஸ்வரர் குடிகொண்டுள்ள தலங்களில் செய்யலாம். காரணம், ஒருவருக்கு வஸ்திரம் தருவது என்பது அவருடைய மானத்தை காக்கும் செயல் என்பதால் இந்த வஸ்திர தானத்தால் சனி பகவானின் கருணை பார்வை நம் மீது விழும் என்பது ஐதீகம்.
சனி பகவானை கட்டுப்படுத்தும் கடவுளான சிவபெருமான் கோயிலுக்குச் சென்று சிவனையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, நிறைவாக நவக்கிரக சன்னிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதன் மூலம் சனி பகவானின் அருளைப் பெறலாம்.
சனி பகவானின் நண்பர்களான விநாயகர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி வழிபாடு செய்வதன் மூலம் சனி பகவானின் அருள் கிடைக்கும்.
முடிந்த போதெல்லாம் சனி பகவான் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருவதும் நலம் பயக்கும்.
சனி பகவானின் தீய பலன்களில் இருந்து தப்பிப்பதற்கும் நல்ல பலன்களைப் பெற்று மகிழவும் சனி பகவான் வீற்றிருக்கும் தலங்களுக்குச் சென்று அவரை தரிசித்து வணங்கலாம். முக்கியமாக, நல்ல எண்ணங்களுடனும் நல்ல செயல்களுடனும் இருப்போரை சனி பகவான் எந்நாளும் காத்திடுவார் என்பதை நம்புவோம்.