உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் இருக்கும் நகரம் ரிஷிகேஷ். இமய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஹரித்வாருக்கு வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கங்கை நதி இமயமலையின் சிவாலிக் குன்றுகளை நீங்கி, வட இந்தியாவின் சமவெளியில் பாய ஆரம்பிக்கும் இடம்தான் ரிஷிகேஷ். பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களை, ‘சோட்டா சார்தாம்’ என்பார்கள். அந்த நான்கு தலங்களுக்கும் செல்லும் நுழைவாயிலாக இருப்பது ரிஷிகேஷ்தான்.
‘ஹர்சிகேசா’ என்பது விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்று. ‘புலன்களுக்கு அதிபதி’ என்பது இதன் பொருள். ஸ்கந்த புராணத்தில் இந்த இடம், ‘குப்ஜம்ரக்’ என அழைக்கப்படுகிறது. அக்னிதேவன் பாப விமோசனம் அடைந்த இடமாகையால் ‘அக்னி தீர்த்தம்’ என்றும் சொல்கிறார்கள்.
ரிஷிகேஷ் என்ற பெயர் வர இன்னொரு சுவாரசியமான காரணமும் சொல்லப்படுகிறது. வேத காலத்தில் ரிஷிகள் ஒரே நாளில் அடிக்கடி கங்கையில் நீராடி வருவார்களாம். அதனால் அவர்களது கேசத்தில் இருந்து நீர் எப்போதும் சொட்டிக்கொண்டே இருக்குமாம். அதனால் இந்தப் பகுதி ரிஷிகேஷ் என்று அழைக்கப்பட்டதாம்.
கங்கை நதி ஓரமாக ஏராளமான பழைய மற்றும் புதிய ஆலயங்கள் அருள்பாலிக்கின்றன. லாஹிரி வஸ்துக்கள் மற்றும் அசைவ உணவுகளை இங்கே யாரும் பயன்படுத்துவது இல்லை.
இனி, ரிஷிகேஷின் முக்கியமான இடங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
லக்ஷ்மண் ஜூலாவைக் கடந்து கொஞ்ச தொலைவு நடந்தால் வருவது ராமேஷ்வர் மஹாதேவ் ஆலயம். ஆலயம் சிறிதுதான் என்றாலும் கம்பீரமாக இருக்கிறது. லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். லக்ஷ்மண் ஜூலா போலவே கொஞ்ச தொலைவில் ராம் ஜூலா என்னும் இரும்புத் தொங்கு பாலம் ஒன்றும் கங்கையாற்றின் மேல் இருக்கிறது. இது லக்ஷ்மண் ஜுலாவைப் போலவே இருந்தாலும், சற்றே அதைவிடப் பெரியது. 450 அடி நீளமும், ஆற்றுக்கு மேல் 59 அடி உயரமும் கொண்டது.
கங்கை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கீதா பவனில் பக்தர்கள் இலவசமாகத் தங்குவதற்காக 1,000 அறைகள் இருக்கின்றன. சொற்பொழிவுக் கூடத்தில் தினசரி ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் இங்கே தங்கி, கங்கையில் மூழ்கிய பிறகு தியானத்தில் ஈடுபடுகிறனர். மிக மலிவான விலையில் உணவுக்கும் இங்கே ஏற்பாடு செய்கிறார்கள். சாது சன்யாசிகளுக்கு இலவச உணவு மற்றும் உடைகள் வழங்கப்படுகின்றன. இங்கே இருக்கும் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து ஸ்வாமி ராம தீர்த்தர் போன்ற மகான்கள் தவம் புரிந்திருக்கிறார்கள். கங்கையில் நீராட வசதியாக இரு படித்துறைகளும் இங்கே இருக்கின்றன. சுவர்களில் புராண இதிகாசக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு இருக்கின்றன.
லக்ஷ்மண் ஜூலாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு தெற்கே கங்கைக் கரை ஓரமாகவே நடந்தால் ஸ்வர்க் ஆஸ்ரமத்தை அடையலாம். பல கோயில்கள், கடைகள், நீராடும் இடங்கள் போன்றன இங்கே அமைந்திருக்கின்றன. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்களின்போது பல சடங்குகள் இங்கே நிறைவேற்றப்படுகின்றன.
இமயமலையின் அரிய வகை மூலிகைகளையும், கங்கை நீரையும் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கும் மருத்துவமனை ஒன்றும் இங்கே சேவை செய்கிறது. மாமரங்களை இமய மலைச் சாரலில் நடுவது புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மாமரக் கன்றுகள் இங்கே நடப்படுகின்றன. ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், உணவும் அளிக்கும் சமஸ்கிருத வித்யாலயா இங்கே செயல்படுகிறது. ஆற்றோரத்தில் இருக்கும் பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தில் பாடல், பஜனைகளோடு நடைபெறும் கங்கா ஆரத்தி மிகவும் விசேஷமானது.
‘டிவைன் லைஃப் சொஸைட்டி’ என்னும் உலகளாவிய ஆன்மிக நிறுவனம் 300 கிளைகளைக் கொண்டது. அதன் தலைமையகமாக விளங்குவது ரிஷிகேஷில் இருக்கும் சிவானந்தா ஆசிரமம். ஸ்வாமி சிவானந்தர் இந்த ஆசிரமத்தை 1932ல் ஏற்படுத்தினார். சேவை மனப்பான்மையும் தொண்டு உள்ளமும் உள்ள எவரும் இந்த ஆசிரமத்தில் சேரலாம். பிறருக்கு உதவி புரிந்து வாழலாம். உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றுக்குக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அன்பர்கள் கொடுக்கும் நன்கொடை மூலம் இதனை ஆசிரம நிர்வாகம் செய்து வருகிறது.
அந்தக் காலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புண்ணிய தலங்கள் செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லையாம். நடந்துதான் போக வேண்டுமாம். எனவே, இந்த ஆசிரமத்தை ஸ்தாபித்தவர், யாத்ரீகர்களுக்கு வயிறார உணவு கொடுத்து, மலைப் பாதையில் ஊன்றி நடக்க ஒரு தடியும் கொடுப்பாராம். அதோடு போர்த்திக்கொள்ள ஒரு கம்பளியும் தந்தாராம். அந்தக் கம்பளி கருப்பு நிறத்தில் இருக்குமாம். அதனால் அவரை மக்கள் அன்போடு, ‘காலி கம்பளிவாலா’ என்று அழைத்தார்களாம். (காலி என்றால் கருப்பு என்று அர்த்தம்.) அவருக்கும் இங்கு ஒரு கோயில் இருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து 28 கி.மீ தொலைவில் நீலகண்ட மஹாதேவர் ஆலயமும், 21 கி.மீ. தொலைவில் வசிஷ்டர் வசித்த குகையும் இருக்கின்றன.
வழியெங்கும கங்கையின் தரிசனம்; உடலெங்கும் கங்கையில் நீராடிய மகிழ்ச்சி; மனமெங்கும் கங்கையின் நினைவு. ‘எந்த நீரையும் ‘கங்கை’ என்று சொன்னாலே அது பாவங்களைப் போக்கும்’ என்று பெரியாழ்வார் சொன்னதை மனம் அசைபோட்டது.