நாசிக்கை சேர்ந்த வணியில் வசித்த காகாஜி வைத்யா என்பவர் சப்தஷ்ரிங்கி தேவியின் உபாசகர். இவர் வாழ்வில் ஏற்பட்ட பல துயரங்களால் மனம் கலக்கத்துடன் இருந்த சூழ்நிலையில் ஒரு நாள் மாலை தேவியின் கோயிலுக்குச் சென்று தம்மை கவலைகளிலிருந்து மீட்குமாறு மனம் உருகி பிரார்த்தித்தார்.
தேவியும் மனம் மகிழ்ந்து அன்றிரவு அவரது கனவில் தோன்றி, "பாபாவிடம் சென்றால் உனது மனம் அமைதி அடையும்" என்றாள். ‘யார் அந்த பாபா’ என்று அறிவதற்குள் காகாஜி தூக்கம் கலைந்து எழுந்தார். தேவி தன்னை காணுமாறு பணித்த பாபா யாராக இருக்கும் என்று எண்ணியவர், பாபா சிவனாகத்தான் இருப்பார் என எண்ணி த்ரியம்பகேஷ்வரத்திற்கு சென்று பத்து நாட்கள் தங்கி தினம் அதிகாலை ஸ்ரீ ருத்ரம் ஓதி, அபிஷேகம் மற்றும் சம்பிரதாயங்களை செய்தார். அனைத்தையும் பக்தியுடன் செய்தும் முன்பு போலவே அவரது மனம் சலனமுற்றதாகவே இருந்தது.
இதனால் அவர் மீண்டும் தேவியை வேண்டினார். அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் த்ரியம்பகேஷ்வரத்திற்கு சென்றாய்? பாபா என்று நான் கூறியது சீரடியை சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாய்" என்றாள்.
சீரடிக்கு சென்று எப்படி பாபாவை பார்ப்பது என்பதே காகாஜியின் எண்ணமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அவரை அழைத்துச் செல்ல ஒருவர் அவரது இருப்பிடத்திற்கே வந்தார். அவர் வேறு யாருமல்ல, பாபாவின் நெருங்கிய அடியவரான ஷாமாவே அவர். ஷாமா தமது இளம் வயதில் தீவிர நோய்வாய்ப்பட்டார். அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான சப்தஷ்ரிங்கி தேவியிடம் தனது மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டாள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்குள் வியாதியால் பாதிக்கப்பட்ட அவள், இரண்டாவது முறையாக தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் வேண்டிக்கொள்ள, இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன.
மரணப்படுக்கையில் தனது மகன் சாமாவை அழைத்து, தனது வேண்டுதல்களை சொல்லி அவற்றை நிறைவேற்ற வேண்டுமாய் சத்தியம் வாங்கிக்கொண்டு உயிர் நீத்தாள். பின்னர் ஷாமாவும் அந்த வேண்டுதல்களை மறந்து விட்டார். முப்பது ஆண்டுகள் கடந்தபோது சீரடிக்கு வந்த ஒரு ஜோதிடர், சாமாவின் தாயார் வேண்டுதல்களை சாமாவின் குடும்பத்தினருக்கு நினைவூட்டியதோடு, வேண்டுதலை நிறைவேற்றாததால் தேவி அவர்கள் குடும்பத்தின் மீது பாராமுகமாய் இருப்பதாகக் கூறினார்.
பாபாவின் அறிவுறுத்தலின்படி தேவியை வழிபட, வணி வந்த ஷாமா, பூசாரியை தேடி காகாஜியின் வீட்டிற்கு வந்தார். காகாஜியும் அப்போது பாபாவை பார்க்க இருந்த தருணத்தில், இருவரும் தங்களின் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர் சாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றிய பின்னர் இருவரும் சீரடிக்குப் புறப்பட்டனர். காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் விழுந்த உடனே கண்கள் குளமாக, மன அமைதி உற்றார். தேவியின் உத்தரவுப்படியே பாபாவை பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாகவும் அடக்கமாகவும் மாறியது.
காகாஜியிடம் பாபா ஒன்றும் பேசவில்லை. எந்தக் கேள்வி பதிலும் இல்லை. ஆசீர்வதிக்கவில்லை. வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமான மகிழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதுவே தரிசனத்தின் பெருமை. பாபாவிடம் முழுமையாக சரணடைந்ததும் தனது கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்தார். பிறகு பாபாவிடம் உதி, ஆசிர்வாதம் பெற்று மன நிறைவுடன் வீடு திரும்பினார் காகாஜி.
குறிப்பு: சாய் சத்சரிதத்திலிருந்து…