சாக்ஷி கோபால்: பக்தனுக்காக நடந்தே வந்த கண்ணன்!

Sakshi Gopal temple
Sakshi Gopal temple
Published on

வித்யா நகர் என்ற ஊரிலிருந்து இரண்டு பிராமணர்கள் பிருந்தாவனத்திற்கு ஆன்மீக பயணம் சென்றார்கள். இந்த  இருவரில் ஒருவர் வயது முதிர்ந்தவர். மற்றொருவர் இளைஞர். பிருந்தாவனத்தில் தங்கியிருக்கையில் வயதானவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போயிற்று. அவருடன் வந்த திருமண வயதுள்ள அந்த இளைஞன் அவரை நன்கு கவனித்து  குணமடைய வைத்தான் . இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த பெரியவர் ஊர் போய் சேர்ந்ததும் தனது பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து தருவதாக கூறினார்

இதனை நம்பாத அந்த பையன், 'நீங்கள் வாக்கு மீற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?' என்று சொல்ல. அதற்கு முதியவர், 'உனக்கு அந்த கவலை வேண்டாம் வா என் கூட!' என்று அழைத்து போய் ஒரு கோயிலுக்கு கிருஷ்ண விக்கிரகம் முன்பு  சத்தியமும் செய்தார். பின்பு இருவரும் ஊர் திரும்பினர்.

முதியவர் தன்னுடைய மகளை தனக்கு உதவிய பையனுக்கு மணமுடிப்பது பற்றி உறவினர்களுடன் ஆலோசித்தார். ஆனால், அவர்கள் யாரும் அதற்கு  ஒப்புக் கொள்ளவில்லை. வேறு வழி இல்லாமல் முதியவர் பெண்ணை தனக்கு உதவி செய்த  பையனுக்கு மணமுடிக்க மறுத்து விட்டார். 'மறந்து விட்டீர்களா? நீங்கள் கிருஷ்ணர் முன்பாக செய்த சத்தியத்தை!' என்று பையன் ஞாபகப்படுத்தினான். 

ஆனால் பெரியவரோ, 'அப்படி நான் ஒன்றும் செய்யவில்லை!' என்று கூறி விட்டார். இதனால் மனமுடைந்த அந்த பையன் பிருந்தாவனத்திற்கு சென்று கிருஷ்ண விக்ரகத்திடம் அழுது முறையிட்டான். கிருஷ்ணன் மனமிரங்கி தானே அவன் ஊருக்கு வந்து சாட்சி சொல்லி அவனுக்கு அந்த பெரியவரின் பெண்ணோடு திருமணம் செய்விப்பதாக கூறி ஒரு நிபந்தனையும் வைத்தார். 

'நீ முன்னால் போக நான் வருவேன் பின்னால். திரும்பி மட்டும் நீ பார்க்க கூடாது. அப்படி நீ பார்த்தால் அந்த இடத்திலேயே நான் சிலையாக நின்று விடுவேன் சம்மதமா?' கிருஷ்ணர் கேட்டார். பையனும் ஒப்புக்கொண்டான். பையன் முன்னால் போக கிருஷ்ணர் பின்னால் நடந்தார். வித்யா நகரின் எல்லைக்கு வந்து விட்ட நிலையில் கிருஷ்ணரின் கால் சலங்கை ஒலி நின்று விட்டது. பையன் கிருஷ்ணர் விதித்த நிபந்தனையை ஒரு கணம் மறந்து திரும்பி பார்த்து விட்டான்.

அப்படி அவன் செய்த மறுகணமே பின்னால் வந்த கிருஷ்ணர் சிலையாகி விட்டார். பையன் ஊருக்குள் ஓடி சென்று கிருஷ்ணரே தனக்கு சாட்சி சொல்ல வந்தார் என்பதையும் தான் அவர் விதித்த நிபந்தனையை மீறி  அவர் வருகிறாரா என்று பார்த்ததால் ஊர் எல்லையிலேயே சிலையாக நின்று விட்டதையும் சொன்னான். ஊர் மக்களுடன் கிருஷ்ணர் நிற்கும் இடத்திற்கு வந்த பெரியவர் தான் எந்த கிருஷ்ண விக்கிரகத்தின் முன் பையனுக்கு வாக்கு கொடுத்தாரோ அதே விக்ரகம் கண்ணெதிரே நிற்பதை கண்டு ஆடி போய் விட்டார்.

இதையும் படியுங்கள்:
'பாவாடம்': தன் நாக்கை அறுத்து, வடபழனி முருகனுக்கு காணிக்கை செலுத்திய பக்தர்!
Sakshi Gopal temple

பின்பு என்ன? பையனுக்கும், பெரியவரின் மகளுக்கும் திருமணம் நடந்தேறியது. சாட்சியாக வந்து வித்யா நகரின் எல்லையில் நின்ற கோபால் விக்ரஹத்தை ஒடிசாவுக்கு கொண்டு வந்து பூரிக்கு அருகே நிறுவி கோவிலும் கட்டினார் புருஷோத்தம தேவா என்ற அரசன். இன்றும் அந்த கோவில் சாக்ஷி கோபால் கோவில் (Sakshi Gopal temple) என்று அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com