சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழா!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழா!

சேலம் வாழ் மக்களுக்கு மட்டுமின்றி, அவ்வூரைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் காவல் தெய்வமாக, கவலைகளைத் தீர்த்து கருணை புரியும் அன்னையாகத் திகழ்பவள் சேலம் கோட்டையில் வீற்றிருக்கும் கோட்டை பெரிய மாரியம்மன். சுமார் 500 ஆண்டுகள் வரலாற்றைச் சான்றாகக் கொண்டு அருளாட்சி புரியும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் திருப்பணிகள் கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நடைபெற்று வந்த இந்தத் திருப்பணிகள் சற்று தாமதமானாலும், தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவுற்று, அருள்மிகு மாரியம்மனின் திருவருளால் நாளை காலை மகாகும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

கோயிலின் பழைமையும் பெருமையும் மாறாத வகையில், கோயில் திருப்பணிகள் நடைபெற்று புத்தம் புதிய பொலிவுடன் திகழும் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும், காவல்துறை அதிகாரிகளும் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இந்த கும்பாபிஷேக திருவிழாவைக் கண்டு களிக்க டிஜிட்டல் திரைகள், மக்கள் வந்து செல்ல வசதியாக போக்குவரத்து மாற்றங்கள், நெரிசல் இன்றி தரிசிக்க ஏற்பாடுகள்,  வாகனங்கள் நிறுத்த தனி இடங்கள் என கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் சேலம் நகரில் ஜோராகக் களைகட்டி இருக்கிறது.

கும்பாபிஷேகப் பெருவிழா நாளை 27ம் தேதி காலை நடைபெறும் நிலையில், கடந்த 18ம் தேதி கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், புதிய கொடி மரம் நடும் நிகழ்ச்சி போன்றவற்றோடு  துவங்கியது. தொடர்ந்து, புனித தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் போன்றவையும் சிறப்பாக நடைபெற்றன. இதில் செண்டை மேளம் முழங்கிட, நடைபெற்ற ஊர்வலத்தில் யானை, குதிரை, பசு மீதும் தீர்த்தக் குடங்கள் வைத்து கொண்டு செல்லப்பட்டன. நகரின் பல பகுதிகளைச் சுற்றி வந்த ஊர்வலம் இறுதியாக மாரியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, கணபதி வழிபாடு, சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, முதல்கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நாளை காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னிதி விமானம் மற்றும் கொடிமரத்துக்கு சமகாலத்தில் கும்பாபிஷேக வைபவம் நடைபெற உள்ளது.

அதையடுத்து, காலை 8.30 மணி முதல் மகாகணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத விநியோகம் நடைபெறும். நாளை மறுநாள் 28ம் தேதி மாலை தங்க ரதம் புறப்பாடு நடைபெற உள்ளது.

கோட்டை மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான வசதிகள், பலத்த போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஒளிரும் புதுப்பிக்கப்பட்ட இராஜ கோபுரம் சேலம் மக்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com