முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும் முதல்வராக விளங்கும் விநாயகரே அனைத்து தெய்வங்களின் பிரதிநிதியாக, அனைவருக்கும் பிடித்தமானவராக வலம் வருகிறார் . விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடப்பாகம் அன்னை பார்வதியின் அம்சமாகவும், வலப்பாகம் சூரிய பகவானின் அம்சமாகவும், மூன்று கண்கள் சிவபெருமானின் அம்சமாகவும் கருதப்படுவதால் இவரை வணங்கினாலே மற்ற தெய்வங்களின் அருளுக்கும் பாத்திரமாகிறோம்.
விநாயகப் பெருமானுக்கான விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. பிரதி மாதம் பௌர்ணமிக்கு பிறகு நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தியாகக் கடைபிடிக்கப்படுகிறது. ‘சதுர்’ என்றால் வடமொழியில் நான்கு என்று பொருள். வருடம் முழுக்க சதுர்த்தி நன்னாள் வந்தாலும் ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபடுவது வாழ்வில் நாம் வேண்டும் காரியங்களை தடையின்றி நிறைவேற்றித் தரும்.
சங்கடம் என்றால் காரியங்களில் ஏற்படும் இக்கட்டுகள் அல்லது தடைகள் ஆகும். ‘ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். நாம் ஒரு செயலைத் துவங்கி அதை எவ்விதத் தடங்கல்களும் இன்றி வெற்றிகரமாக முடிப்பதென்பது மாபெரும் சவால்தான். இந்த சங்கடங்களை அழித்து வெற்றியைத் தருவது சங்கடஹச சதுர்த்தி விரதம்.
தனது அழகால் கர்வம் கொண்டு விநாயகரின் உருவத்தை கேலி செய்த சந்திரனின் கர்வத்தை அடக்க விநாயகர் இட்ட சாபமான தேய்மானம் நீங்கவும், தோஷங்கள் அகலவும் சந்திரன் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து கடுமையான விரதம் இருந்து, அவரது மன்னிப்பு கிடைக்கப்பெற்று கலைகள் எனும் பிறைகள் வளரத் துவங்கியதாகப் புராணச் செய்திகள் கூறுகின்றன. சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது இந்நாளில் என்பதால்தான் இவ்விரதம் இருப்பவர்கள் சந்திர தரிசனம் பெற்று அவரைப் போல் பிரச்னைகள் அகன்று வாழ்வில் வளர்ச்சி அடைய வேண்டுகிறார்கள்.
ஒருசமயம் இந்த விரதத்தின் பலனை அறிந்து அன்னை பார்வதி தேவியே இவ்விரதத்தை மேற்கொண்டு பரமேஸ்வரனை அடைந்ததாக புராணம் கூறுகிறது. நம் தலையெழுத்தை சீர் செய்யும் நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் எனப்படும் அங்காரகன், விநாயகரை வழிபட்டு, சங்கடஹர விரதம் இருந்து அவரது கருணையால் பல மங்கலங்களைப் பெற்று செவ்வாய் கிரகம் எனும் அந்தஸ்தைப் பெற்றதாகவும், அதன் காரணமாகவே செவ்வாயன்று வரும் இந்த விரதம் மேலும் சிறப்புப் பெறுகிறது.
சங்கடஹர சதுர்த்தி அன்று, ‘காரியசித்தி மாலை’ எனப்படும் விநாயகர் தோத்திரங்களை எட்டு முறை அவர் சன்னிதியில் ஒருமுகமாக நாம் எண்ணிய காரியங்களில் சித்தியை தர வேண்டினால் நிச்சயம் காரிய சித்தியுடன் சகல மங்கலங்களும் வாழ்வில் ஏற்படும் என்பது உறுதி.
நம்புவோருக்கு இனிய வாழ்வை அருளுபவரும் அன்புடன் தொடரும் உயிர்களை பாகுபாடின்றி இடர்களைக் களைந்து நற்கதிக்கு இட்டுச் செல்பவருமான விநாயகரை வணங்கி சிறப்புடன் வாழ்வோம்.