திருச்சேய்ஞலூர் என்பது சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு பகுதி. பெருமை மிகுந்த இப்பகுதியில் எச்சதத்தன் என்பவருக்கும் பவித்திரை என்பவருக்கும் மகனாக உதித்தார் விசார சருமர். இவர் சிறு பருவத்திலேயே சிவ பக்தி நிறைந்திருந்தார். வேதம் முதலியவைக் கற்று வித்தகராக விளங்கினார். ஒரு சமயம் இடையன் ஒருவன் ஒரு பசுவினை கோலால் அடித்தான். அது கண்டு விசார சருமர் மனம் வருந்தி அவ்வூரார் அனுமதியுடன் தாமே பசுக்களை மேய்த்து வந்தார்.
பசுக்களும் கன்றுகளை மறந்து விசார சருமரை விட்டு நீங்காமல் அன்பு நிறைந்தனவாய் தாமே பால் சொரியலாயின. அதனைக் கண்ட விசார சருமர் அந்தப் பாலால் சிவ பூஜை செய்ய எண்ணினார். ஓர் அத்தி மரத்தின் கீழ் மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்தார். அதனைச் சுற்றி திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் மண்ணினாலேயே உருவாக்கினார். சிவ பூஜைக்கு பசுக்கள் பால் சொரிந்தாலும் அதன் உரிமையாளர்களுக்கும் பால் நிறைவாகவே கிடைத்தது. ஆனால், சிவ பூஜை கண்ட ஒருவன் விசார சருமர் பாலை வீணாக மணலில் ஊற்றி விளையாடுகிறார் என்று ஊரில் உள்ளவரிடம் கூறினான்.
ஊரார் எச்சதத்தனிடம் இதனைக் கூற, மகனின் பூஜையை நேரில் கண்டவர் ஆத்திரத்தோடு விசார சருமரின் முதுகில் ஓங்கி அடித்தார். ஆனாலும், விசார சருமர் தொடர்ந்து பூஜை செய்ய, கோபத்துடன் பால் குடங்களை காலால் உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த விசார சருமர் அருகில் இருந்த கோலால் தனது தந்தையின் காலை துண்டாக்கினார். தொடர்ந்து பூஜையில் ஈடுபட்ட விசார சருமரின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் உமாதேவி சமேதராக அவருக்குக் காட்சியளித்தார். அதோடு, ‘இனி யாமே உனக்குத் தந்தையானோம்’ எனக் கூறி,
திருத்தொண்டர்களுக்குக்கெல்லாம் தலைவராக்கி சண்டீச பதவியை அளித்தருளினார்.
சிவ பூஜையின் பலனாலும், இறைவனின் அருளாலும் தந்தையை தண்டித்த பாவம் சண்டேஸ்வரரை சேரவில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சண்டேசர் அனைத்து சிவாலயங்களிலும் அருள்புரிகிறார். குறிப்பாக, எல்லா சிவாலய சன்னிதியிலும் சண்டேஸ்வரர் உருவச்சிலை மட்டும்தான் காணப்படும். ஆனால், திங்களூர் திருவையாறு வட்டம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் மட்டும் சண்டேஸ்வரர் தாயார் பவித்திரையுடன் அருள்பாலிக்கிறார். இது மிகச் சிறப்பான ஒரு அம்சம். திங்களூர் சென்று சந்திர பகவானுடன் சண்டேஸ்வரரையும் வழிபட உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.