- மணிமேகலை
கடவுள் முதல் மனிதன் வரை யார் பெரியவர் என்ற சர்ச்சை காலங்காலமாக இருந்துகொண்டே வருகிறது. இதை மறுக்கும் விதமாக அனைவரும் சமம் என்ற கருத்தை உலகிற்கு கடவுளே வந்து சொன்ன தலம் தான் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் கோவில்.
சங்கன் மற்றும் பதுமன் என இருநாகங்கள் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள். சங்கன் என்ற நாகம் தான் வணங்கும் சிவனே சிறந்தவர் என்றும், பதுமன் நாகம் தான் வணங்கும் அரியே சிறந்தவர் என்றும் சண்டையிட்டனர். இருவரும் ஊசி முனையில் சிவனை வேண்டி தவம் செய்யும் யோகினி எனும் கோமதி அம்பாளிடம் சென்று முறையிட்டனர். கோமதி அம்பாளும் சிவனிடம் வேண்டினார். அவரும் வேண்டுதலுக்கு இணங்க சங்கரநயினாராக உலகிற்கு காட்சியளித்தார். அதாவது பாதி உருவம் சிவனாகவும் (சங்கரன்), மறுபாதி உருவம் அரியாகவும் ( நயினார்) காட்சியளித்தார். இரு கடவுளுமே சமம் என உணர்த்தினார்.
ஸ்தல வரலாறு:
பொருநை ஆற்றின் கரையில் உள்ள மணலூரை ஆட்சிசெய்தவர் மன்னர் உக்கிரபாண்டியர். ஒருநாள் மன்னர் உக்கிரபாண்டியணின் யானை திடீரென தரையைக் குத்தி கீழே புரண்டது. மன்னன் செய்வதறியாது திகைத்து நின்றான். அப்போது, காவற்பறையன் ஓடி வந்து காட்டில் பாம்பு புற்றை இடித்த போது அங்கு சிவலிங்கம் தென்பட்டதை கூறி மன்னனை அழைத்துச் சென்றான். அங்கு சங்கரனார் (சிவன்) அசரீரியாக காட்சியளித்து கோவில் எழுப்ப சொன்னார். மன்னனும் காட்டை நாடக்கி கோவில் கட்டி அதைச் சுற்றி ஊரும் எழுப்பினார். இந்த ஊரே சங்கரநயினார்கோவில் என அழைக்கப்பட்டு பின் மருவி சங்கரன்கோவில் ஆனது.
கோவிலின் சிறப்பம்சம்:
இந்த கோவிலில் சங்கரனார், சங்கரநயினார் மற்றும் கோமதி அம்பாளுக்கு என்று தனிச் சந்நிதிகள் உள்ளன.
தாட்சாயினி தேவி தனது தந்தையான தச்சன் கொடுத்த இந்த உடல் வேண்டாம் என நெருப்பில் தன்னை எரித்துகொள்வார். அவரின் எறிந்த உடலை தனது கைகளில் ஏந்தி சிவன் கோபத்துடன் ஊழிதாண்டவம் புரிவார். அதைத் தடுக்க நாராயணர் தாட்சாயினியின் உடலை 57 துண்டுகளாக்கி சிவனை சாந்தப்படுத்துவார். பூமியில் விழுந்த 57 துண்டுகளும் 57 சக்தி பீடங்களாயின.
அதிலிருந்து விழுந்த இரத்தமும் சதையும் உப சக்திபீடங்கள் ஆகின. அதல் ஒன்றுதான் இங்குள்ள கோமதி அம்மன் சந்நிதி. கோமதி அம்பாள் சந்நிதிக்கு அருகே உள்ள புற்றுமண் சிறப்பு வாய்ந்தது. இதை நெற்றியில் திருநீராக பூசுவார்கள். கோமதி அம்பாளின் பிரசாதமாக இந்தப் புற்றுமண் விளங்குகிறது.
ஆடித்தபசு திருவிழா:
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சிவன் தன்னை வேண்டி நிற்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநயினாராக காட்சியளித்த நாளே ஆடித் தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 10 நாள் கோமதி அம்பாள் வீதியில் அருள்பாளிப்பள். 11வது நாள் சங்கரர் காட்சி தரும் நிகழ்வுடன் இந்த திருவிழா நிறைவுறும்.