சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேறியதும் ஏராளமான பக்தர்கள் கோயில் பிராகாரத்தை 108 சுற்று சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். ஆடித்தவசு திருவிழாவின் முதல் நாள் தொடங்கி, அம்பாள் திருக்காட்சி கொடுக்கும் தவசு காட்சிக்கு முன்னதாக இந்த 108 சுற்றையும் சுற்றி முடித்துவிடுவார்கள். வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடிச்சுற்று சுற்றுவார்கள். 108 சுற்று சுற்றினால் நம்முடைய கவலைகள் ஓடிப் போகும். கஷ்டங்கள் விலகிப் போகும். நினைத்தது நடக்கும். வாழ்வில் தள்ளிப்போகும் சுப நிகழ்வுகள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலுக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. சங்கரநாராயணர் சன்னிதியில் அரியும் சிவனும் இணைந்து நிற்கும் கோலம் வேறு எங்கும் பார்க்க முடியாதது. சிவன் அபிஷேகப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர். இருவரும் ஓருடலாய் இருப்பதால் சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலுக்கு வந்த சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிவனுக்கு அபிஷேகம் செய்யாமல் இருக்கக் கூடாது எனக் கூறி சந்திர மௌலீஸ்வரர் ஸ்படிக லிங்கத்தை வழங்கி தினமும் அபிஷேகம் செய்து வருமாறு கூறினர். அதன் பிறகு தினமும் சங்கரநாராயணர் சன்னிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு பால், பன்னீர் போன்ற அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்திராஷ்டம காலங்களில் நல்ல காரியங்களைச் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்த நாட்களில்தான் செய்ய வேண்டிய நிலை வரும் பட்சத்தில் சந்திரமௌலீஸ்வரரை வணங்கினால் அந்தத் தடை விலகும் என்பது ஐதீகம்.
பழந்தமிழர்கள் கலை மற்றும் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதனை நூல்களின் வாயிலாகவும் கல்வெட்டுகளின் வாயிலாகவும் நாம் அறிகிறோம். 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் கலைநயமிக்க ஓவியங்களும் சிற்பங்களும் நிறைய உள்ளன. இக்கோயிலில் புராண, இதிகாசங்களை வெளிப்படுத்தும் வண்ண ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக சங்கரநாராயணர் சன்னிதியில் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கின்ற பெருமாள் ஓவியம் மூலிகைகளால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்றும் அதன் நிறம் மங்காமல் தெளிவுற காட்சி அளிக்கிறது. சங்கரநாராயணர் சன்னிதியை சுற்றி கலையை பறைசாற்றும் வகையில் வண்ண ஓவியங்கள் புராணங்களை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளன. முத்கல புராணமும் தத்துவ நிதியும் கணபதிக்குரிய 32 வகைப்பட்ட வடிவங்களை வரையறுத்தன. இவற்றுள் 11 வடிவங்கள் சங்கரநாராயணர் கோயில் ஓவியங்களில் திருக்காட்சி தருகின்றன. இதனால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஓவியக் கூடமாக திகழ்கிறது. அரிய மூலிகைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள் இந்த கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எத்தனை மணி நேரம் ஆனாலும் காத்திருந்து அன்னை கோமதியை வழிபட்டுச் செல்கின்றனர். காரணம் வேண்டுவதை வழங்குபவளாக இந்த அம்பிகை இருக்கிறாள். கோமதி அம்பாள் சன்னிதியில் கோமதி அம்பாளுக்கு நேர் எதிரே அற்புதங்கள் நிகழ்த்தும் ஸ்ரீசக்கர குழிஇருக்கிறது. இந்தத் திருக்குழியில் அமர்ந்து எதை நினைத்து தியானம் செய்கிறோமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாவடுதுறை ஆதீனம் பத்தாவது குரு மகா சன்னிதானம் வேலப்ப தேசிகரால்அருளி செய்யப்பட்டு செப்புத் தகடு அதில் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர குழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது வேலப்ப தேசிகரின் அருள்வாக்கு. இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீ சக்கர குழியில் அமர்ந்து தியானம் செய்யாமல் செல்வதில்லை.
கோமதி அம்பிகை சன்னிதியில் உள்ள புற்று மண் பிணி தீர்க்கும் மாமருந்தாகும். கை கால் வலி, உடலில் கட்டி, தலைவலி போன்ற பல்வேறு உடல் பாதைகளுக்கு இந்த புற்று மண்ணை பூசினாலே தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீராத வியாதிகளையும் விரட்டும் சக்தி புற்று மண். அன்னையின் சன்னிதியில் நம் பாதம் பட்டாலே பட்ட கஷ்டங்கள் ஓடோடி போகும். வாழ்வில் தள்ளிப்போகும் அனைத்து நிகழ்வுகளும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.