‘சர்மகஷாயம் என்றால் என்னவென்று தெரியுமோ?’

‘சர்மகஷாயம் என்றால் என்னவென்று தெரியுமோ?’
Published on

ரு சோம வார தினத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் காஞ்சி மகாபெரியவரை தரிசித்து கும்பாபிஷேகப் பத்திரிகையை சமர்ப்பித்து ஆசி கோரி நின்றார்கள். கும்பாபிஷேகப் பத்திரிகையை பார்த்த மகாபெரியவர், அந்தப் பத்திரிகையின் கடைசி பாராவில், ‘சர்மகஷாயத்தால் திருமுழுக்குச் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததைப் படித்தார்.

அதையடுத்து, “சர்மகஷாயம் என்றால் என்ன?” என்று பொதுவாக அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் மகாபெரியவர். மடத்துத் தொண்டர் ஒருவர், “அது தமிழ்ச் சொல் மகாபெரியவா” என்று பதில் கூறினார்.

உடனே மகாபெரியவர், "இங்கே தமிழ் படிச்சவா யாராவது இருக்காளா?" என்று கேட்டார்.

அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவரை முன்னிறுத்தி, ”இவர் நன்கு தமிழ் படித்தவர்” என்று கூறினார்கள்.

மகாபெரியவர் அவரிடம், “புலவரே! சர்மகஷாயம்னா என்ன?" என்று கேட்டார்.

'‘சுவாமி, அது வடமொழிச் சொல். நான் பொருள் அறியேன்" என்று பவ்யமாகக் கூறினார்.

"அது சம்ஸ்கிருதச் சொல்தான். அந்தக் கஷாயத்தை எப்படிச் செய்கிறார்கள்? என்று தெரியுமா?” என்று கேட்டார்.

அதைத் தொடர்ந்து அங்கு ஒரு பெரிய அமைதி நிலவ, மகாபெரியவரே பேச ஆரம்பித்தார். "பால் துளிர்க்கும் மரங்களின் பட்டைகளைச் சேகரித்து, இடித்து, தண்ணீரில் போட்டு, ஒரு மண்டலம் நன்றாக ஊற வைப்பார்கள். அந்தக் கஷாயத்தைக் கலசங்களில் நிரப்பி, வேதிகையில் வைத்து, ஒவ்வொரு கால வழிபாட்டிலும் பூஜிப்பார்கள். அந்த மரப்பட்டைக் கஷாயத்தைக் கொண்டு, சில மூர்த்தங்களையும், கும்பங்களையும் அபிஷேகம் செய்வார்கள்" என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளிவிட்டு, அனைவருக்கும் புரியும் விதத்தில் மகாபெரியவர் விளக்கியது அங்கிருந்தவர்களைச் சிலிர்க்க வைத்தது!

மேலும், தொடர்ந்து பேசிய மகாபெரியவர், "பால் துளிர்க்கும் மரம் என்றால் என்னவென்று தெரியுமோ?" என்று கேட்டுவிட்டு, ஆலமரம், அரசமரம், அத்தி, பலா இதெல்லாம்!" என்று அவரே விளக்கினார்.

மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அன்று அங்கிருந்தவர்கள் அதை நேரில் கண்டு பரவசத்தில் உறைந்துபோயினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com