கேரளம் மாநிலம், திருச்சூரில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோயில் பல்வேறு அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. குருவாயூரில் அருளும் குட்டிக் கிருஷ்ணனின் அற்புத மகிமைகளை பல்வேறு புராணக் குறிப்புகள் விவரிக்கின்றன. அவற்றில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் அருளாடல் மகிமை ஒன்றை நாரத புராணத்தில் காண முடிகிறது.
ஒரு சமயம் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் எதிர்பாராத தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் கோயிலின் மரச்சுவர்கள், துண்கள் போன்றவை பெருத்த சேதமடைந்தன. அதன் பிறகு ப்ரஸ்னம் பார்க்கப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் உத்தரவுப்படி, தீயில் சேதமுற்ற மரச்சுவர்கள் மற்றும் தூண்களுக்கு மாற்றாக தீப்பிடிக்காத கருங்கற்களால் ஆன சுவர்கள் மற்றும் தூண்களை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, தமிழகத்தில் இருந்து தலைசிறந்த சிற்பிகள் சிலர் குருவாயூர் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர். கோயில் நிர்வாகிகளின் ஆலோசனைப்படி மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் வடிக்கப்பட்டன. அவற்றில் மகாவிஷ்ணுவின் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இடம்பெறும் கம்ச வதக் காட்சியை பிரதிபலிக்கும் சிற்பத்தை ஒரு தூணில் வடித்திருந்தார் சிற்பி.
இப்படிக் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாள், சிறுவன் ஒருவன் சிற்பக் கூடத்துக்கு வந்து, அங்கே இருந்த தலைமை சிற்பியிடம், ‘கிருஷ்ணனை வேணுகோபாலனாக வடித்திருக்கும் கற்தூணை இங்கே வையுங்கள்’ என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டுக் காண்பித்துக் கூறினான்.
அதைக் கேட்டு அதிசயித்த அந்தத் தலைமைச் சிற்பி, ‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை எந்தத் தூணிலும் வடிக்கவில்லையே’ என்றார். உடனே அந்தச் சிறுவன் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு அந்தச் சிற்பியை அழைத்துச் சென்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் ஒரு சிற்பத் தூணை அவரிடம் காண்பித்தான்.
அதைக் கண்டு வியப்படைந்த அந்தத் தலைமைச் சிற்பி, உடனே தம்முடன் வந்த அந்தச் சிறுவனை திரும்பிப் பார்த்தபோது, சிறுவன் அங்கு காணவில்லை. பிறகுதான் அந்தச் சிற்பி உணர்ந்தார், அங்கு வந்த அந்தச் சிறுவன் சாட்சாத் அந்தக் குட்டிக் கிருஷ்ணன்தான் என்பதை. அதன் பிறகென்ன, அந்த மாயக் கண்ணன் கூறியபடியே வேணுகோபாலனாக ஸ்ரீ கிருஷ்ணன் விளங்கும் அந்த சிற்பத் தூண் அங்கே நிறுவப்பட்டது. இந்தத் தூண் ஸ்ரீ குருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கு நிறுவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த கம்ச வதத் தூண் கோயிலின் உட்பிராகாரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.