

உணவை ருசியாக சமைத்தால் மட்டும் போதாது, அதை பரிமாறும் விதத்தில் இருந்தும், சாப்பிடும் விதத்தில் இருந்தும் அனைத்திற்கும் ஒரு முறை உள்ளது. சமைக்கும்பொழுது நல்ல மனநிலையில் கோப தாபங்கள் இல்லாமல் சமைக்கும் உணவு அதிகமாக ருசிக்கும். அதுபோல, உணவு சாப்பிடும்போது பேசாமல், இடையே தண்ணீர் குடிக்காமல், நன்கு மென்று பொறுமையாக சாப்பிட, வாழ்க்கையில் ஆயுள் நீடிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடாத சில தவறுகள் உள்ளன.
சாப்பாடு பரிமாறும்பொழுது மிகவும் கவனமாக கீழே சிந்தாமல் பரிமாற வேண்டும். காரணம், உணவுப் பருக்கைகள் கீழே சிந்தினால் வறுமை ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பரிமாறும்பொழுது அன்னத்தை (சாதம்) மட்டுமல்ல உப்பு, தயிர், ஊறுகாய் போன்றவற்றையும் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாதம் என்பது அன்ன லட்சுமியையும், உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. ஊறுகாய் என்பது குபேரனுக்கு உகந்ததாகக் கூறப்படுகிறது. குபேரனுக்கு உகந்ததாகக் கூறப்படும் ஊறுகாயை கீழே சிந்தி விடாமல் பரிமாற வேண்டும்.
இப்படிப்பட்ட பொருட்களை கீழே சிந்தாமல் பரிமாறுவதும், அதை சாப்பிடுபவர்கள் கீழே இரைக்காமலும் இருக்க வேண்டும். சாப்பிடும் எந்த உணவுப் பொருட்களையும் கீழே சிந்தாமல் கவனமாக பரிமாறுவதும், சாப்பிடுவதும் பண பற்றாக்குறையை ஏற்படாமல் காக்கும்.
பெரும்பாலும், சாப்பிடுபவர்கள் செய்யும் பெரிய தவறுகளில் ஒன்று உணவை வீணாக்குவதாகும். உணவை வீணாக்குவது என்பது அன்னலட்சுமியை பழிப்பது போன்று. எனவே, உணவைத் தேவையான அளவு போட்டுக்கொண்டு, வீணாக்காமல் சாப்பிடுவதே நல்லது. அத்துடன் சாப்பிடும்பொழுது சிலர் ஒரு கையை நிலத்தில் ஊன்றிக்கொண்டு சாப்பிடுவார்கள். இப்படிக் கையை ஊன்றிக் கொண்டு சாப்பிடுவதால் நம் சக்தி அத்தனையும் விரயமாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
நெய், உப்பு இரண்டையும் இடது கையால் எடுத்துப் பரிமாறக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, சாப்பிட அமரும் முன்பு தட்டில் ஒரு ஓரமாக சிறிது உப்பை வலது கையால் எடுத்து வைத்துக் கொண்டு, தேவைப்பட்டால் உபயோகிக்கலாம்.
சாப்பிட அமரும்பொழுது தெற்கு திசையை நோக்கி உட்காராமல் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணுவதே சிறப்பு. அதிலும் குறிப்பாக, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறப்பு. அத்துடன் சிலர் சாப்பிட்டு முடித்ததும் எழுந்து விடாமல் கை மற்றும் தட்டு உலரும் வரை அப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இது தவறான பழக்கம்.
பரிமாறும்பொழுதும், சாப்பிட்ட பிறகும் தட்டும், கைகளும் உலரும் வரை அப்படியே அமர்ந்திருக்கக் கூடாது. சாப்பிட்டவுடன் அந்த இடத்தில் இருந்து எழுந்து கைகளை கழுவி விட வேண்டும். சிலர் சாப்பாட்டு தட்டில் கைகளை கழுவுவதை பார்த்திருப்போம். இது மிகவும் தவறான பழக்கம். இது நம் வீட்டின் செல்வ நிலையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே தட்டில் கைகளை கழுவாமல் எழுந்து சென்று கை, கால்களை கழுவிக்கொண்டு வருவதுதான் சரியான பழக்கம்.