குருஷேத்திரப் போர் முடிந்திருந்த சமயம். போரில் வீர மரணம் அடைந்தவர்களின் ஆன்மா நல்லபடியாக சாந்தியடைய, பெரிய யாகம் ஒன்றை நிகழ்த்த இருந்தார்கள். அதில் அவிர்பாகம் யார் யாருக்குக் கொடுக்கலாம் என்கிற ஒரு பட்டியலும் அவர்களிடம் இருந்தது. யாகத்தில் கலந்து கொள்வதற்காக அனைவரும் அந்த அரண்மனையில் கூடியிருந்தார்கள். அப்பொழுது பகவான் கிருஷ்ணர் அரண்மனைக்குள் நுழைந்தார். யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து இருந்ததை கவனித்தார்.
"யுதிஷ்டிரா, யாக ஏற்பாடுகள் பலமாக இருக்கின்றனவே. யாகத்தில் அவிர்பாகத்தை யாருக்கு முதலில் கொடுக்கப்போகிறாய்" என்று கேட்டார்.
"வா கிருஷ்ணா, உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். என்ன கேள்வி இது? யாருக்கு முதலில் கொடுக்க முடியும். நம் பீஷ்மாச்சாரியாருக்குத்தான் முதல் பாகத்தை கொடுக்க வேண்டும். இதில் என்ன சந்தேகம்."
"என்ன பீஷ்மருக்கா? அவருக்கு எதற்காக அவிர்பாகத்தை முதலில் கொடுக்க வேண்டும்? சகுனிக்கு அல்லவா முதலில் கொடுக்க வேண்டும்?"
"கிருஷ்ணா என்ன கூறுகிறாய்? அந்த கிராதகனுக்கா கொடுக்க வேண்டும்? வீர மரணம் அடைந்த வீரர்களுக்குத்தானே முதலில் கொடுக்க வேண்டும்."
"வீர மரணம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? பகைவனுடன் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டு உயிர் துறந்தால் வீர மரணம் என்று அர்த்தமில்லை. தான் ஏற்றுக்கொண்ட கொள்கையினை திறம்படச் செய்வதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் எல்லாவற்றையும் முறியடித்து விட்டு, எத்தனையோ தியாகங்களைச் செய்து, அதற்குப்பின் தனது லட்சியம் நிறைவேறிய திருப்தியை அடைந்து, மரணம் எய்துபவர்களே வீர மரணம் எய்தியவர் என்று பொருள். அந்த வகையில் எல்லோரையும் விட சகுனியே வீர மரணம் அடைந்தவர் என்று கொள்ள வேண்டும். அதனால் முதலில் அவருக்குக் கொடுப்பதுதான் சரியானது."
பஞ்சபாண்டவர்களுக்கு கிருஷ்ணரின் கூற்று அறவே பிடிக்கவில்லை. கிருஷ்ணரின் மேல் உள்ள வெறுப்பை அவர்களின் கண்களே காட்டிக் கொடுத்தது.
"கிருஷ்ணா, சகுனி தனது எண்ணத்தை சாதித்து விட்டார் என்றா சொல்கிறாய்? எங்களை அழித்துவிட்டாரா? கௌரவர்கள்தான் அழிந்தார்கள். நாங்கள் நலமாகத்தானே இருக்கிறோம். இதில் எப்படி அவருடைய லட்சியம் நிறைவேறியது என்று கொள்ள முடியும்?"
"உங்களின் உற்றார், உறவினர் என்பவர்கள் அழிந்து போனார்கள். முக்கியமாக உங்கள் வாரிசுகள் நிலைக்கவில்லை. அவர்களையும் சகுனி தனது தந்திரத்தால் அழித்துவிட்டான். இனி உங்களுக்கு வாரிசு என்பதே இல்லாமல் போனது. இனி நீங்கள் எல்லாம் நடைப்பிணங்கள்தான். சரிதானே நான் கூறுவது."
"அதெல்லாம் சரிதான். ஆனால், எங்களை அழிப்பதை விட துரியோதனனுக்கு வெற்றி வாங்கித் தருவதையே சகுனி தனது கொள்கையாக வைத்திருந்தார். அந்தக் கொள்கை சகுனிக்கு நிறைவேறவில்லையே. பின்பு எப்படி அவரின் லட்சியம் நிறைவேறியது என்று கூறுவாய், கண்ணா?"
"சகுனிக்கு நீங்கள் மட்டுமே பகைவர்கள் இல்லை. உங்கள் ஐவரைத் தவிர, அந்தப் பக்கம் நூறு பேர்களுமே சகுனிக்கு பகைவர்கள்தான்."
இதைக் கேட்டதும் திருதராஷ்டிரர், பாண்டவர் எல்லோருமே அதிர்ந்து போயினர்.
"என்னது, கௌரவர்கள் சகுனிக்கு பகைவர்களா?" என்றார் திருதராஷ்டிரர்.
"ஆம். அவனுக்கு நூற்றைந்து பேர்களுமே பகைவர்கள்தான். ஆனால், தன் ஒருவனால் அனைவரையும் அழிக்க முடியாது என்பதால், கௌரவர்களிடம் கூட்டுச் சேர்ந்து, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தி, கௌரவர்கள் மூலம் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி."
மேலும் தொடர்ந்தார், "உங்கள் பிள்ளை துரியோதனனை கொன்றதற்காக பீமனை கொல்ல நினைத்தீர்கள். தன் பிள்ளை அபிமன்யுவை, ஜெயத்ரதன் கொன்றான் என்பதனால் அவனைப் பழி வாங்கினான் அர்ஜுனன். பாஞ்சாலியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக துரியோதனனை பீமன் கொன்றான். இப்படி பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்ட நீங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றால் சகுனி உங்களையெல்லாம் விட நல்லவன்தான். ஏனென்றால், உங்கள் குலத்தவரால் சகுனியின் கண் எதிரிலேயே அவனுடைய குடும்பத்தினர் ஆகாரம் இன்றி பட்டினியால் வாடி ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தார்கள். அதனால் அவன் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வேரறுக்கத் திட்டம் வகுத்தான். அதன் செயல்பாடுகளே அவன் நடந்து கொண்ட விதம்."
"நாங்கள் காந்தார தேசத்து ராஜவம்சத்தினருக்கு எந்தத் தீங்குமே செய்ய வில்லையே. பின் ஏன் எங்கள் மேல் காந்தார இளவரசன் சகுனிக்கு அத்தனை ஒரு கோபம் கண்ணா?" என்றார் திருதராஷ்டிரர்.
"இந்த நாள் வரை அந்த ரகசியம் நானும் பீஷ்மரும் மட்டுமே அறிந்ததாக இருந்தது. இப்பொழுது அதைக் கூறுகிறேன். ஜாதகப்படி காந்தாரிக்கு திருமணம் முடிந்தால் அவள் கணவன் அகால மரணம் அடைந்து விடுவான் என்று அறியப்பட்டது. ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி காந்தார அரசர், தனது மகள் காந்தாரிக்கு ஒரு ஆட்டுக் கிடாவை வைத்து முதல் திருமணத்தை நடத்தி முடித்தார். பிறகு ஆட்டுக்கிடாவை வெட்டி அவளை விதவை ஆக்கினார். இதை, தனது சகோதரனான திருதராஷ்டிரனுக்காக பெண் கேட்டு வந்த பீஷ்மரிடம் காந்தார அரசன் சுபலன் மறைத்தான். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை மணம் செய்து வைத்தான். தன் குலம், ஏமாற்றப்பட்டதை அறிந்து வெகுண்டார் பீஷ்மர். அதனால் அனைவரையும் சிறையில் அடைத்து, ஆகாரம் இன்றி தவிக்க விட்டார். அதனால் சுபலன், சகுனியைத் தவிர பலரும் மாண்டு போனார்கள்.
இப்பொழுது கூறுங்கள், பீஷ்மர் மிகவும் நல்லவரா? தனது ராஜ்யத்தில் அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதனால் காந்தார இளவரசன் சகுனி இம்மாதிரி ஒரு முடிவு எடுத்ததில் என்ன தவறு இருக்க முடியும்? எப்படி இருந்தாலும் பிஷ்மரை விட சகுனியே சிறந்தவன். இறக்கும் தருவாயில் சகுனியின் தந்தை சுபலன், ‘தனது விரல்களை வெட்டி எடுத்துக்கொண்டு தாயக்கட்டைகளாக்கி, சூதாட்டம் ஆடினால் மனதில் நினைக்கும் எண்களாகத் தோன்றுவேன். புத்தி சாதுரியம் கொண்டு கௌரவர்கள் மூலம் அக்குலத்தையே நிர்மூலமாக்கு’ என்று தந்தை கூறிய வார்த்தைகளை சிரமேற்கொண்டு, தான் ஏற்றுக்கொண்ட சபதத்தை நிறைவேற்றிக் காட்டினான். அவனே வீரமரணம் எய்தியவன். அதனால் அவனுக்குத்தான் யாகத்தில் முதல் பாகத்தைக் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்" என்று கூறி முடித்தார்.
அரங்கத்தில் அனைவரும் தலையை கவிழ்த்துக் கொண்டார்கள். "கிருஷ்ணா நீ சொல்லுவதை மறுத்து நாங்கள் எது செய்தாலும் தவறாகத்தான் முடியும். ஆகையால், நீ சொன்னபடியே யாகத்தில் சகுனிக்கு முதல் பாகத்தை அளித்து விடுகிறோம்" என்று ஏகக்குரலில் கூறினார்கள்.