சுரைக்காய் சித்தர் 1700ம் ஆண்டு தோன்றி, 1902ம் ஆண்டு வரை இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது இயற்பெயர் சு.ராமசாமி என்பதாகும். சுரைக்காய் சித்தர் தனது தலையில் பெரிய தலைப்பாகை கட்டியவராய், சமய வேற்றுமை பாராட்டாதவராய், சில நேரம் திருமண் நாமமும், சில நேரம் திருநீறும் அணிந்து காட்சி தருவார்.
இரு பெரிய சுரை குடுவைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக இவர் எப்போதும் அவற்றை தன்னுடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய் சித்தர் என அழைக்கப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். தோளில் சுரைக் குடுவைகள் கட்டிய காவடி, ஒரு கையில் தடி, இன்னொரு கையில் இரு நாய்களை பிணைத்திருக்கும் கயிறுகளை பிடித்தபடி இவர் வலம் வருவார்.
தன்னை நாடி வருபவர்களின் துயர் நீக்குபவராகவும், வாயில்லா ஜீவன்களிடம் அன்பையும் கருணையும் பொழிபவராகவும் இருந்தார் சுரக்காய் சித்தர். இவருக்கு பல சீடர்கள் இருந்தனர். இவர்களில் மங்கம்மா தாயாரின் சமாதி சுரைக்காய் சித்தர் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் எனும் ஊரில் உள்ள நாராயணவனம் எனும் இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருத்தணிக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்த புத்தூருக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்தான் நாராயணவனம். தனது இறுதி காலத்தில் இங்கே தங்கி வாழ்ந்தவர்தான் சுரைக்காய் சித்தர்.
1902ல் ஆகஸ்ட் மாதம் சுரைக்காய் சித்தர் கடைசி முறையாக சென்னைக்கு வந்தார். இங்கு ஒரு வாரம் தங்கி விட்டு, மீண்டும் நாராயணவனத்திற்கே திரும்பிவிட்டார். நாராயணவனத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்கும் பராசரேஸ்வரர் கோயிலுக்கும் அருகில் இந்த சித்தர் கோயில் உள்ளது. சித்தர் சமாதிக்கு மேல் சித்தரின் கற்சிலை வடிவம் உள்ளது. கருவறைக்கு மேல் அழகிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறைக்கு முன்புறம் ஒரு அக்னி குண்டம் எப்பொழுதும் எரியும் நிலையில் உள்ளது. சித்தர் பயன்படுத்திய சுரைக் குடுவைகள், தடி, பாதக்குறடு போன்றவை இங்கே வைக்கப்பட்டுள்ளன. தினமும் இந்த சித்தர் சமாதியில் அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. சமாதியை மூன்று முறை பக்தர்கள் வலம் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி போன்ற தினங்களில் விசேஷ அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் போன்றவை நடைபெறுகின்றன. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய் கட்டுகின்றனர். சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டு மரங்களை வெட்டி வந்து கொளுத்தி குளிர் காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயை சூழ்ந்து உட்காருவார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொண்டு எரிக்கப்படுகின்றன. இது மக்கள் உடல் நோயை தீர்க்கும், வெற்றியை தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் பூசிக் கொள்கின்றனர்.
தினமும் காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 மணி வரையும் சுரைக்காய் சித்தரின் ஜீவசமாதி திறந்திருக்கிறது.