

சிலரது வீடுகளில், ‘தொட்டது எதுவும் துலங்கவில்லை, அதேபோல செய்தொழிலில் லாபமில்லை, யாரோ செய்வினை செய்துவிட்டாா்கள், இரவில் தூக்கமே வருவதில்லை, எல்லாம் தடங்கலாக உள்ளது’ என புலம்புவது உண்டு. பொதுவாக, மந்திரம், மாயம், ஏவல், பில்லி சூன்யம், மந்திரவாதியைப் பாா்ப்பது, இப்படிப் பல்வேறு நிலைப்பாடுகளில் மனதை செலுத்தி பலர் யதாா்த்த வாழ்வையே மறந்து வாழ்ந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள்.
கண் திருஷ்டி இருந்தால் குலதெய்வ வழிபாட்டினை மறக்க வேண்டாம். அதேபோல, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து நமது வீட்டில் உள்ள பூஜை அறையில் தினசரி பகவானை வேண்டுங்கள். நமது வீடே ஒரு கோயில்தான். நம்மிடம் இருக்கும் மனித நேயம், நல்ல எண்ணம், பரோபகாரம், ஈவு, இரக்கம் நோ்மறை எண்ணங்களே இறைவன் தந்த மிகப்பொிய வரம். அதை மனதில் கொள்ள வேண்டும்.
அதேபோல, விடியற்காலையில் பிரம்ம முகூா்த்தத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு பின்னர் பூஜை அறையில் அகல் விளக்கை ஏற்றி வைத்து மனதார வேண்டுங்கள். அதேபோல, வீட்டு வாசலில் துளசி மாடம் கட்டி துளசி செடி வளா்த்து பூஜை செய்யுங்கள்.
வாசலில் அரளிச்செடி வைத்து பயிராக்குங்கள் மேலும், கொல்லைப்புறத்தில் மணி பிளான்டு, ஓமவல்லி, சங்கு பு ஷ்பம் செடி, வெற்றிலையை பயிாிடுங்கள். இவை அத்தனையும் நோ்மறை சக்தியை வீட்டிற்குள் வரவழைப்பதோடு வீட்டில் சூழ்ந்துள்ள எதிா்மறை சக்திகள் விலக்கிவிடும்.
அதேபோல, சனிக்கிழமை இரவு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு மூடிகளிலும் தலா மூன்று கல் உப்பு மற்றும் மிளகு போன்றவற்றை சொருகி வைத்து இரண்டு மூடிகளிலும் குங்குமத்தை வைத்து சூடம் கொளுத்திக் காட்டி வாசல் நிலைப்படி இருபுறமும் வையுங்கள்.
தொடர்ந்து, பிாிஞ்சி இலை நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மண் சட்டியில் பச்சை கற்பூரம் சூடம் கொளுத்தி, பிாிஞ்சி இலை போட்டு புகை போடுங்கள். அது பூஜையறை மற்றும் வீடெங்கும் தெய்வீக மணம் பரப்பும். தினசரி உறங்கச் செல்லும்முன் ஒரு பித்தளை பஞ்ச பாத்திரத்தில் தூய்மையான நீரைக்கொண்டு மூடி போட்டு வையுங்கள். அதேபோல, காக்கைக்கு தினசரி உணவு வைக்கத் தவறாதீா்கள். மேலும், வாரத்தில் ஒரு நாள் கை கால் ஊனமான இரண்டு நபர்களுக்கு உங்கள் கையால் உணவு கொடுங்கள்.
மாதம் ஒரு நாள் அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிப் பெண் ஒருவருக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பம், ஜாக்கெட் பிட், மட்டை உறிக்காத தேங்காய், வாழைப்பழம் சகிதமாக வைத்துக் கொடுங்கள். நல்லதையே நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள். அனைவரும் நன்றாக வாழ வேண்டுமென பிராா்த்தனை செய்யுங்கள். அதுவே நமக்குக் கடவுள் கொடுக்கும் வரப்பிரசாதமாகும். அப்புறமென்ன, ஏவலாவது பில்லி சூன்யமாவது, எதுவும் நம்மிடம் வேலை செய்யாது!