

வீட்டுப் பெரியவர்கள், ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். குறிப்பாக, சின்னக் குழந்தைகளுக்கு மற்றவர் கண் படக் கூடாது என்று மை எல்லாம் இட்டு வைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது கண் திருஷ்டி பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் உண்டாகும் பாதிப்பும் அதிகம் என்பதால்தான் பெரியவர்கள் அனுபவத்தில் கண் அடி படக் கூடாது என்று திருஷ்டி சுத்தி போடுவார்கள்.
ஃபேக்டரி, ஆபீஸ், கடை என அனைத்து இடங்களிலும் கூட கண் திருஷ்டி வரலாம். அதனால்தான் கடைகளிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும் அமாவாசை தினங்களில் பூசணிக்காயில் திருஷ்டி வைத்து கழிப்பது வழக்கமாக உள்ளது. சின்னக் குழந்தைகளுக்கு ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் திருஷ்டி சுத்தி போடுவார்கள். குழந்தையின் மீதிருக்கும் கண் திருஷ்டியைப் போக்க, கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை clock wise மற்றும் anti clock wise முறையில் சுற்றுவார்கள்.
கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சிவப்பு மிளகாய், வீடுகளின் ஓலைக்குச்சிகள் இவை அனைத்தும் திருஷ்டி கழிக்கப் பயன்படும். இதன் மூலம் கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. அதாவது, பெரியோர்களின் கருத்தின்படி, கல்லால் அடி வாங்கினாலும் ஓரிரண்டு நாட்களில் குணமாகி விடும். ஆனால், இந்த கண்ணடி என்கிற கண் திருஷ்டி இருக்கிறதே, அது முழுவதுமாக ஒருவரை ஆட்டி படைத்து விடும் என்பதே ஆகும்.
கண்ணடி என்றால் என்ன?
வாழ்க்கையில் நாம் எல்லோருமே பொதுவாக இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒருசிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு காலதாமதமாகக் கிடைக்கிறது. வேறு சிலருக்கு கிடைத்தாலும் அது கை நழுவிப் போய்விடுகிறது. பல பேர் எதுவும் கிடைக்காமலேயே ஏமாற்றத்தோடு வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் நினைத்ததை, கனவில் கண்டதை பெறாவிட்டால் நமக்கு துக்கமாக இருக்கும்.
அதேசமயத்தில், நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போது அதிக மன உளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது எரிமலையாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணங்களின் தோற்றம்தான் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல், மனதில் எழும் தீய குணங்களை நம் முகமே அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். ஆகவேதான் ஒருசிலரை பார்த்தாலே, ‘அய்யோ… இவன் / இவள் பார்த்து விட்டார்களா? இனி காரியம் ஆன மாதிரிதான் என்று புலம்புவார்கள்.
இந்த கண் திருஷ்டியானது மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்குகள், செடி கொடிகள் என எல்லாவற்றையும் பாதிக்கும். உதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு மரத்தில் பூக்களோ அல்லது காய்களோ நிறைய தொங்கி, அதைப் பார்த்து யாராவது ‘அய்யோ… இப்படிக் காய் காய்த்திருக்கு... எத்தனை பூ பூத்திருக்கு...’ என்று கூறும்போது சில சமயங்களில் நாம் கண் கூடாகவே பார்த்திருப்போம், அந்த மரம் அடுத்த சிறிது நாட்களிலேயே இறந்து விடும். ஒருவேளை யாராவது கல்லால் அடித்து அந்தக் காயை பறித்திருந்தால் வெறும் காய்களோடு முடிந்து விடும், மரத்திற்கு எந்த விதமான சேதமுமாகாது.
நம்முடைய கண்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சிற்கு அத்தனை ஆற்றல் இருக்கிறது. சில சமயங்களில் நம்முடைய கண்ணடியே சில நஷ்டங்களையோ, தோஷங்களையோ உண்டாக்கலாம். ஆகவேதான், நம் முன்னோர்கள் தினசரி பூஜையில் அன்றாடம் கற்பூர ஆரத்தி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். கற்பூரத்தின் மூலமாகக் கிடைக்கும் ஒளியால் நம் வீட்டிலிருக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களும் நீக்கப்படும்.
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், நம்முடைய எண்ணம் நன்றாக இருந்தால் அதுவே போதுமானது. நம்மால் நமக்கும் தீமை வராது, மற்றவர்களுக்கும் ஏதும் நேராது.
