கடன் தொல்லை மற்றும் திருமண தடை நீக்கும் சிங்கிரிகுடி நரசிம்மர் பரிகார முறைகள்!

ஒரே மூலஸ்தானத்தில் 3 நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் அரிய ஆன்மீக அதிசயமாக இத்தலம் விளங்குகிறது.
சிங்கிரிகுடி நரசிம்மர் - Singirikudi Narasimhar
சிங்கிரிகுடி நரசிம்மர் - Singirikudi Narasimhar
Updated on

டலூர் அருகே சிங்கிரிகுடியில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், அஷ்ட நரசிம்மர் தலங்களில் ஒன்றாகும். 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்யும் உக்கிர நரசிம்மர், ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது, பல்லவ–சோழ–விஜயநகர கால வரலாறு, பரிகார தலமாக திருமண தடை, கடன் தொல்லை நீங்கும் நம்பிக்கை ஆகியவை இத்தலத்தின் சிறப்புகள்.

16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்யும் உக்கிரமான கோலத்தில் மூலவர் காட்சி தரும் பழமையான இக்கோவில் பிரசித்தி பெற்ற 'அஷ்ட நரசிம்மர்' தலங்களில் ஒன்றாகும்.

மூலவர் - உக்கிர நரசிம்மர்

உற்சவர் பிரகலாதவரதன்

தாயார் - கனகவல்லித் தாயார்

விமானம் - பாவன விமானம் தீர்த்தங்கள் - ஜமதக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம், பிரபு தீர்த்தம் என 5 தீர்த்தங்கள் உள்ளன.

புராண பெயர் - கிருஷ்ணாரண்ய சேத்திரம்

தல விருட்சம் - வில்வம்

வரலாறு:

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமை அடையாத கல்வெட்டு ஒன்று இக்கோவில் தூணில் கண்டறியப் பட்டுள்ளது. இத்தலம் 6ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் சோழர்கள் மற்றும் விஜயநகர அரசர்களால் திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளது. ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி.1051ஆம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது. மார்கண்டேய புராணத்தில் இத்தலம் நரசிம்ம வனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்:

இங்குள்ள மூலவர் நரசிம்மர் இரணியனை வதம் செய்த 16 திருக்கரங்களுடன் உக்கிர கோலத்தில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். நரசிம்மர் 16 கைகளுடன் காட்சி தரும் இரண்டு தலங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது. சிங்கிரிகுடி நரசிம்மர், பூவரசன் குப்பம் மற்றும் பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மூல மூர்த்திக்கு கீழே இடது புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியவர்கள் உள்ளனர்.

வடக்கு நோக்கியவர்களாக சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இரண்டு நரசிம்மர்கள் காணப்படுகிறார்கள். இப்படி ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது தமிழகத்தில் இங்கு மட்டுமே என்பது தனிச்சிறப்பாகும்.

சிங்கிரிகுடி நரசிம்மர் - Singirikudi Narasimhar
சிங்கிரிகுடி நரசிம்மர் - Singirikudi NarasimharAI Image

இக்கோவில் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவில் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்து சுவாமி, தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ராஜகோபுரம், கருவறை விமானம், கொடி மரம் ஆகியவற்றை ஒருசேர தரிசிக்க முடியும்.

இக்கோவிலில் வசிஷ்டர் நரசிம்மரைக் குறித்து தவமியற்றியதாக சொல்லப்படுகிறது. பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது என்றும் தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரார்த்தனை:

இது ஒரு பரிகார தலமாகும். இங்குள்ள நரசிம்மரை வழிபட திருமண தடை, எதிரிகளின் தொல்லை போன்ற சகல தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷத்தன்றும் நரசிம்மரை தரிசிக்க குறைகள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு வரும் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற நெய் விளக்கு ஏற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
சிங்கிரிகுடி நரசிம்மர் - Singirikudi Narasimhar

திருவிழாக்கள்:

சித்திரை மாதம் நரசிம்ம ஜெயந்தி அன்று தேர்த் திருவிழா நடைபெறும். மாசி மகத்தன்று தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு, கருட சேவை போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் கனகவல்லித் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

எங்குள்ளது?

கடலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பாண்டிச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 2 கிலோமீட்டர் செல்லவேண்டும்.

கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம் சிங்கிரிகுடி தலத்தின் ஆன்மீக ரகசியங்களையும், கடன் பிரச்சனை மற்றும் திருமணத் தடைகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளையும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com