தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான கோயில், திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ள அருள்மிகு தங்காதலி சமேத ஸ்ரீ வாசீஸ்வரர் கோயில் ஆகும்.
மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் ஆதிசங்கரர் தமது கையால் கல்லில் வரைந்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இந்த ஸ்ரீசக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, ஈசனை மணமுடிக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமே இக்கோயில். ‘தன் காதலியே, நான் வந்து விட்டேன்’ என சிவபெருமான் கூறியதால் இக்கோயிலில் அருளும் அம்பிகை, ‘தங்காதலி’ என அழைக்கப்படுகிறார்.
திருப்பதி வேங்கடாஜலபதி குபேரனிடம் வாங்கிய கடனைத் தீர்க்க இக்கோயிலில் அருளும் 11 கணபதியை வணங்கி வழிபட, அவரது கடன் தீர்ந்ததாக வரலாறு. இந்தக் கோயிலில் ஐயாயிரம் வருடங்கள் பழைமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளேதான் சிவன் சுயம்புவாகத் தோன்றினார். மேலும், இத்தல ஈசனை மூங்கில் புதரின் அடியில் இருந்து எடுக்க வாசி என்ற கோடரியை பயன்படுத்தியபோது, அது லிங்கத் திருமேயில் பட்டு இரத்தம் வழிந்தது. ஆதலால் இத்தல ஈசன் வாசீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அதோடு, இத்தல சிவலிங்கத்தை தொடாமல்தான் பூஜை செய்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே, பிரதோஷத்தின்போதும் இதர உத்ஸவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். இக்கோயிலில் அம்பாள் சிவனுக்கு வலப்புறம் இருந்து அருளுவதால் இது திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.
ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட குறுநில அரசன் ஒருவன் வரி கட்டத் தவறியதால் கரிகால மன்னன் பெரும்படையோடு குறுநில மன்னனோடு போருக்கு வந்தான். இதனால் குறுநில மன்னனுக்கு ஆதரவாக, இத்தல அம்பிகை, காளி உருவில் வானிலிருந்து அம்பு மழை பொழிந்ததால் கரிகால மன்னனின் பெரும்படை அழிந்தது. மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக சிவபெருமான் காளியை விநாயகர் மூலம் கட்டி வைத்தார் என்பது வரலாறு.
அந்தக் காளிக்கு இக்கோயிலில் தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலைக் கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் இத்தலத்துக்கு வருகை புரிந்ததற்கான அடையாளம்தான் அவர் தம் கையால் வரைந்த ஸ்ரீசக்கரம்.