ஐயன் சிவபெருமான் அருளும் ஐம்பெரும் அம்பலங்கள்!

Chidambaram Nataraja
Chidambaram Natarajahttps://tamil.oneindia.com
Published on

சிவபெருமானின் திருத்தலங்களில் மிகவும் விசேஷமானது ஐயன் நடராஜர் நடனக் கோலத்தில் எழுந்தருளியுள்ள ஐம்பெரும் அம்பலங்களாகும். இத்தலங்களில் ஸ்ரீ நடராஜரின் நடனம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐம்பெரும் அம்பலங்களில், பொன்னம்பலம் சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும், இரத்தின அம்பலம் திருவாலங்காட்டிலும், தாமிர அம்பலம் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலிலும், சித்திர அம்பலம் குற்றாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயிலிலும் உள்ளன.

பொன்னம்பலம் கனகசபை என்றும், வெள்ளியம்பலம் இரஜத சபை என்றும், இரத்தின அம்பலம் இரத்தின சபை என்றும், தாமிர அம்பலம் தாமிர சபை என்றும், சித்திர அம்பலம் சித்திர சபை என்றும் பஞ்ச சபைகளாக வழங்கப்படுகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொன்னம்பலம் அல்லது கனகசபை என்று பெயர் கொண்டது. இந்தக் கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும். நினத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை, திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி இதெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்பவை. ஆனால், தரிசித்தாலே முக்தியருளும் தலம் பற்றி தெரியுமா? அது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருத்தலம் ஆகும்.  இதில் ஸ்ரீ நடராஜருக்கருகில் ஸ்ரீ சிவகாமியம்மை வீற்றிருக்கிறார். இதில் நடராஜரின் நடனக்கோலம் ஆனந்தத் தாண்டவமாகும். இங்கு நடராஜர் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாத முனிவருக்கும் ஒரு தைப்பூசத் திருநாளன்று ஆனந்தத் தாண்டவம் ஆடிக் காட்டியதாகக் கூறப்படுகிறது.  இச்சபையில் ஆடியதால் சிவனுக்கு பொன்னம்பலத்தான், பொன்னம்பலநாதன் என்னும் திருநாமங்கள் ஏற்பட்டன.

வெள்ளியம்பலம் அல்லது இரஜத சபை என்பது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுள்ள நடராஜர் சன்னிதியாகும். பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி நடனமாடும் ஸ்ரீ நடராஜர், இங்கே வலது காலை தூக்கி நடனமாடுகிறார். இதை சந்தியா தாண்டவம் என்று கூறுகிறார்கள். வெள்ளியாலான அம்பலம் (அரங்கம்) என்பதால் இதற்கு வெள்ளியம்பலம் என்று பெயர் வந்தது. சிவனின் மிக முக்கியமான திருவிளையாடல்கள் நடைபெற்ற இடம் மதுரையேயாகும்.

Thiruvalangadu Natarajar
Thiruvalangadu Natarajarhttps://www.unmaiseithigal.page/

ரத்தின அம்பலம் அல்லது இரத்தின சபை என்பது திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இங்கேயுள்ள ஸ்ரீ நடராஜரின் கோலம் ஊர்த்தவ தாண்டவ கோலமாகும். இங்கேயுள்ள சிவனுக்கு இரத்தின சபாபதி  என்னும் திருநாமமும் உண்டு.

தாமிர அம்பலம் அல்லது தாமிர சபை என்பது திருநெல்வேலியில் ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜர் அருள்பாலிக்கும் இடம். இந்த நடராஜருக்கு சந்தன சபாபதி என்னும் திருநாமமும் வழங்கப்படுகிறது. இங்கே நடைபெறும் தாண்டவத்தை, 'திருத்தாண்டவம்' என்று குறிப்பிடுகின்றனர்.

Thirukkuttalanathar
Thirukkuttalanatharhttps://natarajar.blogspot.com

குற்றாலத்தில் திருக்குற்றாலநாதர் திருத்தலத்தில் சித்திர அம்பலம் அல்லது சித்திரசபை என்னும் ஸ்ரீ நடராஜர் நடனமாடும் அரங்கம் உள்ளது. இங்கே நடைபெறும் தாண்டவத்தை 'திரிபுர தாண்டவம்' என்று கூறுகிறார்கள்.

இந்தத் திருத்தலங்களின் முக்கியமான விசேஷம், 'ஆருத்ரா தரிசனம்' ஆகும்.  அதாவது, வருடந்தோறும் மார்கழி மாத பௌர்ணமியன்று திருவாதிரை நட்சத்திரம் வருகிறது. இந்தத் திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு மிக உகந்த நட்சதிரம்.  முதல் நாள் இரவு எல்லா சிவாலயங்களிலும் நடராஜருக்கு விடிய விடிய அபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் காலை ஆருத்ரா தரிசனம் நடை பெறும். ஆருத்ரா தரிசனத்தைக் காண்பது மிகவும் விசேஷம். இந்த வருடம் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெறுகிறது. இன்று அருகேயுள்ள சிவன் கோயிலில் ஐயன் சிவபெருமானை தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com