பொதுவாக, சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க திருமேனியாக மட்டுமே காட்சி தருவார். மிக அரிதாக ஒருசில கோயில்கள் மட்டுமே உருவகமாகக் காட்சி தருவார். நவக்கிரகங்களுக்கு அருள் செய்வதற்காக பல்வேறு இடங்களில் சிவன் கோயில் கொண்டிருந்தாலும், அந்தக் கோயில்களில் எல்லாம் மூலஸ்தானத்தில் சிவனும் நவக்கிரகங்கள் தனிச் சன்னிதியிலும் அமைந்திருப்பர். ஆனால், சிவனுடன் நவக்கிரகங்கள் இணைந்து காட்சி தருவது மிகவும் அரிதாகும்.
அப்படி சிவபெருமான் பாப கிரகங்களான ராகு மற்றும் கேதுவை தனது இரு கரங்களிலும் தாங்கியபடி கட்சி தருவது எங்குமே காண முடியாத திருக்கோலம் ஆகும். இப்படிப்பட்ட அபூர்வ திருக்கோலத்தில் சிவபெருமானையும் ராகு கேதுவையும் காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் ஜவஹர்லால் நேரு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோயில் தரிசிக்கலாம்.
இக்கோயிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், அவர் ராகு, கேதுவை தனது இரு கரங்களில் ஏந்தியிருக்கிறார். மற்றும் ஒரு சிறப்பாக ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார்கள்.
இதுபோன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவபெருமானையும் ராகு கேதுவையும் நாம் வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளில் மூலவர் ஸ்ரீ மகாகாளீஸ்வரரை சுற்றி அமைந்துள்ளது சிறப்பு.
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்திற்காக இங்கு மாகாளீஸ்வரரைபிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அதனால் இக்கோயில் ராகு கேது பரிகாரத் தலமாக திகழ்கிறது. இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை துதிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷங்கள் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.