இந்து கடவுளர் சிலர் வாகனமும் அவற்றின் வரலாறும்!

Hindu god and vehicle
Hindu god and vehicle
Published on

ந்து புராணத்தில் கடவுள்கள் தம் பக்தர்களை சோதிப்பதற்காகவும், அவர்களை அசுரர்கள் போன்ற எதிரிகளிடமிருந்து காக்கவும் என பல்வேறு சூழ்நிலைகளில் பல அவதாரம் எடுத்துள்ளதை நாம் கேட்டும் படித்தும் அறிந்துள்ளோம். அவர்களில் சரஸ்வதி, துர்கா, முருகன் போன்ற சில முக்கியமான கடவுள்கள் முறையே அன்னம், சிங்கம், மயில் போன்ற பறவைகளையும் மிருகங்களையும் தங்கள் வாகனங்களாக நிரந்தரமாக தங்களுடன் வைத்துக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட 9 கடவுள்களையும் அவர்கள் உடனிருக்கும் வாகனங்களின் வரலாறு பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.

1. கஷ்டங்கள் தரக்கூடிய தீய சக்திகளை அழித்துத் தம் பக்தர்களைக் காப்பதற்கென்று உருவெடுத்த கடவுள் துர்கை அம்மன். ஒருசமயம் அவர் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தபோது சிங்கம் ஒன்று அவரின் பாதுகாப்பிற்காக தவக்காலம் முழுக்க அவரின் அருகிலேயே இருந்துள்ளது. சிங்கத்தின் பக்தியால் ஈர்க்கப்பட்டு அன்று முதல் அந்த சிங்கத்தைத் தம் கூடவே வைத்துக் கொண்டதோடு, தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார் அம்பாள்!

2. படிப்புக்கும் அறிவுக்கும் அதிபதி சரஸ்வதி. இவரது வாகனம் அன்னப்பறவை. அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பார்த்து பாலை மட்டும் அருந்தக்கூடிய திறன் கொண்டது. இதேபோல், நல்லவை கெட்டவைகளையும் பிரித்தறியும் ஆற்றல் அன்னப்பறவைக்கு உண்டு என்று உணர்ந்து அதைத் தனது வாகனமாக வைத்துக் கொண்டார் சரஸ்வதி.

3. செல்வத்தை வாரி வழங்கும் கடவுள் மகாலக்ஷ்மி! ஆந்தையும் தாமரை மலரும் இவரின் வாகனமாக உள்ளன. ஆந்தையின் இரவில் மிளிரும் அறிவு, புத்திக்கூர்மை மற்றும் அச்சமூட்டும்  தோற்றம் ஆகியவற்றால் கவரப்பட்டு அதைத் தனது வாகனமாக வைத்துள்ளார் லக்ஷ்மி தேவி. பக்தியை வளர்ப்பதில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுவதற்கு, நீண்டிருக்கும் வேரை நீருக்குள் வைத்துக் கொண்டு நீருக்கு மேலே வந்து பூக்கள் தரும் தாமரை மலருடன் எப்பொழுதும் காட்சி தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

4. சிவபெருமானின் வாகனம் காளை (நந்தி). கடும் தவம் செய்து சிவனின் அன்பைப் பெற்று இந்த இடத்தைப் பிடித்துள்ளது நந்தி பகவான்.

5. உலகையே தனது ஆளுமைக்குள் வைத்திருக்கும் கடவுள் மகாவிஷ்ணு. இவரது வாகனமாக விளங்குவது மிகவும் சக்தி வாய்ந்த பறவையான கருடனாகும். கருடன் காஷ்யப முனிவருக்கும் வினதைக்கும் மகனாக இருந்த காலம் தொட்டே அதற்குக் கடவுள் விஷ்ணுவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

6. முழுமுதற் கடவுளான பிள்ளையாரின் வாகனம் 'மூஞ்சூரு' எனப்படும் எலி. துர்குணம் கொண்ட தேவதை ஒன்று இவரிடம் எலி வேடம் பூண்டு அடைக்கலம் தேடி வந்துள்ளாள். வந்த நாள் முதல் விநாயகரிடம் அவள் காட்டிய விசுவாசத்தைப் பாராட்டி, அவளைத் தன் வாகனமாக நிரந்தரமாக  ஏற்றுக்கொண்டார் விநாயகர்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் உண்டாகும் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் இதுதாங்க!
Hindu god and vehicle

7. சிவபெருமானின் உக்கிரமான அம்சம் கொண்ட கடவுள் காலபைரவர். கருப்பு நிறம் கொண்டதொரு பயங்கரமான நாய் இவரின் வாகனமாகும். இந்த நாயின் விழிப்புணர்வையும் விசுவாசத்தையும் கண்டு அதுவே தனக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கும் என்ற முடிவுடன் அதைத் தனது வாகனமாக வைத்துக் கொண்டார்.

8. முருகப் பெருமானின் முத்தான வாகனம் மயில். இந்த மயில், அசுரர்களை எதிர்த்துப் போராடி முருகன் வெற்றி அடைந்தபோது அவருக்குக் கடவுள் விஷ்ணுவிடமிருந்து கிடைத்த அரிதான பரிசு.

9. தேவர்களுக்கெல்லாம் தலைவனாக உள்ளவர் இந்திரன். இவரின் வாகனம் ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை. இந்த தெய்வீக யானை, தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளி வந்தது. அன்று முதல் இந்த யானை இந்திரனுடன் இணைந்து அவரது வாகனமாக இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com