பூஜையறை பராமரிப்புக்கான சில எளிய டிப்ஸ்!

Some simple tips for puja room maintenance
Some simple tips for puja room maintenance
Published on

சொந்த வீடோ, வாடகை வீடோ எதுவானாலும் ஒவ்வொரு வீட்டின் ஆன்மாவாகக் கருதப்படுவது, கிட்டத்தட்ட கோயிலுக்கு நிகரானது பூஜையறை எனலாம்! நம் மனதில் அமைதியும் நேர்மறை எண்ணங்களும் ஏற்பட்டு வாழ்வில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் பெருக நம்முடைய பூஜை அறையில் மனமார்ந்த பக்தியோடு நாம் செய்கின்ற இறை வழிபாடுகளே காரணம்!

பூஜையறையின் அமைப்பும் சூழலும் அமைதியாக, தூய்மையாக இருப்பதுதான் அதற்கான அழகையும் தெய்வீகத்தையும் அளித்து உயிரோட்டத்தைப் பெருக வைக்கும். பூஜை அறையின் நேர்த்தியும் அழகும் ஒருங்கமைந்திருந்தால்தான் இறைவனை பக்தியோடு வழிபடும்போது மனம் ஒருநிலைப்படும், கண்களின் வழியே மனதிலும் அது பிரதிபலிக்கும். பூஜையறையை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்!

1. பூஜை அறையை புனிதமான இடமாக பாவிக்க வேண்டுமே தவிர, தேவையற்ற பொருட்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது.

2. உங்கள் வீட்டில் இறைவனை வழிபடும் அமைப்பு பூஜையறையாக இருந்தாலும் சரி, தனி அலமாரியாக இருந்தாலும் சரி, வாரம் ஒருமுறை கட்டாயமாக கல் உப்பு போட்ட தண்ணீரில் சுத்தமாக துடைக்க வேண்டும். பின்னர் தூய்மையான நீரில் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும்.

3. பெரும்பாலும் கண்ணாடி ஃபிரேம் செய்யப்பட்ட சாமி படங்களை வைத்து அலங்கரித்து வழிபடுவதே நம் வழக்கம். இவற்றை அளவுக்கு ஏற்றாற்போல ஒரு ஒழுங்கோடு அமைத்துக்கொள்வது சிறந்தது.

4. நம் மனதிற்கு விருப்பமான, குடும்பத்திற்கு மிக அவசியமான சாமி படங்களை மட்டும் அளவோடு வைத்துக்கொள்வதே நல்லது. செல்லுமிடமெல்லாம் கண்ணில் படும் படங்களையெல்லாம் வாங்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும்.

5. சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க, துடைக்கும் தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்துத் துடைக்கலாம்.

6. பூஜையறையில் தூசி, ஒட்டடை எதுவும் படியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

7. முதல் நாள் சூட்டிய வாடிய பூக்களை தினமும் அகற்றி விட வேண்டும். ஒருவேளை புதிய பூக்களை வைக்க முடியாவிட்டாலும் வாடிய பூக்களை படங்களில் இருந்து நீக்கி விடுங்கள்.

8. பூஜை அறையில் உள்ள செம்பு, பித்தளை, வெள்ளியால் ஆன விக்ரகங்கள், காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, விளக்கு வைக்கும் தட்டு, தீபாராதனை தட்டு, மணி, பஞ்ச பாத்திரம், உத்தரணி உள்ளிட்ட பித்தளைப் பொருள்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்யலாம். புளி, விபூதி அல்லது பீதாம்பரி கொண்டு அழுந்தத் தேய்த்து சுத்தம் செய்வதால் அவை கறுத்துப் போகாமல் பாதுகாக்க முடியும்.

9. வெந்நீரில் ஊறவைத்த பின்னர் செம்பு பாத்திரத்தில் புளி, உப்பை வைத்து ஸ்கிரப் செய்யும்போது புதிய தோற்றத்தை கொடுக்கும். வெள்ளிப் பொருட்களை விபூதி கொண்டு நன்கு அழுத்தி தேய்க்கும்போது புதியதுபோல் பளபளப்பாகும். அதுவே செம்பு சிலைகள் என்றால் உப்புடன் வினிகரை சம அளவு கலந்து நன்றாக அழுந்தத் துடைத்து கழுவும்போது பளபளப்பாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் டியின் பங்கு தெரியுமா?
Some simple tips for puja room maintenance

10. பூஜையறைக்கென தனியாக ஒரு பெயிண்ட் பிரஷ், ஒரு சிறிய டூத் பிரஷ் மற்றும் துடைக்கும் துணிகளை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பதற்குப் பயன்படுத்தும் பிரஷ்ஷைக் கொண்டு சாமி படங்கள் மற்றும் இதர பொருள்களில் சேரும் தூசுகள் மற்றும் ஒட்டடையை எளிதில் நீக்கி விடலாம். அதேபோல, வாடிய பூக்கள், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி போன்றவற்றிலிருந்து விழும் சாம்பல் போன்றவற்றை எளிதில் அகற்றவும் இந்த பிரஷ் உதவும்.

11. பூஜைக்குப் பிறகு திரைச்சீலைகொண்டு மூடி வைப்பதன் மூலம் மேலும் தூசி படியாமல் பாதுகாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com