அமானுஷ்ய ஆச்சரியங்கள் நிறைந்த சொரிமுத்து அய்யனார் கோயில்!

சொரிமுத்து அய்யனார்
சொரிமுத்து அய்யனார்
Published on

டர்ந்த வனம் சூழ்ந்த பொதிகை மலையில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில். சிவபெருமானின் திருமணத்தின்போது, உலகினை சமன் செய்வதற்காகப் பொதிகை மலைக்கு வந்தார் அகத்தியர் மாமுனிவர். எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி, தாமிரபரணியில் நீராடி நித்திரை செய்வது அவரது வழக்கம். ஒருநாள் அப்படி அவர் நித்திரை செய்தபோது அவருக்கு ஒரு ஜோதி தெரிந்தது. அதை ஆராய்ந்தபோது, அது பிரம்ம ரஷஷி, பேச்சி முதலிய மூர்த்திகளுடன் கூடிய சாஸ்தா என்று புரிந்தது. அகத்திய மாமுனிவர் அந்தக் காட்சியைக் கண்ட நாள் ஒரு ஆடி அமாவாசை. இதனையடுத்து, ‘இந்த நாளில் தாமிரபரணியில் நீராடி, இங்கு வழிபாடு செய்பவர்களின் இன்னல்கள் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார் முனிவர். அதை ஏற்று அருளினார் பெருமான். அப்போது, வானிலிருந்து தேவர்கள் மலர்களை மழையாக சொரிந்தனர். இந்த மலர் மழையால் நனைந்ததால் இத்தல இறைவன் சொரிமுத்து அய்யனார் எனும் பெயர் பெற்றார்.

சொரிமுத்து அய்யனார் கோயில்
சொரிமுத்து அய்யனார் கோயில்

அகத்தியரால் உருவான கோயில், காலமாற்றத்தால் காணாமல் போனது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகர்கள் மாட்டு வண்டியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்த வழியாகச் சென்றர். முதலில் சென்ற மாட்டுவண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. பதறிய வண்டிக்காரர் இறங்கி வந்து பார்த்தபோது, கல்லில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது ஒரு அசரீரி, ‘இது அகத்தியர் ஞானதிருஷ்டி மூலமாக மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் அருள்பாலித்த இடம். எனவே, இங்கு ஆகம விதிப்படி பூஜை செய்ய வேண்டும்’ என்று ஒலித்தது. அதன்படி இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சாஸ்தா
சாஸ்தா

புண்ணிய நதி தாமிரபரணி கரையோரம் மரங்கள் சூழ்ந்த வனத்துக்குள் அமைந்துள்ளது இந்த ஆயலம். ஆலய வளாகத்தில் மகாலிங்கம், பூதத்தார், பிரம்ம ரஷஷி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், சொரிமுத்து அய்யனார் என ஏழு பேருக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. மேலும், விநாயகர், அகத்தியர், மேலவாசல் சங்கிலி பூதத்தார், மொட்டையன் கருப்பசாமி, பாதாள ஈஸ்வரி, கொம்பானி பெரியசாமி, கரடி மாடன், சுடலை, பேச்சியம்மாள், இருளப்பன், இருளம்மன், க்ஷேத்ரபாலன், கசமாடன், கசமாடத்தி, பொம்மக்கா, தும்மக்கா, சிவன், சக்தி, நாகக் கன்னி சுவாமிகளும் கூட்டு உறவு சாஸ்தா ஆகியோரும் இங்கு குடிகொண்டுள்ளனர். இதனைத்தான் பக்தர்கள் ‘21 கூட்டு 61 பந்தி’ என்ற முறையில் படையல் இட்டு வணங்கி வருகின்றனர்.

செருப்பு காணிக்கை
செருப்பு காணிக்கைAanmeegam

தை அமாவாசை, மாசி அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களிலும், மாதம்தோறும் அமாவாசை தினங்களிலும் பக்தர்கள் இக்கோயில் அருகேயுள்ள பாண தீர்த்த அருவியில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் பூக்குழி இறங்குவது வழக்கம். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயன் சன்னிதிகள் முன்பு மூன்று கட்டமாக இந்தப் பூக்குழி திருவிழா நடத்தப்படும். பிரம்ம ரஷஷி, பூதத்தார், பேச்சியம்மன் சன்னிதிகள் முன்பு பொங்கலிட்டும், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் சன்னிதிகள் முன்பு மாமிச உணவுகளைப் படைத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் சன்னிதிகள் முன்பு மார்பில் சங்கிலியால் அடித்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.

இந்தக் கோயிலில் அருளும் முத்துப்பட்டனுக்கு காலணிகளையே காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர். சுவரில் கட்டித் தொங்கவிடப்படும் இந்தக் காணிக்கை செருப்புகளை பக்தர்கள் யாரும் தொடுவது இல்லை. இருந்தாலும் அது தேய்ந்தும், சகதி நிறைந்த மண், முட்களுடனும் காணப்படுவது ஆச்சரியம். பட்டவராயர் அந்த செருப்புகளை அணிந்து இரவில் வேட்டைக்குச் சென்று வருகிறார் என்று இப்பகுதி மக்கள் இதுபற்றிக் கூறுகின்றனர்.

மணி முழுங்கி மரம்
மணி முழுங்கி மரம்

இதேபோன்று இந்தக் கோயிலில் மற்றொரு அதிசயம் மணி முழுங்கி மரம். குழந்தை வரம், திருமண வரம், இழந்த பொருள் மீண்டும் கிடைக்க என வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மணிகளை இங்குள்ள ஒரு மரத்தில் கட்டுகின்றனர். பலநூறு எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ள இந்த மணிகள் நாளடைவில் மரத்தின் உள்ளேயே சென்று விடுகின்றன. இதனால் இந்த மரத்தினை, ‘மணி முழுங்கி மரம்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். தற்போது மணி முழுங்கி மரத்தின் மேல் பகுதியில் இரு கண்கள், நெற்றிப் பொட்டு, தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் உருவம் தெரிவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com