

மரணத்திற்கு அதிபதி கடவுளான யமதர்மராஜாவுக்கும் ஒரு சமயம் ஒரு சிக்கல் நேர்ந்தது. தான் யாருடைய உயிரை பறிக்கவேண்டுமோ அவர்களைப் பற்றிய முழு விவரங்களை பற்றி தெளிவான கருத்துகள் இல்லாத தன் தர்மசங்கடத்தை ஸ்ரீ பிரம்மாவிடம் இவர் முறையிடுகிறார். அச்சமயம் அங்கு தோன்றும் ஸ்ரீ சிவபெருமான் சித்திரகுப்த மகாராஜாவை இப்பணிக்கு அமர்த்துகிறார்.
சித்திரகுப்தரும் வெகு சிரத்தையாக மானிடர்கள் பிறந்த காலம் முதல் இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்கிறார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளை 'ஆகாஷிக் குறிப்புகள்' என அழைப்பர்.
இவரின் ஒரு கையில் மையினை உடைய ஒரு கிண்ணமும் மறு கையில் சிறகால் ஆன எழுதுகோலும் இருக்கும். சித்ரா பௌர்ணமியன்று இவர் இந்த கணக்கை யமதர்மராஜாவிடம் சமர்ப்பிதாக ஐதீகம்.
சித்ரா பௌர்ணமியன்று, "இன்றைக்கு சித்திரகுப்தன் நம்ப கணக்கை எழுதி யமதர்மராஜாகிட்ட கொடுக்கிற நாள். இன்னிக்கு சேட்டை செய்யாம ஒழுக்கமா ஜாக்கிரதையா இருங்க. ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக்கூடாது இன்றைக்கு!" என்று வீட்டில் பெரியோர்கள் எச்சரிப்பதை சின்ன வயதிலேயே கேட்டிருக்கிறோம் நாம்.
உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து கணக்குகளையும் முறயை£க எழுதி பராமரித்து வருபவர் சித்திரகுப்தர்தான் என்பது இந்து சமய நம்பிக்கை. ஒருவருடைய இறப்புக்குப் பிறகு இந்த கணக்கு வழக்குகளை பொறுத்தே அவரவருக்கு சொர்க்கமோ நரகமோ அமையும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.
சித்ரா பௌர்ணமியன்று சித்திரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவ கணக்குகளை குறைத்து புண்ய கணக்குகளை அதிகமாக்குவார் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் சித்ரா பௌர்ணமியன்று பெருமாள், சிவன், அம்பிகை போன்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதோடு சித்திர குப்தனுக்கும் வழிபாடு செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி சித்திரகுப்தனின் பிறந்தநாள் என்று ஒரு சாராரும், அவருடைய திருமண நாள் என்று மற்றோரு சாராரும் கூறுகின்றனர்.
அன்று உப்பில்லாத விரதம் அனுசரித்து சித்திரகுப்தனை வழிபடுவார்கள். அன்று எருமைப்பாலில் செய்த பாயசம் சிறப்பான நைவேத்தியமாகும். "நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எடுத்துக் கொள்!" என்று இறைஞ்சி வழிபடுகின்றனர்.
சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோவிலே உள்ளது. அதேபோல தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்னும் பெயருடன் கோவில் அமைந்துள்ளது.
இதைத்தவிர திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோவிலில் இவருக்கு ஒரு தனி சந்நதி உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நுழைவு வாயில் அருகே உள்ள பிரகாரத்தில் இவர் ஒரு தூணில் காட்சியளிக்கிறார். சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செய்வதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.