கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

மூலவர் வழிபாடு
மூலவர் வழிபாடுhttps://lightuptemples.com

லய ஆகம விதிகளின்படி கருவறை மூலவருக்கும் எதிரில் இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக் கூடாது. ஆலய சாஸ்திரப்படி நந்தியின் நாசியில் இருந்து வெளிப்படும் மூச்சுக் காற்று மூலமாக மூலவருக்கு உயர் நிலை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த மூச்சுக் காற்று தடைபடக்கூடாது என்பதால்தான் பக்தர்கள் சன்னிதியை விட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்கிறார்கள்.

கோயில்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பு அன்று எடுத்த புது தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு ஆள்காட்டி விரல் நீக்கியே கோலம் போட வேண்டும். கோலமிடும்போது தெற்கே பார்த்து நின்று கோலமிடக் கூடாது. போடுகிற கோடு தெற்கு பக்கமாக முடியக்கூடாது. கோலம் அழகாகப் போட வேண்டும். அதுவே நல்ல சகுனம் தரும்.

கோயில்களில் விபூதி பிரசாதம் வாங்கும்போது, வலது கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலது கையின் கீழ் இடது கையை வைத்து பணிவுடன் விபூதி, குங்குமம் பிரசாதத்தை வாங்க வேண்டும். வலது கையில் வாங்கியவுடன் அந்தப் பிரசாதத்தை அப்படியே பூச வேண்டும் அல்லது ஒரு தாளில் போட்டு அதிலிருந்து எடுத்து பூச வேண்டும். ஏதோ பெயருக்கு நெற்றியில் கீற்று இழுத்து விடக் கூடாது. மீதியை கோயில் தூண்களில் கொட்டி கோயிலின் அழகைக் கெடுக்கக் கூடாது.

குங்குமம் மங்கலப் பொருட்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தலைமுடி வகிடு எடுக்கும் மத்திய இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவேதான் அங்கு பெண்கள் குங்குமம் வைத்து வருகிறார்கள். கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து எடுத்து குங்குமத்தை வைத்துக் கொள்வதன் மூலம் சக்தி பெருகும் என்று நம்பப்படுகிறது. கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோயிலுக்குப் போகக்கூடாது.

கோயில்களில் இறைவனுக்கு பூஜை செய்யும்போது மணியடித்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு பூஜை செய்யும்போது மணியை இதயத்துக்கு நேராக வைத்து அடிக்க வேண்டும். இதுவே சரியான முறையாகும். மணியில் பல்வேறு தெய்வங்கள் குடிகொண்டுள்ளன என்பது ஐதீகம். அதனால், அதை தாழ்ந்த நிலையில் வைக்கக் கூடாது. இதயத்தின் வழி கொண்டு இறைவனை வணங்கி வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உறவுகளை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
மூலவர் வழிபாடு

சிவன் கோயிலுக்குச் செல்வோர் சாமி தரிசனத்தை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவர். இப்படிச் செய்வதன் மூலம் நல்ல அமைதி கிடைக்கும். ஆனால், புராண ரீதியாக அதற்குச் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? சிவன் கோயிலில் அமராமல் வந்தால், நம்மோடு சிவகணங்களும் வந்து விடுமாம். சற்று நேரம் அமர்ந்து வந்தால் அது நம்மை விட்டு அகன்று விடுமாம்.

கோயில்களில் சுவாமிக்கு பூஜை செய்யும்போது கற்பூரம் பிரதான இடம் பிடிக்கிறது. கற்பூரத்தை பூஜையில் பயன்படுத்துவதற்குக் காரணம் இருக்கிறது. தியாகத்தின் சின்னம் கற்பூரம். பிறருக்கு ஒளிகாட்டி தன்னை அழித்துக் கொள்கிறது. சுவாமி பூஜையின்போது கற்பூரம் எரிவதைக் காணும் நாம், பிறந்தது நமக்காகவும், நம் குடும்பத்துக்காகவும் மட்டுமல்ல, பிறருக்காகவும்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதையே பின்பற்றி நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்குப் பயன்படும்படியாக வாழ வேண்டும்.

கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும். நவக்கிரகங்களை 9 முறை சுற்றுவது நல்லது. அப்படிச் சுற்றும்போது 7 முறை வலமாகவும், 2 முறை இடமாகவும் சுற்ற வேண்டும். நவக்கிரகங்களை வணங்கிய பின்னர் பிற தெய்வங்களை வணங்கக் கூடாது. எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.

எல்லாமே நமக்கு இறைவனால்தான் தரப்படுகிறது. அவன் தந்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கிறோம். கோயில் உண்டியலில் காணிக்கையாக காசு போடுகிறோம்.

கோயில் நடை சாத்தி இருக்கும்போதும், உத்ஸவர் உலா வந்திருக்கும்போதும், சுவாமி முன் திரை போடப்பட்டிருக்கும்போதும் கோயிலுக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்யக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com